அரசியல் சார்பு அமைப்புகளில் மாணவர் இருந்தால் நீக்கம்: சென்னை பல்கலை. சுற்றறிக்கைக்கு இந்திய கம்யூ. கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசியல் சார்பு அமைப்புகளில் இருந்தால் நீக்கப்படுவீர்கள் என்ற சென்னை பல்கலைக்கழகத்தின் முதுநிலை சமூகவியல் துறையின் சுற்றறிக்கைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை, சமூகவியல் முதுநிலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் “மாணவர்கள் அரசியல் கட்சிகள் சார்ந்த எந்தவொரு அமைப்பு மற்றும் சங்கங்களில் உறுப்பினராக இருக்கக் கூடாது” எனவும், “அப்படி மாணவர்கள் ஈடுபட்டால் உடனே, கல்வி பெறும் வாய்ப்பில் இருந்து நீக்கலாம் என துறைத் தலைவருக்கு அதிகாரமளித்தும்” உள்ளது. இது மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும்.

அரசியல் அமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மதிக்காமல் செயல்பட்டுள்ள இச்சுற்றறிக்கையை வெளியிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும், சுற்றறிக்கையை திரும்பப் பெறவும் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகின்றது" என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, அரசியல் சார்பு அமைப்புகளில் இருந்தால் நீக்கப்படுவீர்கள் என்ற சென்னை பல்கலை.யின் முதுநிலை சமூகவியல் துறையின் சுற்றறிக்கை சர்ச்சையானது. பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக்கழகத்தில் 73 துறைகள், 45 ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. இதுதவிர 134 இணைப்பு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 19 இளநிலை, 21 முதுநிலை படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், முதுநிலை சமூகவியல் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு அத்துறை சார்பில் சமீபத்தில் ஒப்புதல் படிவம் ஒன்று வழங்கப்பட்டது. அதில், ‘நான் அரசியல் கட்சிகள் சார்ந்த எந்தவொரு அமைப்பு மற்றும் சங்கங்களில் உறுப்பினராக இல்லை. சென்னை பல்கலைக்கழகத்துக்கு எதிராக எந்த போராட்டங்களிலும் பங்கேற்கமாட்டேன். முன் அனுமதியின்றி நீண்டகால விடுப்பு, வகுப்புக்கு வராமல் இருக்கமாட்டேன்’ ஆகிய விதிகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் ஒப்புதல் அளித்து கையொப்பமிட வேண்டும். மேலும், மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில் இந்த விதிகளை மீறினால் துறைத்தலைவர் உடனே படிப்பில் இருந்து நீக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.

கல்வியாளர்கள் எதிர்ப்பு: இந்த அறிவிப்புக்கு கல்வியாளர்கள், பேராசிரியர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதமும் அனுப்பியுள்ளார். அதில், 'இது மாணவர்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும். இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை தடுக்கும் எந்தவொரு அறிவிப்பையும் மாணவர்களிடம் இருந்து பெறக்கூடாது. எனவே, இந்த ஒப்புதல் படிவத்தை சென்னை பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்