சென்னை: காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளில் இருந்து உலகைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஜி 20, ஐ.நா. காலநிலை மாநாட்டில் வலியுறுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்தில், "உலகின் அனைத்து மக்களையும், எதிர்வரும் பலப்பல தலைமுறையினரையும் பாதிக்கக் கூடிய உலகின் தலையாய சிக்கலான காலநிலை மாற்றத்தினை கட்டுப்படுத்தவும் எதிர்கொள்ள உங்களின் ஆதரவைக் கோரி இக்கடிதத்தை எழுதுகிறேன். உலக மக்கள் அனைவரும் மாபெரும் பேராபத்தில் சிக்கியுள்ளனர். புவிவெப்பம் அதிகரிப்பதால் ஒட்டுமொத்த மனித குலமும் அழிவின் விளிம்பில் நிற்கிறது!
காலநிலை மாற்றம்தான் இன்றைய மற்றும் எதிர்கால தலைமுறையினர் முன்புள்ள மாபெரும் சவால் ஆகும். அதுமட்டுமல்லாமல், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் கடைசி வாய்ப்பு இன்றைய தலைமுறையினருக்கு மட்டுமே உள்ளது. இப்போதுள்ள குழந்தைகளுக்கோ, அவர்களின் குழந்தைகளுக்கோ அந்த வாய்ப்பு இல்லை. உலகைக் காப்பதற்கான இந்தக் கடைசி வாய்ப்பை நாம் தவறவிடக் கூடாது.
நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை (Fossil fuels) பயன்படுத்துவதாலும், காடுகளை அழிப்பதாலும் கரியமிலவாயு உள்ளிட்ட வெப்பத்தை தக்கவைக்கும் பசுங்குடில் வாயுக்களின் (Greenhouse gases) வளிமண்டல அடர்த்தி வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த 150 ஆண்டுகளில் இது 277 ppm அளவில் இருந்து 421 ppm ஆக அதிகரித்து விட்டது! (1 ppm என்பது பத்து லட்சத்தில் 1 பகுதி). இதனால், புவியின் மேற்பரப்பு வெப்பநிலை கடந்த 150 ஆண்டுகளில் 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய பேராபத்து ஆகும்.
காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அளவுக்கதிக மழை, பெரும் வெள்ளம், கடும் சூறாவளி, வரலாறு காணாத வறட்சி, விவசாய பாதிப்பு, நீர் பற்றாக்குறை, உடல்நலக் கேடுகள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றன. இயற்கை பேரிடர்கள் இனிவரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமாகும்.
அண்மையில் நிகழ்ந்த புதுதில்லி வெள்ளம், வடமாநில பெருமழை பாதிப்புகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்க காட்டுத்தீ, வரலாறு காணாத வெப்ப அதிகரிப்பு உள்ளிட்ட அனைத்து பேரிடர்களுக்கும் காலநிலை மாற்றமே முதன்மையான காரணமாகும். அதிகரித்துக் கொண்டே செல்லும் வெப்பத்தை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். அதுதான் உலக அழிவை தடுப்பதற்கான அதிகபட்ச அளவாகும். அதற்கு இன்னும் 7 ஆண்டுகள் மட்டுமே கால அவகாசம் உள்ளது.
புவிவெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்துவதற்கு உலகளவில் வெளியாகும் கரிம உமிழ்வை 2030-க்குள் 50% குறைக்க வேண்டும். 2050-க்குள் நிகர பூஜ்யம் (Net Zero) ஆக்க வேண்டும். அதற்காக, நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள் (fossil fuels) பயன்பாட்டிற்கு மிக விரைவில் முடிவுகட்ட வேண்டும். காடுகளும், பசுமைப்பகுதிகளும், இயற்கை வளங்களும் உடனடியாக பாதுகாக்கப்பட்டு, அவற்றின் பரப்பு அதிகமாக்கப்பட வேண்டும்.
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாமல் பாதுகாத்துக்கொள்ள தகவமைப்பு (Adaptation) நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும். அதையும் மீறி பாதிக்கப்படுவோரின் இழப்பையும் சேதத்தையும் (Loss and Damage) ஈடு செய்ய வேண்டும். காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் அதிகம் பாதிக்கப்படப்போகும் வளரும் நாடுகளின் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை புவிவெப்பம் அதிகரிப்பதற்கு காரணமாக இருந்த வளர்ந்த நாடுகள் அளிக்க வேண்டும்.
மேற்கண்ட இலக்குகளை உள்ளடக்கிய பாரிஸ் காலநிலை உடன்படிக்கை (Paris Climate Agreement) 2015ம் ஆண்டில் ஏற்கப்பட்டது. இந்தியா உள்ளிட்ட 195 நாடுகள் கையொப்பம் இட்டுள்ளன. ஆனால், எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில் எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றம் இல்லை. இவ்வாறான சூழலில், அடுத்த ஏழாண்டுகளில் தலைகீழ் மாற்றத்தை சாதித்தால் மட்டுமே உலகப் பேரழிவை தடுத்து சமாளிக்க முடியும் என்று ஐநா காலநிலை மாற்ற அறிவியலாளர்கள் அமைப்பு IPCC தெளிவாக எச்சரித்துள்ளது.
இத்தகைய நெருக்கடியான சூழலில், இந்தியாவில் G20 நாடுகள் மாநாடும், ஐக்கிய அரபு அமீரகத்தில் COP 28 ஐநா காலநிலை மாநாடும் கூடுகிறது. காலநிலை மாற்றம் தொடர்பான முடிவுகளை மேற்கொள்வதில் இந்த மாநாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.
G20 நாடுகள் மாநாடு: உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கு வகிப்பவை G20 நாடுகள் ஆகும். உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80%, பன்னாட்டு வர்த்தகத்தில் 75%, உலக மக்கள் தொகையில் 60% G20 நாடுகளின் பங்காகும். புவிவெப்ப அதிகரிப்புக்கு காரணமான கரிம உமிழ்வில் 80% அளவு இந்த 20 நாடுகளில் இருந்துதான் வெளிவிடப்படுகின்றன. G20 நாடுகள் கூட்டமைப்புக்கு 2023ஆம் ஆண்டில் இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இந்த மாநாடு செப்டம்பர் மாதம் 9 - 10 ஆகிய நாட்களில் புதுதில்லியில் நடைபெறுகிறது.
COP 28 - ஐநா காலநிலை மாநாடு: புவிவெப்பம் அதிகரிப்பதை உலகின் எந்தவொரு நாடும் தனித்து தடுக்க முடியாது. உலகின் எல்லா நாடுகளும் ஓரணியில் திரளவேண்டும் என்கிற நோக்கில் 1992 ரியோ புவி உச்சிமாநாட்டில் (Rio de Janeiro Earth Summit 1992) ஐநா காலநிலை மாற்ற பணித்திட்டப் பேரவை (United Nations Framework Convention on Climate Change - UNFCCC) உருவாக்கப்பட்டது. இதன் ஆண்டு மாநாடுகள் (Conference of the Parties - COP) ஐநா அவையால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகின்றன. இதன் 28ஆவது மாநாடு (COP 28) 2023 நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் நடைபெற உள்ளது.
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தவும், எதிர்கொள்ளவுமான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் G20 மற்றும் COP 28 மாநாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பசுமைத் தாயகம் காலநிலை பிரச்சாரம்: ஐக்கிய நாடுகளின் காலநிலை அமைப்பால் அதிகாரப்பூர்வ பங்கேற்பாளராக (UNFCCC Observer Organization) பாமக நிறுவனர் ராமதாஸால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய நாடுகள் அவையிலும் சிறப்பு ஆலோசனை அமைப்பாக (NGO in Special Consultative Status with the United Nations ECOSOC) பசுமைத் தாயகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜி 20 மற்றும் COP 28 மாநாடுகளில் பின்வரும் கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும் என பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் முன்வைக்கிறோம்.
அனைத்து புதைபடிம எரிபொருட்களையும் படிப்படியாக கைவிட வேண்டும்.(Phase-out All Fossil Fuels), நீதியான ஆற்றல் மாற்றத்தை உறுதி செய்ய வேண்டும் (Ensure a Just Energy Transition), காலநிலை நீதியை உறுதி செய்ய வேண்டும் (Ensure Climate Justice), காலநிலை கூட்டுச்செயல்பாட்டு ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் (Make a Climate Solidarity Pact) இதனை முன்வைத்து பசுமைத் தாயகம் அமைப்பு 10 லட்சம் கையெழுத்துகளை திரட்டும் பரப்புரையை மேற்கொண்டுள்ளது.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்? - காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழகத்தின் பங்களிப்பு முக்கியமானது. மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிட்டால், உலகின் இருபதாவது பெரிய நாடாக அடையாளம் காணப்படும் தகுதிவாய்ந்தது தமிழகம். பிரான்ஸ், இங்கிலாந்து, தாய்லாந்து, இத்தாலி, தென்கொரியா, ஸ்பெயின், கனடா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பலநாடுகளின் மக்கள் தொகை அளவை விட, தமிழகத்தின் மக்கள் தொகை அதிகம்.
எதிர்கால புவிவெப்பமடைதலுக்கு காரணமாகக்கூடிய வளர்ச்சித் திட்டங்கள் இனி வளரும் நாடுகளிலேயே அதிகம் நடக்க வாய்ப்புள்ளதால், தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிப் போக்கு காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் உலகளவிய இலக்குகள் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். அதைவிட முக்கியமாக, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக தமிழகம் இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் கவலைக்குரியதும் ஆகும்.
எனவே, தமிழகம் அளவிலும், இந்திய அளவிலும், உலக அளவிலும் காலநிலை மாற்றம் தொடர்பான அறிவியல்பூர்வமான தீர்வுகளை போர்க்கால வேகத்தில் செயல்படுத்துவதற்கு நீங்கள் குரல்கொடுக்க வேண்டும். மேலும், புவிவெப்பமயமாதலுக்கு காரணமான கரிம உமிழ்வை குறைக்கவும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ளவும் தேவைப்படும் நடவடிக்கைகளை, உங்கள் அளவிலும், உங்கள் குடும்பத்தினர் அளவிலும், உங்களது பதவி அல்லது பணி சார்ந்தும், உங்களது நிறுவனம் அல்லது அமைப்பு சார்ந்தும், நீங்கள் வசிக்கும் பகுதி சார்ந்தும் மேற்கொள்ள நீங்கள் முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.
"ஒரு காட்டில் மிகப்பெரிய காட்டுத்தீ ஏற்பட்டது. அனைத்து மிருகங்களும், பறவைகளும் காட்டை விட்டு வெளியேறி விட்டன. ஒரேயொரு சிட்டுக்குருவி மட்டும் அருகில் இருந்த ஓடையில், தன் அலகால் நீரெடுத்து வந்து காட்டுத்தீயின் மீது ஊற்றியது. அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மற்ற உயிரினங்கள், அந்தக் காட்டுத்தீயின் முன் நீ சிறியவள். உன்னால் ஏதும் செய்ய முடியாது என்றன.
அந்தச் சிட்டுக்குருவி அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து நீரெடுத்து வந்து ஊற்றியது. பின் அனைத்து விலங்குகளும், பறவைகளும் அந்தச் சிட்டை முட்டாள் என்று கேலி செய்ய ஆரம்பித்துவிட்டன. அதற்கு அந்தச் சிட்டு, 'நம் வாழ்விடத்தைச் சரி செய்ய அதிகபட்சமாக என்னால் முடிந்த ஒன்றை நான் செய்கிறேன்' என்று கூறிவிட்டு தன் பணியைத் தொடர்ந்தது. நாமும் அது போன்ற ஒரு சிட்டுக்குருவி தான்" - என்றார் நோபல் பரிசுபெற்ற கென்யா நாட்டு சுற்றுச்சூழல் போராளி வங்காரி மாத்தாய்
தனிப்பட்ட முறையிலும், மற்றவர்களுடன் இணைந்தும் நாம் ஒவ்வொருவரும் காலநிலை மாற்றத்தை தடுக்கவும் எதிர்கொள்ளவும் நம்மால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என நான் அழைப்பு விடுக்கிறேன். அதற்கான சில வழிமுறைகளை கீழே அளித்துள்ளேன்:
G20 மற்றும் COP28 மாநாடுகளில் உறுதியான நடவடிக்கைகளை கோருங்கள். இதனை வலியுறுத்தும் பசுமைத் தாயகத்தின் ‘G20 & COP28: காலநிலை நடவடிக்கை கோரி பத்துலட்சம் கையெழுத்து இயக்கம் (One Million Signatures CAMPAIGN for CLIMATE ACTION) பிரச்சாரத்துக்கு உங்களது ஆதரவை அளியுங்கள். காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை பரவலாக்குங்கள்.
நீங்கள் சார்ந்த நிறுவனம் அல்லது அமைப்பில் காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடத்த பசுமைத் தாயகம் அமைப்பினரை அழையுங்கள். நீங்கள் சார்ந்த நிறுவனம் அல்லது அமைப்பின் சார்பில் காலநிலை செயல்திட்டம் (Climate Action Plan) ஒன்றினை உருவாக்கி படிப்படியாக செயல்படுத்த முன்வாருங்கள் (அத்தகைய காலநிலை செயல்திட்டத்தை உருவாக்க பசுமைத் தாயகம் அமைப்பை அணுகுங்கள்)
நீங்கள் வசிக்கும் கிராமம், வார்டு, நகருக்கான காலநிலை செயல்திட்டம் (Local Climate Action Plan) ஒன்றினை உருவாக்கி படிப்படியாக செயல்படுத்த அழுத்தம் கொடுங்கள் (அத்தகைய உள்ளூர் காலநிலை செயல்திட்டத்தை உருவாக்க பசுமைத் தாயகம் அமைப்பை அணுகுங்கள்). தனிப்பட்ட முறையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைக்கு படிப்படியாக மாற முயலுங்கள். நீங்கள் வசிக்கும் பகுதியில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க முன்வாருங்கள். உங்களது பிறந்த நாள், திருமண நாள், குழந்தைகளின் பிறந்த நாளில் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பசுமைத் தாயகம் அமைப்பின் பிரச்சாரத்தில் சேருங்கள். www.bit.ly/ptclimateaction என்று அவர் கூறியுள்ளார்.
இதுபோன்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், புகழ் பெற்ற மனிதர்கள் ஆகியோருக்கும் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago