அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மேலும் 2,504 ஊராட்சிகளுக்கு விரிவாக்கம் - முதல்வர் ஸ்டாலின் தகவல்

By செய்திப்பிரிவு

திருச்சி: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டமானது, மேலும் 2,504 ஊராட்சிகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது என திருச்சியில் வேளாண் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 3 நாட்கள் நடைபெறும் வேளாண் சங்கமம்-2023 என்ற கண்காட்சி தொடக்க விழா, திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வரவேற்றார். வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசியது: மற்ற துறைகளைப்போல வேளாண் துறையை நினைத்த உடனே வளர்த்துவிட முடியாது. மற்ற துறைகளை வளர்க்க நிதிவளம் இருந்தால்போதும். ஆனால் வேளாண் துறையை வளர்க்க நிதி மட்டுமல்ல, நீர்வளமும், தேவையான இடுபொருட்களும் காலத்தில் கிடைக்க வேண்டும்.

அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளில் உரிய காலத்தில் பருவ மழை பெய்ததுடன், விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களையும் வேளாண் துறை வழங்கியதால், இந்தத் துறை சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 1.50 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக நிகழாண்டில் மேலும் 50 ஆயிரம் பேருக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இதுவரை 5,201 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டமானது, மேலும் 2,504 ஊராட்சிகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.

குறுவை தொகுப்பு நீட்டிப்பு: குறுவை சாகுபடிக்கான சிறப்பு தொகுப்பு திட்டத்தை பெற ஜூலை 31-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இந்தத் திட்டத்துக்கான காலக்கெடு ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து, 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணை மற்றும் பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய 3 விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு ஆகியவற்றை முதல்வர் வழங்கினார்.

நிகழ்வில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, மேயர் மு.அன்பழகன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தி துறையின் முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ், வேளாண்மை உற்பத்தி ஆணையர் சி.சமயமூர்த்தி, வேளாண்மைத் துறை ஆணையர் இல.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் உள்ளிட்ட பலர் கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE