தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை, பறிமுதல்: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்பால், சாலைகளில் நடந்து செல்லும் பாதசாரிகள் சில நேரங்களில் விபத்துக்களில் சிக்குவதும், அதனால் உயிர்சேதமும் ஏற்படுகிறது.

சென்னையில் பெரும்பாலான இடங்களில் நடைபாதைகளை வாகன ஓட்டிகள் தான் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இது போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு காரணமாகவும் அமைந்துள்ளது.சாலையோர வியாபாரிகள் கூட பாதசாரிகளுக்கு 2 அடி பாதையையாவது விட்டு வைத்திருப்பார்கள். ஆனால், வாகன ஓட்டிகளோ நடைபாதையை முழுவதுமாக ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

அந்த வகையில் சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் பாதசாரிகளுக்கு, குறிப்பாக முதியோருக்கு பெரும் தலை வலியாக உள்ளது. தியாகராய நகர், பெரம்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை உள்ளிட்ட சென்னையில் பெரும்பாலான இடங்களில் வாகன ஓட்டிகள் நடை பாதைகளை ஆக்கிரமித்து தங்களது வாகனங்களை தன்னிச்சையாக நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

சாலையோரங்கள் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முக்கிய சாலை பகுதிகளில் சென்னை மாநகராட்சி சார்பில் பார்க்கிங் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் பாதசாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன்

இது தொடர்பாக இந்து தமிழ் திசை நாளிதழின் சிறப்பு பக்கத்தில் கடந்த 23-ம் தேதி செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து, தன்னிச்சையாக நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தியுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டுமல்லாமல், தன்னிச்சையாக நிறுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், கேட்பாரற்று நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத வாகனங்களும் அகற்றி நடவடிக்கை மேற்கொள்வதோடு, எளிதான போக்குவரத்துக்கு வழிவகை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE