கழிப்பறை, குடிநீர், சிசிடிவி, பாதுகாப்பு இல்லை: சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் ‘பறக்கும்’ அல்ல... ‘வெறுக்கும்’ ரயில் நிலையங்கள்!

By மு.வேல்சங்கர்

சென்னை: சென்னை கடற்கரை- வேளச்சேரி மேம்பால ரயில் வழித்தடத்தில் (பறக்கும் ரயில் வழித்தடம்) பெரும்பாலான ரயில் நிலையங்களில் கழிப்பறை வசதி, மின்தூக்கி, நகரும் படிக் கட்டு வசதி போன்ற பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லை. வேளச்சேரி, மயிலாப்பூர் உட்பட சில நிலையங்களைத் தவிர, பெரும்பாலான நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, கடற்கரை- வேளச்சேரி, சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை ஆகிய முக்கிய வழித்தடங்கள் இருக்கின்றன. இவற்றில் சென்னை கடற்கரை- வேளச்சேரி வழித்தடம் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் மிக முக்கிய வழித்தடமாகும்.

இந்த வழித்தடமானது மேம்பால (பறக்கும் ரயில்) ரயில் திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டது. கடற்கரை– வேளச்சேரி வரை தற்போது, தினசரி 80-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் 18 ரயில் நிலையங்கள் உள்ளன.

இவற்றில் பெரும்பாலான ரயில் நிலையங்களில் கழிப்பறை வசதி, மின்தூக்கி, நகரும் படிக்கட்டு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதுதவிர, வேளச்சேரி, மயிலாப்பூர், கடற்கரை தவிர மற்ற ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களும் இல்லை.

பல ரயில் நிலையங்களில் கட்டிடங்கள் பராமரிப்பு இன்றி பாழடைந்த நிலையில் உள்ளன. சிந்தாதிரிபேட்டை ரயில்நிலையத்தில் மின்தூக்கிகள் செயல்படவில்லை. இங்கு கழிப்பறை வசதியும் இல்லை. சிசிடிவி கேமாக்கள் இல்லாததால் சமூக விரோதிகளுக்கு வசதியான இடமாக மாறியுள்ளது. சேப்பாக்கம் நிலையத்தின் உள்ளே சிசிடிவி கேமராக்கள் இல்லை.

மயிலாப்பூர் ரயில் நிலையத்தின் உட்புறம்தான் இப்படி
அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

திருவல்லிக்கேணி நிலையத்தில் நகரும் படிக்கட்டு ஒன்று இயங்கவில்லை. கலங்கரை விளக்கம் ரயில் நிலையத்தில் மின்தூக்கி செயல்படவில்லை. சிசிடிவி கேமரா, கழிப்பறை வசதி இல்லை. மயிலாப்பூர் நிலையத்தில் பயணிகள் நடைமேடைக்கு வந்து செல்ல ஒரு வழிதான் உள்ளது. பயணிகள் நடந்துசெல்லும் படிக்கட்டுகளில் குப்பைகள் குவிந்து அலங்கோலமாக காட்சியளிக்கின்றன.

கழிப்பறைகள் பூட்டப்பட்டு இருக்கின்றன. அடுத்தடுத்து வரும் மந்தைவெளி, கோட்டூர்புரம் ரயில் நிலையங்களிலும் இதை நிலைதான். பெருங்குடி ரயில் நிலையத்தில் மின்தூக்கி, நகரும் படிக்கட்டு செயல்படவில்லை. படிக்கட்டுகள் சேதமடைந்து உள்ளன. இங்கும் சிசிடிவி வசதி இல்லை. கஸ்தூரிபாய் நகர் நிலையத்தில் ஒருபுறத்தில் மட்டுமே நகரும் படிக்கட்டு, மின்தூக்கி இருக்கின்றன.

சென்னை கடற்கரை, மயிலாப்பூர், வேளச்சேரி போன்ற சில ரயில் நிலையங்களை தவிர, பெரும்பாலான ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். சில இடங்களில் மின்விளக்குகள் சேதமடைந்துள்ளதால் மாலை, இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு மர்ம நபர்கள் பயணிகளிடம் மொபைல் போன், பணம், செயின்களை வழிப்பறி செய்கின்றனர்.

இந்திரா நகர் ரயில் நிலையத்தில் கடந்த 2-ம் தேதி ரயிலில், பயணித்த மாணவி பீர்த்தியிடம், செல்போன் பறிக்க முயன்றதால் ரயிலில் இருந்து தவறி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதித்திருந்த மாணவி பீர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவ பெண் பயணிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற குறைபாடுகளால் பயணிகள் அதிலும் பெண் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து வில்லிவாக்கத்தை சேர்ந்த ரயில் பயணி ஜெயந்தி கூறியதாவது: திருவல்லிக்கேணி நிலையத்தில் சிசிடிவி கிடையாது. இதுதவிர, இங்கு மின்தூக்கி, நகரும் படிக்கட்டு கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. பெரும்பாலான நேரங்களில் ரயில்வே போலீஸார், ஆர்பிஎஃப் போலீஸார் பாதுகாப்பு பணியில் இருப்பது இல்லை. இதனால், அச்சத்துடன் வந்து செல்லும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சியாமளா

திருவல்லிகேணியைச் சேர்ந்த பெண் பயணி சியாமளா கூறியதாவது: நடைமேடைகள் துாய்மையின்றி, குப்பைகள் குவித்து, துர்நாற்றம் வீசுகிறது. இந்த மார்க்கத்தில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் குடிநீர் வசதி இல்லை. மேம்பால ரயில் நிலையங்களில் அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.

இதுகுறித்து சென்னை ரயில்வே போலீஸார் சிலர் கூறியதாவது: தமிழக ரயில்வே போலீஸில் 50 சதவீதம் பேரும் ஆர்பிஎஃப் போலீஸில் 30 சதவீதம் பேரும் பற்றாக்குறை நிலவுகிறது. பல ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த கேபிள்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், சிசிடிவி கேமராக்கள் பொருத்தவில்லை. இதனால், பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. மேம்பால ரயில் நிலையங்களில் அதிகமாக நுழைவு வழிகள் இருப்பதால், குற்றவாளிகள் எளிதில் தப்பித்து விடுகின்றனர். இதை ஒருவழியாக மாற்றி கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை ரயில்வே கோட்டத்தில் ரூ.9.79 கோடி மதிப்பில் 26 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில் சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கோட்டூர்புரம், மந்தைவெளி, கஸ்தூரிபாய் நகர், தரமணி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சிசிடிவி பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலுடன் இணைப்பு கடற்கரை-வேளச்சேரி மேம்பால ரயில் சேவையை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்கும் முயற்சியும் நடைபெறுகிறது. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ரயில்கள் இயக்கப்படும். ரயில் நிலையங்களை மேம்படுத்துதல், அடிப்படை, பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE