சென்னை: "உழவர்களின் நண்பன் என்று தமிழகத்தை ஆளும் திமுக அரசு கூறிக்கொள்கிறது. வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதை சாதனையாகக் காட்டிக் கொள்கிறது. ஒருபுறம் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து கொண்டு இன்னொருபுறம் விவசாயிகளின் நிலங்களை அவர்களிடமிருந்து பறிப்பது எந்த வகையில் நியாயம்?" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் பயிர் செய்யப்பட்ட வயல்களில் ராட்சத எந்திரங்களை இறக்கி என்எல்சிக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் என்எல்சி நிறுவனமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டிருக்கின்றன. மக்கள்நலன் காக்க வேண்டிய தமிழக அரசு, என்எல்சி நிறுவனத்தின் அடியாளைப் போன்று செயல்பட்டு நிலங்களை பறிப்பது கண்டிக்கத்தக்கது.
என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்காக வளையமாதேவி பகுதியில் உள்ள கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல நூறு ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த என்எல்சி நிறுவனம் பல ஆண்டுகளாக முயன்று வருகிறது. அந்த நிலங்களை கையகப்படுத்த உழவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும், என்எல்சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என்ற பாமகவின் பரப்புரை தீவிரம் அடைந்திருப்பதாலும் அது சாத்தியமாகவில்லை.
இந்த நிலையில், 2000-க்கும் மேற்பட்ட காவலர்களைக் குவித்து வளையமாதேவி பகுதியை சுற்றி வளைத்துள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம், அங்கு 30-க்கும் மேற்பட்ட ராட்சத எந்திரங்களைக் கொண்டு வந்து வேளாண் விளைநிலங்களில் இறக்கி, பயிர்களை சேதப்படுத்தி, அந்த நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. கதிர்விடும் நிலையில் உள்ள பயிர்களை அழிப்பது என்பது, குழந்தைகளை கருவில் கொல்வதற்கு இணையாக கொடுமையாகும்.
இத்தகையக் கொடுமைகள் உலகில் மக்களாட்சி நடைபெறும் எந்த நாட்டிலும் நடப்பதில்லை. ஆனால், விளைந்த பயிர்களை ராட்சத எந்திரங்களைக் கொண்டு அழிக்கும் கொலைபாதகச் செயலை என்எல்சி நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் கூலிப்படையைப் போல, உழவர்நலத்துறை அமைச்சர் என்று கூறிக்கொள்ளும் உள்ளூர் அமைச்சர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள் என்எல்சியின் நிலக்கொள்ளைக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். நிலம் கையகப்படுத்தப்படுவதை தடுக்க முயன்ற உழவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்; விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். பெரும்பான்மையான உழவர்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர்.
பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களை கையகப்படுத்துவதற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டிருப்பதை அறிந்த பாமக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நிர்வாகிகள் நேற்று இரவே மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, உழவர்களின் ஒப்புதல் இல்லாமல் ஒரு செண்ட் நிலம் கூட கையகப்படுத்தப்படாது என்று உறுதியளித்த மாவட்ட ஆட்சியர், அடுத்த நாள் காலையில் அதற்கு நேர் எதிராக பயிர்களை அழித்து விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு துணை போயிருக்கிறார். பாமகவினரால் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, பல ஊர்களில் இரவோடு, இரவாக பாமக நிர்வாகிகள் கைது செய்திருக்கின்றனர். இது அடக்குமுறையின் உச்சமாகும்.
கடலூர் மாவட்டத்தின் ஆட்சியராக முன்பு பதவி வகித்த பாலசுப்பிரமணியன் என்பவர் என்எல்சி நிறுவனத்தின் ஏஜன்டை விட மிக மோசமாக நடந்து கொண்டார். அவர் இடமாற்றம் செய்யப்பட்டு புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்; அவர் மக்களின் ஆட்சியராக நடந்து கொள்ள முயல வேண்டும்.
உழவர்களின் நண்பன் என்று தமிழகத்தை ஆளும் திமுக அரசு கூறிக்கொள்கிறது. வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதை சாதனையாகக் காட்டிக் கொள்கிறது. வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதன் நோக்கமே உழவர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த வேண்டும் என்பது தான். ஆனால், ஒருபுறம் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து கொண்டு இன்னொருபுறம் விவசாயிகளின் நிலங்களை அவர்களிடமிருந்து பறிப்பது எந்த வகையில் நியாயம்?
மக்களா.... பெரு நிறுவனங்களா? என்றால், மக்களின் பக்கம் தான் அரசுகள் நிற்க வேண்டும். ஆனால், சுற்றுச்சூழலை சீரழித்து மின்சாரம் தயாரித்து, அதிலிருந்து கிடைக்கும் லாபத்தை வட மாநிலங்களில் முதலீடு செய்யும் என்எல்சி நிறுவனத்துக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறது. அதற்காக மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கவும் தயாராக இருக்கிறது. தமிழக அரசுக்கு இவ்வளவு துடிப்பும், ஆர்வமும் ஏன்?
தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறியிருப்பதாக தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. தமிழகத்தின் அதிகபட்ச மின்தேவை 18,000 மெகாவாட் மட்டும் தான். ஆனால், தமிழகத்தின் மின் உற்பத்தித் திறன் 36,000 மெகாவாட். தமிழகத்தின் மிகை மின்சாரம் அண்டை மாநிலங்களுக்கு விற்கப்பட்டதாக மின்துறை அமைச்சர் அண்மையில் கூறியிருந்தார். என்எல்சியின் பங்களிப்பு இல்லாமலேயே தமிழகத்தின் மின்தேவையை சமாளிக்க முடியும் எனும் போது என்எல்சிக்கு ஆதரவாக தமிழக அரசு துடிப்பது ஏன்? இந்த அளவுக்கு என்எல்சிக்கு ஆதரவாக திமுக அரசு, உள்ளூர் அமைச்சர், மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து செயல்படுவதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது என்பதை தமிழக மக்கள் அறிந்துள்ளனர்.
இந்தியாவில் நிலப்பறிப்புகளுக்கும், அதற்கு காரணமானவர்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிகளுக்கும் வாழும் எடுத்துக்காட்டாக விளங்குபவை மேற்கு வங்க மாநிலத்தின் சிங்கூர், நந்தி கிராமம் தான். அங்கு நடந்ததை விட மிகக் கொடிய அடக்குமுறைகளை உழவர்கள் மீது திமுக அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதை கடலூர் மாவட்ட உழவர்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள்.
உள்ளூர் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும். அனைத்தையும் இழந்து விட்டு, கொதித்து நிற்கும் உழவர்கள் வெகுண்டெழுந்து போராடும் நிலையையும், அதனால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிக்கல் ஏற்படக்கூடிய நிலையையும் தமிழக அரசும், என்எல்சி நிறுவனமும் ஏற்படுத்தி விடக் கூடாது. உழவர்களின் நலனையும் வாழ்வாதாரத்தையும் காக்க எந்த எல்லைக்கும் சென்று போராட பாட்டாளி மக்கள் கட்சி தயாராக இருக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
19 hours ago