செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும் - உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை தனது காவலில் எடுத்து விசாரிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும் என தெரிவித்து, அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரிஅவரது மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரத சக்ரவர்த்தி இருவரும் மாறுபட்ட தீர்ப்பளித்தனர்.

இதனால் இந்த வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், செந்தில் பாலாஜியை கைது செய்த நடைமுறை சட்டப்பூர்வமானது என்ற நீதிபதி பரத சக்ரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்தார். அத்துடன் அவரை அமலாக்கத்துறை தனது காவலில் எடுத்து விசாரிப்பது குறித்து இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வே முடிவு செய்யும் என கூறியிருந்தார்.

அதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் காணொலி காட்சி வாயிலாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நிஷா பானு, “அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்ற எனது தீர்ப்பில் உறுதியாக இருக்கிறேன். இந்தச் சூழலில் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இவ்வழக்கில் மேற்கொண்டு சொல்வதற்கு எதுவுமில்லை” என்றார்.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “அமைச்சர், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பது குறித்து முடிவு செய்வதற்காகவே மூன்றாவது நீதிபதி இந்த வழக்கை மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைத்துள்ளார்” என்றார்.

அப்போது மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எங்கள் தரப்பிலும், அமலாக்கத்துறை தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு நாளை(இன்று) விசாரணைக்கு வரவுள்ளதால் அதுவரை இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும்” என்றார்.

அதையேற்க மறுத்த நீதிபதிகள், “இந்த வழக்கில் நாங்கள் மேற்கொண்டு சொல்ல எதுவும் இல்லை என்பதால், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பது குறித்தும் உச்ச நீதிமன்றமே முடிவு செய்யும்” என தெரிவித்து ஆட்கொணர்வு மனுவை முடித்துவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE