ராயப்பேட்டையில் சேதமான சாலை சீரமைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் பெரும்பாலான சாலைகள் சிதிலமடைந்து அதில் சிக்கும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ஜெனரல் பீட்டர்ஸ் (ஜிபி ரோடு) சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அதே சாலையில் உள்ள தனியார் மால் எதிரே சாலை முற்றிலும் சேதம் அடைந்து வாகனங்கள் செல்ல தகுதியற்ற நிலையில் உள்ளது. இதனால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அமைந்துள்ள வெஸ்ட் காட் சாலையின் நிலமையும் மோசம்தான். இதனால், விரைவாக வர வேண்டிய ஆம்புலன்ஸ்கள் இந்த சாலையில் தள்ளாடியபடியே வருகின்றன. ராயப்பேட்டை நெடுஞ்சாலை முற்றிலும் வாகனங்கள் செல்ல முடியாதவாறு பள்ளங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

ராயப்பேட்டை காவல் உதவி ஆணையர் அலுவலகம் முன்பு சாலை முற்றிலும் சிதிலமடைந்துள்ளது. அதோடு அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு, ராயப்பேட்டை மேம்பாலத்திலும் சாலை சேதமடைந்துள்ளன. மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் சாலை முழுவதும் இதே நிலைதான்.

சாலை குறுக்கே பல்வேறு இடங்களில் பள்ளங்கள் வெட்டப்பட்டு அவை மூடப்படாமல் வாகன ஓட்டிகளை நிலை குலைய வைக்கின்றன. எனவே, சிதிலமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக தேனாம்பேட்டை மண்டலம், வார்டு எண் 111-க்கு உட்பட்ட உட்ஸ் சாலையில் (ராயப்பேட்டை) தனியார் வணிக வளாகம் அருகே சிதிலமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டன. இந்த சீரமைப்புப் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து வில்லிவாக்கம் பகுதியில் ஓட்டேரி நல்லா கால்வாயை பார்வையிட்டு பருவமழைக்கு முன்னதாக தூர்வார சம் பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாநகராட்சி தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன் உடனிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE