ராமேசுவரத்தில் இருந்து அண்ணாமலை நடைபயணம் - அமித் ஷா இன்று தொடங்கி வைக்கிறார்

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்/ மதுரை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயண தொடக்க விழா, ராமேசுவரத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. 2 நாள் பயணமாக தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த விழாவில் கலந்துகொண்டு, நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’என்ற பெயரில் ஊழலுக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கும் வகையிலும் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். இதன் தொடக்கவிழா பொதுக் கூட்டம் ராமேசுவரத்தில் இன்று நடைபெறுகிறது. இதில்கலந்துகொண்டு, அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் மாலை 4 மணிக்கு மதுரை வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் முகாம் இறங்குதளத்துக்கு மாலை 4.50 மணி அளவில் வந்தடைகிறார். ராமேசுவரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சிறிது நேரஓய்வுக்கு பிறகு, மாலை 5.45மணிக்கு ராமநாதபுரம் பேருந்துநிலையம் அருகே வாஜ்பாய் திடலில் நடைபெறும் அண்ணாமலை நடைபயண தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பின்னர், கட்சியின் முக்கிய பிரதிநிதிகளை அமித் ஷா சந்திக்கிறார்.

இன்று இரவு ராமேசுவரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்குகிறார். நாளையும் (ஜூலை 29) பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்கிறார்.

அதிகாலை 5.40 மணிக்கு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில்நடைபெறும் ஸ்படிகலிங்க பூஜையில் அமித் ஷா கலந்துகொண்டு தரிசனம் செய்கிறார்.

காலை 11 மணிக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று நூலை அமித் ஷா வெளியிடுகிறார்.

‘அப்துல் கலாம் - நினைவுகளுக்கு மரணமில்லை’ எனும் இந்த நூலை கலாமின் அண்ணன் மகள் டாக்டர் ஏபிஜேஎம் நசீமா மரைக்காயர், விண்வெளி விஞ்ஞானி டாக்டர் ஒய்.எஸ்.ராஜன்ஆகியோர் எழுதியுள்ளனர்.

தொடர்ந்து, ராமேசுவரம் பேக்கரும்புக்கு செல்லும் அமித்ஷா, அங்குள்ள கலாம் தேசிய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர், ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவில் உள்ள கலாம்இல்லத்தில் மதிய உணவு அருந்துகிறார்.

பகல் 12.45 மணிக்கு பாம்பன்குந்துக்காலில் உள்ள விவேகானந்தர் இல்லத்தை பார்வையிடுகிறார். பின்னர், தனது பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லிதிரும்புகிறார்.

அண்ணாமலையின் பாதயாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்குமாறு அதிமுக, பாமக, தேமுதிகஉள்ளிட்ட கட்சிகளுக்கு பாஜக சார்பில் ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இபிஎஸ், அன்புமணி பங்கேற்கவில்லை: அண்ணாமலையின் நடைபயண தொடக்க விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்கவில்லை. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பார் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

பாமக தலைவர் அன்புமணி தலைமையில் இன்று என்எல்சி முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நடைபயண தொடக்க விழாவில் அன்புமணியும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE