திமுக ஃபைல்ஸ் பகுதி 2 | அண்ணாமலை வெளியிட்ட வீடியோவில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் என்னென்ன?

By செய்திப்பிரிவு

சென்னை: இடிஎல் (ETL) இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் நிறுவனம், போக்குவரத்துத் துறை மற்றும் தமிழ்நாடு மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் நிறுவனங்களில் ஊழல் நடந்திருப்பதாக கூறி, ‘திமுக ஃபைல்ஸ் பகுதி 2’ வீடியோவை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவின் விவரம்: அரசு நிறுவனமான எல்நெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ETL இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் சர்வீசஸ் நிறுவனம், 2006 - 2011 ஆண்டு காலங்களில், சிறுபான்மை பங்குதாரரான தியாகராஜன் செட்டியார் மற்றும் அவரது குடும்பத்தினரால் போலி நிறுவனங்கள் மூலம் முற்றிலுமாக தனியார் நிறுவனம் ஆக்கப்பட்டுள்ளது.

எல்நெட் டெக்னாலஜிஸ் நிறுனத்தின் தலைவராக இருந்த சி.உமாசங்கர் ஐஏஎஸ், 2008-ம் ஆண்டு, அரசு நிறுவனமான ETL இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சர்வீசஸ் நிறுவனம் எப்படி தனியார் நிறுவனமாக மாற்றப்பட்டது என்பதை கண்டறிய முயன்றார். அதேபோல் அரசுக்கு சொந்தமான 26 ஏக்கர் நிலம் என்ன ஆனது என்பதையும் கண்டறிய முயற்சித்தார். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.3000 கோடி. ஆனால் அன்று ஆட்சியில் இருந்த திமுக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, விசாரணையை கட்டுப்படுத்தியது. உமாசங்கர் ஐஏஎஸ் அதிகாரியை பணியிடமாற்றம் செய்தது.

இதற்கு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா கண்டன அறிக்கை வெளியிட்டார். அதன்பின்னர் விசாரணையில் எந்த முன்னேற்றமும் அடையவில்லை. IG3 இன்ஃப்ரா நிறுவனம் சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக வந்த புகாரையடுத்து நடந்த விசாரணையில், தமிழக அரசே இதனை தனியார் நிறுவனம் என்று கூறுகிறது. இந்த தனியார் நிறுவனம் எந்த நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழக விஜிலன்ஸ் துறை என்ன செய்கிறது? இந்நிறுவனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து, தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்கும் கேள்விகளுக்கு, எந்த ஆவணங்களும் இல்லை என்ற பதில் அளித்திருக்கிறது எல்காட் நிர்வாகம். ETL இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் சர்வீஸஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள அனைத்து நிறுவனங்களின் நிதி ஆதாரம் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தமிழக போக்குவரத்துத் துறை ஊழல் : https://rtvsta.tn.gov.in என்ற இணையதளத்தில், குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே சான்றிதழ் வழங்க இந்த வலைதளத்தில் அனுமதி வழங்கப்படுகிறது. வலைதளத்தை உபயோகிப்பவர்கள் மற்றும் அலுவலர்களின் விவரங்கள் என அனைத்தும் APM Groups நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே சான்றிதழ் வழங்க அனுமதி வழங்கப்படுகிறது. துறைக்கு தொடர்போ, முன் அனுபவமோ இல்லாத நிறுவனங்களுக்கு, வணிகப் பயன்பாட்டு வாகனங்களுக்கான Reflective Tapes, Rear Marking plates விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் போலியானவை.

இந்நிறுவனங்கள் மூலம், ரூ.1755 கோடி மொத்த வருமானம் கிடைக்கிறது. ஓர் ஆண்டுக்கு நிகர லாபமாக ரூ.1,276 கோடி கிடைக்கிறது. அதேபோல் போக்குவரத்து துறையில் கருவிகள் வாங்கியதில் ரூ.783.55 கோடி ஊழல் நடந்துள்ளது.

பெரும்பாலான வருமானம் ரொக்கமாக வாங்கப்பட்டு, தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கு ஹவாலா முறையில் விநியோகிக்கப்படுகிறது. ரூ.1755 கோடிக்கு வசூலிக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி தொகை ரூ.316 கோடி. பினாமி நிறுனங்கள் இதை செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல ஆண்டுக்கு சுமார் 2,000 கோடி ரூபாய் வசூலித்து உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைப்பது தான் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் வேலை என்பது எங்களின் குற்றச்சாட்டு.

இதற்கு பிரதிபலனாக, அமைச்சரின் மனைவி டாக்டர் எஸ்.எஸ்.காயத்ரிதேவியின் நிறுவனமான ரோஸ் பெஃர்டலிட்டி மருத்துவமனை அரசு பேருந்துகளில் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

ஆட்சிக்கு வந்தவுடன்... - 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீரட் நகரைச் சேர்ந்த Paramounts Pesticides Limited நிறுவனம், சென்னையில் இருப்பதாக கூறி, தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸஸ் கார்ப்பரேஷன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து வினியோக ஒப்பந்தம் வழங்கியுள்ளது. ஆண்டுக்கு ரூ.300 கோடி ஊழல் இந்த ஐந்து நிறுவனங்கள் மட்டுமல்லாது இன்னும் பல நிறுவனங்கள் மூலமாக நடைபெற்றுள்ளது.

இந்த பின்னணியில் யார் உள்ளது? இதற்காவது பதில் சொல்லுமா ஊழல் திமுக அரசு? - இந்தக் கேள்விகளும், அதற்கான ஆவணங்களாக சொல்லப்படுவதும் அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆளுநருடன் சந்திப்பு: முன்னதாக, "திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும் ரூ.5600 கோடி மதிப்பிலான 3 ஊழல்கள் குறித்த ஆதாரங்களையும் ஆளுநரிடம் வழங்கி உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியின் துணைத் தலைவர் கரு.நாகராஜன், பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் புதன்கிழமை சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது, திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் திமுக முதல் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கக்கூடிய பினாமிகள் தகவல்கள் அடங்கிய DMK FILES-2 தொடர்புடைய முழுமையான கோப்புகள் மற்றும் ஆவணங்களை ஆளுநரிடம் வழங்கியதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று, @BJP4TamilNadu மூத்த தலைவர்களுடன், நமது மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு RN ரவி அவர்களைச் சந்தித்தோம்.

மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய,… pic.twitter.com/14Pj7Jjpvq

— K.Annamalai (@annamalai_k) July 26, 2023

இதுதொடர்பாக, பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று, தமிழக பாஜக மூத்த தலைவர்களுடன், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியைச் சந்தித்தோம். ஆளுநர் அவர்களிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ரூ.5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி, DMK FILES-1 கோப்புகள் வெளியிடப்பட்டு, அதுதொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்நிலையில், DMK FILES-2 தொடர்பான கோப்புகள் மற்றும் ஆவணங்களை ஆளுநரிடம் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரடியாக வழங்கியுள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்