திமுக ஃபைல்ஸ் பகுதி 2 | ‘ரூ.5,600 கோடி மதிப்பிலான 3 ஊழல்கள்’ - ஆளுநரிடம் ஆதாரம் அளித்ததாக அண்ணாமலை தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: "திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும் ரூ.5600 கோடி மதிப்பிலான 3 ஊழல்கள் குறித்த ஆதாரங்களையும் ஆளுநரிடம் வழங்கி உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியின் துணைத் தலைவர் கரு.நாகராஜன், பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் புதன்கிழமை சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது, திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் திமுக முதல் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கக்கூடிய பினாமிகள் தகவல்கள் அடங்கிய DMK FILES-2 தொடர்புடைய முழுமையான கோப்புகள் மற்றும் ஆவணங்களை ஆளுநரிடம் வழங்கியதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று, தமிழக பாஜக மூத்த தலைவர்களுடன், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியைச் சந்தித்தோம். ஆளுநர் அவர்களிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ரூ.5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி, DMK FILES-1 கோப்புகள் வெளியிடப்பட்டு, அதுதொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்நிலையில், DMK FILES-2 தொடர்பான கோப்புகள் மற்றும் ஆவணங்களை ஆளுநரிடம் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரடியாக வழங்கியுள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE