சென்னை: வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் திருச்சியில் நடைபெறும் “வேளாண் சங்கமம்- 2023” மாபெரும் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விவசாயிகளின் நலனுக்காக, தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை கடந்த மூன்று ஆண்டுகளாக அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வினை விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்துபவர்கள், ஏற்றுமதியாளர்களிடையே ஏற்படுத்தும் வகையில், பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படும் என 2023-24ம் ஆண்டு வேளாண்மை-உழவர் நலத்துறையின் மானியக்கோரிக்கையில் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முதன்முறையாக, தமிழகத்தில் வேளாண் வணிகத் திருவிழா சென்னையில் 8.07.2023 அன்று முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டு, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்த பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட விளைபொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு, பெருவாரியான சென்னை வாழ்மக்களும், வேளாண் பெருமக்களும் பங்கேற்று பயனடைந்தனர்.
திருச்சியில் மூன்று நாட்கள் வேளாண் சங்கமம்: வேளாண்மை, தோட்டக்கலை தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள், அரசின் திட்ட உதவிகள், பழக்கன்றுகள், காய்கறி விதைகள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு, ஜூலை 27 முதல் ஜூலை 29 வரை திருச்சிராப்பள்ளி, கேர் பொறியியல் கல்லூரியில் “வேளாண் சங்கமம் – 2023” விழாவினை சிறப்பாக நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
» ஆவின் பனீர், பாதாம் பவுடர் விலை உயர்வு
» தமிழக மீனவர்கள் 9 பேரை மீட்க கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ( ஜூலை 27) அன்று வேளாண் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கி வாழ்த்த உள்ளார்கள். தொடர்ந்து, நடப்பாண்டில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியினையும் துவங்க இருக்கிறார்கள்.
வேளாண் சங்கமத்தின் சிறப்பம்சங்கள்: வேளாண்மை, தோட்டக்கலைப் பயிர்களில் உயர் விளைச்சல் தரும் புதிய இரகங்கள், பாரம்பரிய நெல் இரகங்கள், நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான செயல் விளக்கங்கள், புதிய வேளாண் இயந்திரங்கள், சூரியசக்தி மூலம் இயங்கும் கருவிகள், விளை பொருட்களை மதிப்புக் கூட்டுவதற்கான வழிமுறைகள், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பட்டுப்பூச்சி வளர்ப்பு குறித்தான கருத்தரங்குகள், உழவன் செயலி பதிவிறக்கம், அரசின் திட்டப்பலன்களை பெறுவதற்கு முன்பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெறுகின்றன.
கலந்து கொள்ளும் துறைகள்: இக்கண்காட்சியில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை விற்பனை, வேளாண் பொறியியல், சர்க்கரைத்துறை, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்), கைத்தறி, தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம், பட்டு வளர்ச்சி, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் ஒன்றிய அரசின் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், பல்வேறு பயிர்கள் சார்ந்த வாரியங்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகங்களும் பங்கேற்கின்றன.
தனியார் நிறுவனங்களும் பங்கேற்பு: அரசு நிறுவனங்கள் மட்டுமல்லாது, நுண்ணீர் பாசன நிறுவனங்கள், உர நிறுவனங்கள், பூச்சி மருந்து நிறுவனங்கள், வேளாண் இயந்திர நிறுவனங்கள், விதை நிறுவனங்கள், வங்கிகள், சர்க்கரை ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்த உள்ளார்கள்.
அரசின் அனைத்துத் திட்டங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வாய்ப்பு: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், நுண்ணீர்ப் பாசனத்திட்டம், இயற்கை வேளாண்மை, ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானிய இயக்கம், தென்னையில் பயிர்ப்பாதுகாப்பு, பாரம்பரிய நெல் இரகங்கள், ஒருங்கிணைந்த பண்ணையம், பசுமைக்குடில், செங்குத்து தோட்டம், நீரியல் தோட்டம், மாடித் தோட்டம், வேளாண் இயந்திரமயமாக்குதல், மதிப்புக்கூட்டுதல் போன்ற உழவர்களுக்காக அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களை தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பு கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், உழவன் செயலி பதிவிறக்கம், திட்டப்பதிவு மையம், தமிழ் மண்வள இணையதளம் மூலம் மண்வள அட்டை விநியோகம் போன்ற இணையவழி சேவைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பழமரக்கன்று, காய்கறி விதை, நுண்ணூட்ட உரங்கள் விற்பனையும் உண்டு: கண்காட்சியுடன், விவசாயிகள் வாங்கிச் சென்று தங்கள் பண்ணையில் சாகுபடி செய்வதற்கேற்றவாறு, புதிய இரகங்களின் காய்கறி விதைகள், மா, கொய்யா உள்ளிட்ட பழ வகைகளில் ஒட்டு இரகக் கன்றுகள், தென்னையில் வீரிய ஒட்டுக் கன்றுகள், நுண்ணூட்டக்கலவை உரங்கள், உயிர் உரங்கள், விதைகள் போன்ற இடுபொருட்களும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
பத்து முக்கிய தலைப்புகளில் கருத்தரங்குகள்: அங்கக வேளாண்மை, விளைபொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள், வேளாண் காடுகள் மூலம் வருமானம், நவீன வேளாண்மையில் புதிய உரங்களின் பயன்பாடு, வேளாண் இயந்திர மயமாக்கல் மற்றும் மதிப்புக்கூட்டல், தோட்டக்கலை சாகுபடியில் புதுமைகள், மின்னணு வேளாண்சந்தை மூலம் மின்னணு வர்த்தகத்தை அணுகுவதற்கான வாய்ப்புகள், வேளாண்மையில் புதிய தொழில் முனைவோர் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள், சிறுதானிய சாகுபடி, முருங்கை சாகுபடி மற்றும் ஏற்றுமதி போன்ற பத்து தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், தொழில்நுட்ப வல்லுநர்களும், அனுபவமிக்க வேளாண் பெருமக்களும், ஏற்றுமதியாளர்களும், உயர் அலுவலர்களும் கலந்து கொண்டு பல்வேறு பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்கள்.
கொள்முதல் செய்பவர்-விற்பனையாளர் சந்திப்பு (Buyers-Sellers Meet): வேளாண் பெருமக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களின் விற்பனையினை எளிதாக்கும் வகையில், கொள்முதல் செய்பவர்-விற்பனையாளர் சந்திப்பும் (Buyers-Sellers Meet) நடைபெற உள்ளது.
பாரம்பரிய விவசாயிகளுக்கு விருது: பாரம்பரிய நெல் சாகுபடியினை ஊக்குவிக்கும்வகையில் அரசு ஏற்கெனவே அறிவித்தபடி, அதிக விளைச்சல் பெற்ற மூன்று விவசாயிகளுக்கு விருதும், பணப்பரிசும் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்க உள்ளார்கள்.
தினமும் 15,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு: வேளாண் சங்கமத் திருவிழாவில் பெருவாரியான வேளாண் பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்பதற்காக, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்து விவசாயிகளை அழைத்து வருவதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. தினமும் 15,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வீதம் கலந்து கொள்வார்கள். இவ்விழாவில், அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள வேளாண் பெருமக்கள் நவீன வேளாண் உத்திகளை நேரில் பார்த்து, தெரிந்து கொண்டு, அதனை அவர்களும் பின்பற்றி, மகசூல் அதிகரித்து, அதன் மூலம் வருமானம் உயர வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக அரசு திருச்சியில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்துள்ள வேளாண் சங்கமத் திருவிழாவில் பெருவாரியான விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago