8-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அப்துல் கலாம் நினைவிடத்தில் பிரார்த்தனை

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 8-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 8-வது ஆண்டு நினைவு நாள் நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. ராமேசுவரத்தில் உள்ள பேக்கரும்பு அப்துல் கலாம் நினைவிடத்தில் அவரது அண்ணன் மகன் ஜெயினுலாபுதின், மகள் நசிமா மரைக்காயர், மருமகன் நிஜாம், பேரன்கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம், ஆவுல் மீரா மற்றும் குடும்பத்தினர் சிறப்புப் பிரார்த்தனை செய்தனர். இதில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

அரசு சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் சரக டிஐஜி துரை, வட்டாட்சியர் அப்துல் ஜபார், ராமேசுவரம் நகராட்சித் தலைவர் நாசர்கான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

கலாமின் முன்னாள் உதவியாளர் பொன்ராஜ், விவேகானந்தா குடில் சுவாமி பிரம்மானந்தா, வேலூர் இப்ராஹிம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள், மாணவ, மாணவிகள், ராமேசுவரம் தீவு மக்கள், சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் கலாமின் அண்ணன் பேரன் ஷேக் தாவூத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தில் உள் கட்டமைப்புகளைத் தவிர மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

குறிப்பாக அறிவுசார் மையம், டிஜிட்டல் நூலகம், ஆராய்ச்சியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்ட தொழில்நுட்ப கண்காட்சியகம், அறிவியல் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

புதிதாக கட்டப்படும் பாம்பன் ரயில் பாலத்துக்கு அப்துல் கலாம் பெயரைச் சூட்ட வேண்டும். ராமேசுவரத்திலிருந்து இயக்கப்படும் விரைவு ரயில் ஒன்றுக்கு அவரது பெயர் சூட்ட வேண்டும். கலாம் தேசிய நினைவிடம் தற்போது பொதுமக்கள் பார்வைக்கு காலை 9 முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படுகிறது. இதை காலை 8 முதல் மாலை 6 மணி வரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE