சென்னை: விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நிரந்தரமான முடிவை எடுத்த பிறகு தான் என்எல்சி நிர்வாகம் நில எடுப்பில் இறங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்.எல்.சி. நிறுவனம் தனது 2-ம் சுரங்க விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல், உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 2021ம் ஆண்டு மே மாதம் ஆட்சியில் இருந்தவரை விவசாயிகளின் நியாயமான கோரிக்கையினை என்.எல்.சி. ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, மக்கள் விரோத திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு விவசாயிகளையும், அப்பகுதி மக்களையும் இந்த அரசு கைவிட்டு விட்டு, என்.எல்.சி-யின் நில எடுப்புக்கு காவலர்களின் உதவியுடன் துணை நிற்கிறது.
விவசாயிகளுடைய கோரிக்கை என்னவென்றால், மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்வு சட்டப்படி போதிய சம அளவு இழப்பீடு வழங்குதல். வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் தொகை வழங்குதல். என்.எல்.சி. நிறுவன நில எடுப்புப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் காலகாலமாக வேலை செய்து வரும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து என்.எல்.சி. நிறுவனம் விரைவில் முடிவினை அறிவிக்கக் கோருதல்.
» ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு டி-சர்ட் அணிந்தவரிடம் பாஸ்போர்ட் பறிமுதல்: திரும்ப வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு
» வாணியம்பாடி அருகே கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு
ஏற்கெனவே என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம், வீடுகளைக் கொடுத்து இடம் பெயர்ந்து சென்றவர்களுக்கு, என்.எல்.சி. நிறுவனம் இதுவரை எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றித் தரவில்லை. அந்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும். 1989-க்கு பிறகு நிலம் கொடுத்தவர்களுடைய குடும்பங்களைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கவில்லை. எனவே, அப்போது முதல் இன்று வரை நிலம் கொடுத்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும்.
நில எடுப்புப் பகுதியில் உள்ள மக்களுக்கு சி.எஸ்.ஆர். நிதி என்று சொல்லப்படுகிற சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து, எவ்வித வளர்ச்சித் திட்டங்களையோ, நல உதவித் திட்டங்களையோ செய்து தரவில்லை. எனவே, சி.எஸ்.ஆர். நிதி முழுமையாகவோ அல்லது பெரும் பகுதியோ கடலூர் மாவட்டத்துக்கு செலவிடப்பட வேண்டும் என்பது உட்பட பல நியாயமான கோரிக்கைகளை இப்பகுதி மக்கள் என்.எல்.சி. நிறுவனத்திடம் வைத்துள்ளனர்.
ஆனால், இது குறித்து எந்தவிதமான நியாயமான பதிலும் அளிக்கப்படாத நிலையில் என்.எல்.சி. நிறுவனம் நில எடுப்புப் பகுதியில் உள்ள விவசாயிகளுடைய நம்பிக்கையை இழந்திருக்கிறது. என்.எல்.சி. நிறுவனத்தின் மீது கடுமையான கோபத்தில் விவசாயிகள் இருக்கிறார்கள். இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள திமுக அமைச்சர்கள் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, விவசாயிகளை, திமுக விவசாயிகள் மற்றும் திமுக அல்லாத விவசாயிகள் என்று இரண்டாகப் பிரித்து, திமுக அல்லாத விவசாயிகளை பழி வாங்குவதுக்கு தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர் என்று செய்திகள் தெரிய வருகிறது.
கடந்த மே மாதம் 2-ம் தேதி அன்று, அப்போதைய தலைமைச் செயலாளர் தலைமையில், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் என்.எல்.சி. நிர்வாகத்தினர் கூட்டம் சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், புவனகிரி தொகுதியின் கழக சட்டமன்ற உறுப்பினர் ஆ. அருண்மொழிதேவன் கலந்து கொண்டு, என்.எல்.சி. நிர்வாகம் அப்பகுதி மக்களின் கருத்தை கேட்டுத்தான் நில எடுப்பு செய்யப்பட வேண்டும் என்று உறுதிபட எடுத்துரைத்தார்.
சட்டமன்ற உறுப்பினரின் கடுமையான எதிர்ப்பை ஏற்றுக்கொண்ட அப்போதைய தலைமைச் செயலாளர், விரைவில் இதேபோல் மற்றொரு பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெறும் என்றும், அதுவரை எந்தவிதமான நில எடுப்புப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் என்.எல்.சி. நிர்வாகத்தை பணித்தார். ஆனால், தலைமைச் செயலாளர் மாறியவுடன் என்.எல்.சி. நிர்வாகம் தன்னிச்சையாக இன்று நில எடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு இந்த திமுக அரசு துணை நின்றுள்ளது.
ஏற்கெனவே, கடந்த 10.3.2023 அன்று என்.எல்.சி. நிர்வாகம் நில எடுப்புப் பணிகளில் ஈடுபட்டபோது, கழக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் உட்பட நூற்றுக்கணக்கான கழகத் தொண்டர்கள் என்.எல்.சி-யின் நில எடுப்பு நடவடிக்கையினை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்து, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை குறித்த என்.எல்.சி. நிறுவனத்துடன் விவசாயிகளின் பேச்சுவார்த்தை முழுமையடையாத நிலையில், புவனகிரி தொகுதியில், வளையமாதேவி பகுதியில் கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த நேற்று (26.7.2023) காலை திடீரென்று 1000-க்கும் மேற்பட்ட காவலர்களின் துணையுடன் என்.எல்.சி. நிறுவனம், நெல் பயிரிட்ட நிலத்தில் இராட்சத இயந்திரங்களை இறக்கி வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் விவசாயிகள் விரோதப் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.
‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று கூறிய வள்ளலார் வாழ்ந்த மண்ணில் விளைந்து நிற்கும் நெற்பயிர்களை அழிப்பதற்கு இந்த திமுக அரசுக்கு எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை. கடலூர் மாவட்டத்தில், நில எடுப்பு என்ற பெயரில் விவசாயிகளுடைய நியாயமான கோரிக்கைகளை செவி கொடுத்து கேட்காமல், மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு திட்டங்களை நிறைவேற்றாமல், தற்போது விளை நிலங்களில் உள்ள நெற்பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டுகின்ற என்.எல்.சி. நிறுவனத்தின் போக்கு கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் மக்களாட்சி நடக்கிறதா? அல்லது சர்வாதிகாரி ஆட்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான காவல் துறையினர் துணையுடன் மக்களை முடக்கி, அவர்களை மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கி, விவசாயிகளையும், விவசாயத்தையும் அழிக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தின் செயலுக்கு துணை போகின்ற திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தற்போதைய முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, புவனகிரி தொகுதிக்குட்பட்ட 37 கிராமங்களில் சுமார் 13,500 ஏக்கர் நிலங்களை என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளினால் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து 3.1.2019 அன்று சட்டப்பேரவை விதி எண்.55-ன் கீழ் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். தற்போது முதல்வராக ஆனவுடன், காவல் துறையின் உதவியுடன் என்.எல்.சி. நிர்வாகத்துக்கு நிலங்களை கையகப்படுத்துகின்றனர். ஸ்டாலின் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, தற்போது திமுக அரசின் முதல்வர் ஆனவுடன் ஒரு நிலைப்பாடு. இதுதான் திராவிட மாடல் அரசு.
விவசாயிகளின் கோரிக்கையான மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்வு; சட்டப்படி போதிய சம அளவு இழப்பீடு; வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் தொகை ஆகியவற்றிற்கு நிரந்தரமான முடிவை எடுத்துவிட்டு நில எடுப்பில் இறங்க வேண்டும் என்று என்.எல்.சி. நிறுவனத்தை வலியுறுத்துகிறேன்." என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago