ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு: திமுகவினர் மீதான 2-வது ஊழல் பட்டியலை வெளியிட்டார்

By செய்திப்பிரிவு

சென்னை: திமுகவினரின் 2-வது ஊழல் பட்டியல் என்று சில விவரங்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதுதொடர்பாக சில ஆவணங்களை பெரிய இரும்பு பெட்டியில் வைத்து ஆளுநரிடம் வழங்கிய அவர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளார்.

திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, அன்பில் மகேஸ், உதயநிதி ஸ்டாலின், பொன்முடி மற்றும் மகன் கவுதம சிகாமணி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, கலாநிதி வீராசாமி, ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த் மற்றும் முதல்வரின் மருமகன் சபரீசன், கலாநிதி மாறன் ஆகிய 12 பேரின் சொத்து பட்டியல் என்று சில விவரங்களை ‘டிஎம்கே ஃபைல்ஸ்’ என்ற பெயரில் வீடியோ பதிவாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்.14-ம் தேதி வெளியிட்டார். இதில், திமுகவினரின் சொத்து மதிப்பு ரூ.1.34 லட்சம் கோடி என்று அவர் தெரிவித்தார்.

திமுகவினர் சொத்து மற்றும் ஊழல் பட்டியல் 2-ம் பாகத்தை தனது பாதயாத்திரைக்கு முன்பாக வெளியிடுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அண்ணாமலை நேற்று மாலை சந்தித்து, சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினார். திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், திமுக குடும்பத்துடன் தொடர்புடைய பினாமிகள் பற்றிய தகவல்கள் என சில விவரங்களுடன் ‘டிஎம்கே ஃபைல்ஸ் பார்ட்-2’ என்ற பெயரில் சில ஆவணங்களை பெரிய இரும்பு பெட்டியில் வைத்து ஆளுநரிடம் அவர் வழங்கினார்.

ரூ.5,600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களை ஆளுநரிடம் வழங்கி உள்ளதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் பின்னர் அண்ணாமலை தெரிவித்தார். தமிழக பாஜக துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், பால் கனகராஜ், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பின்னர், 16.16 நிமிடம் ஓடும் ‘டிஎம்கே ஃபைல்ஸ் - 2’ என்ற வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது: திமுக ஆட்சியில் தொழில் துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, எல்காட் நிறுவனத்தின் துணை நிறுவனமான எல்நெட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்குகள் அனைத்தும் படிப்படியாக தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், ரூ.3000 கோடி ஊழல் நடந்துள்ளது. போக்குவரத்து துறையில், பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக போலி நிறுவனங்களின் பெயரில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரூ.2,000 கோடி ஊழல் நடந்துள்ளது.

திமுக 2021-ல் ஆட்சிக்கு வந்தபிறகு, மீரட் நகரை சேர்ந்த பாராமவுன்ட் பெஸ்டிசைட்ஸ் நிறுவனம் சென்னையில் இருப்பதாக போலி ஆவணங்களை வைத்து, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் பூச்சிக்கொல்லி மருந்து விநியோகத்துக்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. இதன்மூலம் ரூ.600 கோடி ஊழல் நடந்துள்ளது. இதற்கு திமுக அரசு பதில் அளிக்கவேண்டும். இவ்வாறு அண்ணாமலை அதில் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தமிழக பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் கூறியபோது, ‘‘9 அமைச்சர்களின் பினாமி சொத்துகள், ஊழல் பட்டியலை பெரிய பெட்டியில் வைத்து ஆளுநரிடம் அண்ணாமலை வழங்கி உள்ளார். ரூ.5,600 கோடி அளவிலான ஊழல் பட்டியலை அண்ணாமலை தற்போது சுருக்கமாக வெளியிட்டுள்ளார். பாதயாத்திரையின்போது, இதுபற்றி செய்தியாளர்களிடம் விரிவாக கூறுவார். முதல்வரிடம் வழங்கியதுபோல, டாஸ்மாக் இல்லாமல் தமிழகத்தில் எப்படி வருமானம் ஈட்டுவது என்பதுதொடர்பான வெள்ளை அறிக்கையையும் ஆளுநரிடம் அண்ணாமலை வழங்கியுள்ளார்’’ என்றார்.

பாதயாத்திரையை தொடங்கிவைக்க அமித் ஷா நாளை வருகை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஊழலுக்கு எதிரான பாதயாத்திரையை ராமேசுவரத்தில் நாளை (ஜூலை 28) தொடங்குகிறார். இதை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விமானம் மூலம் நாளை மதுரை வருகிறார்.

டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் நாளை மாலை 4 மணிக்கு மதுரை வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் முகாம் இறங்குதளத்துக்கு மாலை 5 மணிக்கு செல்கிறார். பின்னர் கார் மூலம் ராமேசுவரம் சென்று, யாத்திரையை தொடங்கி வைக்கிறார். 29-ம் தேதி ராமநாத சுவாமி கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, டெல்லி திரும்புகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE