சென்னை: "நெய்வேலி நிறுவனத்தில் பறிபோகும் தமிழர்களின் உரிமையைப் பெற்றுக்கொடுக்க எவ்வித முயற்சியும் எடுக்காத திமுக அரசு, தமிழர் நிலங்களை மட்டும் பறித்துக்கொடுக்க முனைப்புக் காட்டுவது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகமாகும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கப் பணிகளுக்காக மேல் வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் விளைந்து நிற்கும் நெற்பயிர்களை அழித்து, ஏழை எளிய மக்களின் நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரிக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. தங்கள் நிலம் பறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகளை திமுக அரசு காவல்துறையின் மூலம் அடக்குமுறைகளை ஏவி கைது செய்வது அப்பட்டமான எதேச்சதிகாரப்போக்காகும்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தைத் தொடங்குவதற்காகத் தங்கள் நிலங்களை விட்டுக்கொடுத்த நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பூர்வகுடி தமிழர்கள் தற்போது வெறும் கூலிகளாக மட்டுமே வேலை செய்யக்கூடிய அவலநிலை நிலவுகிறது. அந்தளவுக்கு நெய்வேலி நிறுவனத்தில் வடமாநிலத்தவர் ஆதிக்கம் மேலோங்கி, மண்ணின் மைந்தர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படும் கொடுஞ்சூழல் உள்ளது. ஏற்கெனவே நிலம் வழங்கிய குடும்பங்களுக்கு ஒப்பந்தப்படி பணி வழங்காமலும், பல்லாயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்யாமலும், தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த தமிழ் இளைஞர்களுக்குப் பணி வழங்காமலும் தொடர்ந்து இனபாகுபாடு கடைபிடிக்கிறது நெய்வேலி நிலக்கரி நிறுவனம்.
அதுமட்டுமின்றி, 2025-ம் ஆண்டுக்குள் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்கவும் மோடி அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் தனியாருக்குத் தாரைவார்க்கப் போகும் நிறுவனத்துக்கு தமிழ் மக்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு ஒப்படைக்க தமிழக அரசு துணைபோவது ஏன்? நெய்வேலி நிறுவனத்தில் பறிபோகும் தமிழர்களின் உரிமையைப் பெற்றுக்கொடுக்க எவ்வித முயற்சியும் எடுக்காத திமுக அரசு, தமிழர் நிலங்களை மட்டும் பறித்துக்கொடுக்க முனைப்புக் காட்டுவது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும். ஏற்கெனவே நிலக்கரி எடுப்பதற்காக தமிழர்களிடம் பறிக்கப்பட்ட 1000 ஏக்கர் நிலங்கள் இன்னும் பயன்படுத்தாது இருப்பில் உள்ள நிலையில், மேலும், மேலும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை வலுக்கட்டாயமாக எதற்குப் பறிக்க வேண்டும்?
» 'லோன் வேண்டுமா சார்?' என போனில் கேட்ட வங்கி பிரதிநிதியிடம் ரயில் வாங்க ரூ.300 கோடி கோரிய நபர்!
நிலத்துக்கு உரிய இழப்பீடும், நிலம் வழங்கும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்ற பூர்வகுடி தமிழர்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் நெய்வேலி நிறுவனத்துக்கு, நிலங்களை அளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எவ்வகையில் நியாயமாகும்? பொதுத்துறை நிறுவனமாக இருக்கும்போதே உரிய இழப்பீடும், நிரந்தரப் பணியும் வழங்க மறுக்கும் நிலையில், விரைவில் தனியார் மயமாகப்போகும் நிறுவனத்தை நம்பி தமிழர்கள் தங்கள் நிலங்களை எவ்வாறு ஒப்படைக்க முடியும்? நிலங்களை வழங்க மறுக்கும் விவசாயிகளை மிரட்டி திமுக அரசு அச்சுறுத்துவதும், கைது செய்து சிறைபடுத்துவதும் கொடுங்கோன்மையின் உச்சமாகும்.
ஆகவே, விவசாயிகளின் கடும் எதிர்ப்பினையும் மீறி, சிறிதும் மனச்சான்று இன்றி விளைந்த பயிர்களை அழித்து, விளைநிலங்களில் இரண்டாவது சுரங்கப்பணிகளைத் தொடங்கியுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் அத்துமீறலை இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், நிலங்களைத் தர மறுக்கும் விவசாயிகளை கைது செய்யும் போக்கினை திமுக அரசு கைவிடுவதோடு, தனியார் மயமாகவிருக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வலுக்கட்டாயமாக தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பதற்குத் துணைபோவதையும் கைவிட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கடலூர் மாவட்டம் நெய்வேலியில், என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிகள் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் புதன்கிழமை கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கியது. இந்த பணிகளுக்காக 30-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களின் துணையுடன் விளைநிலங்களில் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இன்னும் இரண்டு மாதத்தில் அறுவடைக்கு தயாராக நெற்பயிர்கள் உள்ள விளைநிலங்களை அழிப்பதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் தெரிவித்தனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க அங்கு ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். என்எல்சியின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago