“மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசுக்கு கூடுதல் கவனம் தேவை. ஏனெனில்...” - ராமதாஸ் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று எச்சரித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அதற்கான காரணங்களை விவரித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நிலையில் உள்ள குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற முடியாமலேயே போய்விடுமோ என்ற வேதனையில் உழன்று கொண்டிருந்த உழவர்களின் கண்ணீரை, பருவமழையைக் கொண்டு துடைத்திருக்கிறாள் இயற்கை அன்னை. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை தீவிரம் அடைந்திருப்பதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளுக்கும் வரும் தண்ணீரின் அளவு அதிகரித்திருக்கிறது. அதனால், வேறு வழியின்றி தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீரை திறந்து விட்டே ஆக வேண்டும் என்ற நிலைக்கு கர்நாடக அரசு தள்ளப்பட்டிருக்கிறது. இது மிகுந்த நிம்மதியளிக்கிறது.

கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி என்ற அளவை தாண்டிவிட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இன்று புதன்கிழமை காலை வரையிலான 3 நாட்களில் மட்டும் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் நீர்மட்டம் 22.85 டி.எம்.சி அதிகரித்திருக்கிறது. நான்கு அணைகளின் மொத்த நீர் இருப்பு 78 டி.எம்.சியை தொட்டிருக்கிறது. கபினி, ஹாரங்கி ஆகிய அணைகள் நிரம்பி விட்ட நிலையில், அந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் முழுமையாக திறந்து விடப்படுகிறது.

கர்நாடக அணைகளுக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சத்து 1698 கன அடி தண்ணீர் வந்தாலும் கூட கபினி அணையிலிருந்து மட்டும் தான் சுமார் 17,396 கன அடி தண்ணீர் மிகை நீர் திறந்து விடப்படுகிறது. இரு பெரிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி ஆகியவற்றுக்கு வினாடிக்கு 74 ஆயிரத்து 789 கன அடி தண்ணீர் வரும் போதிலும், அந்த இரு அணைகளையும் நிரப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் கர்நாடக அரசு, அவற்றிலிருந்து வினாடிக்கு 5269 கன அடி தண்ணீரை மட்டுமே காவிரியில் திறந்து விட்டிருக்கிறது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், அடுத்த 5 நாட்கள் முதல் ஒரு வாரத்திற்குள் அனைத்து அணைகளும் நிரம்பி விடும் என்பதால், தமிழகத்துக்கு கூடுதல் நீரை கர்நாடகம் திறந்து விட்டே தீர வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நிலையில் உள்ள குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற காவிரியில் தண்ணீர் பெறுவதற்காக தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை; நடுவண் அரசு அதன் கடமையை செய்யவில்லை; கர்நாடக அரசு கருணையுடன் செயல்படவில்லை. ஆனாலும் இயற்கை அன்னை நமது உழவர்களைக் கைவிட வில்லை. மிகவும் தேவையான நேரத்தில் பருவமழையை பெய்யச் செய்த இயற்கை அன்னைக்கு நன்றி.

காவிரி படுகையில் நிலவும் சூழலும், இந்தச் சிக்கலில் கர்நாடகமும், நடுவண் அரசும் நடந்து கொண்ட விதமும் ஓர் உண்மையை உறுதி செய்திருக்கின்றன. கர்நாடக அணைகளுக்கு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் கூடுதலாக தண்ணீர் வந்தாலும், கபினியில் வழிந்த மிகை நீரைத் தவிர, மற்ற அணைகளுக்கு வந்த தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விட கர்நாடக அரசு முன்வரவில்லை; நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை என்பது தான் அந்த உண்மை. மேகேதாட்டு அணை கட்டப்பட்டால், மொத்தமுள்ள 5 அணைகளிலும் 181 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைத்த பிறகு தான் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவோம் என்பதை கர்நாடக அரசு மீண்டும் ஒருமுறை சொல்லாமல் சொல்லியிருக்கிறது.

மேகேதாட்டு அணை கட்டப்பட்டால், மொத்தக் கொள்ளளவு 181 டி.எம்.சியைக் கடந்து தமிழகத்துக்கு காவிரியில் கர்நாடகம் தண்ணீரை திறந்து விடுவது எல்லாம் அதிசயம்தான். அது எப்போதோ ஒரு முறைதான் நடக்கும். அதனால், மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாவதை தடுக்க முடியாது. அதனால், மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்