தமிழகத்தில் ‘இண்டியா’ முழு வெற்றிபெற ஓயாது உழைக்க வேண்டும் - திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ‘இண்டியா’ கூட்டணி முழுமையாக வெற்றி பெற ஒவ்வொரு தொண்டரும் ஓயாது உழைக்க வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கட்சி தொண்டர் களுக்கு அவர் எழுதிய மடல்: திருச்சியில் கடந்த 26-ம் தேதி நடைபெற்ற டெல்டா மண்டலத்து வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிக் கூட்டத்தில், 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ‘இண்டியா’ கூட்டணியின் வெற்றிக்குக் கட்டியம் கூறிடும் வகையில் திமுகவினர் திரண்டிருந்தனர்.

திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பலன் தந்து வருகிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு திட்டமாவது அவர்களின் மாதச் செலவைமிச்சப்படுத்தும் வகையில் இருக்கிறது.

வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பத்தால் தேர்தல் நேரத்தில் நேரடிக் களத்தில் செலுத்த வேண்டிய அக்கறையைப் போல, சமூக வலைதளத்திலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நம் அரசியல் எதிரிகள் பொய்களை மட்டுமே பரப்பக் கூடியவர்கள். அவர்களின் அவதூறுகளும் வதந்திகளும் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் திட்டமிட்டுப் பரப்பப்படு கின்றன.

பொய்கள் புற்றீசல் போன்றவை.அவை வேகமாகப் பரவினாலும் அவற்றுக்கு ஆயுள் குறைவு. உண்மைக்கு யானையின் பலம் உண்டு. அதற்குத் தனது தும்பிக்கையால் அமைதியாக ஆசீர்வதிக்கவும் தெரியும், ஆளையே வளைத்து தூக்கி வீசவும் தெரியும்.

கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்ற கருணாநிதி, கடந்த2018 ஆக.7-ம் தேதி இயற்கை நம்மிடம் பிரிக்கும்வரை திமுகவின்தலைவராக இருந்த பெருமைக்குரியவர். அவர் அளித்தபயிற்சிகளைப் பெற்று, கழகத்தின் தலைமைப்பொறுப்பை சுமந்திருக்கிறேன்.

மத்தியில் ஆளும் ஜனநாயக விரோத, மதவாத பாஜக ஆட்சிநீடித்தால் தமிழகத்துக்கு மட்டுமல்ல; இந்தியாவில் உள்ள பல மாநிலங்களும் தங்கள் உரிமையை இழந்துவிடும் பேராபத்து உள்ளது என்பதை எடுத்துரைத்தேன்.

திமுக அரசின் சாதனைகள் தொடர, மாநில உரிமை மீட்கப்பட, நாட்டின் பன்முகத்தன்மை சிதையாமல் பாதுகாக்க நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் நம் பணி முழுமையாகவும் முனைப்புடனும் இருக்க வேண்டும்.

இந்தியாவை காக்க, ‘இண்டியா’உருவாகியிருக்கிறது. இது உண்மையான - ஒன்றுபட்ட ‘இண்டியா’.நாடாளுமன்றத் தேர்தலில், பாசிசசக்திகளை வீழ்த்தி, மகத்தானவெற்றி காணப் போகிற, மாநிலங்களுக்கு அதிகாரமளிக்கக்கூடிய ‘இண்டியா’. இவற்றை மனதில்கொண்டு ‘இண்டியா’ கூட்டணி இந்தியா முழுவதும் வெற்றி பெற இணைந்திருக்கிறோம்.

தமிழகத்தில் ‘இண்டியா’ முழுமையாக வெற்றி பெற ஒவ்வொரு தொண்டரும் ஓயாது உழைத்திட வேண்டும். அடுத்தகட்டமாக தென்மாவட்டங்களுக்கான பயிற்சிக் களம் ராமநாதபுரத்தில் அமைய உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE