எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் | வாதங்களை கேட்டு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் - டி.ராஜா வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் வாதங்களைக் கேட்டு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமையகத்தில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர்டி.ராஜா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றம் முடங்கி இருப்பதற்கு முழு காரணம் பாஜகதான். சென்ற கூட்டத்தொடரின்போதும் நாடாளுமன்றம் முடங்கியது.

அதில், அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தப்பட் டது. எங்கெல்லாம் பாசிச சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றினார்களோ அங்கெல்லாம் நாடாளுமன்றம் செயலிழக்கிறது. மணிப்பூர் பிரச்சினை தேசிய பிரச்சினையாக, மனிதப் பிரச்சினையாக மாறி உள்ளது. மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதுதான் மணிப்பூர் பிரச்சினைக்கு முக்கிய காரணம்.

மணிப்பூரில் நடக்கும் கலவரத்துக்கு பிரதமர் மோடியும் அவர் கட்சியும் பொறுப்பேற்க வேண்டும். மேலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் பேச வேண்டும், விரிவான அறிக்கைதர வேண்டும். இந்திய மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றால், பாஜக அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும்.

எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், பிரதமர் அவையில் இருந்து வாதங்களைக் கேட்டுபேச வேண்டும், விளக்கம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

டி.ராஜா மயங்கி விழுந்ததால் பரபரப்பு: மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சென்னை தங்கசாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில்,டி.ராஜா பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை முடிந்து 2 மணி நேரத்தில் அவர் வீடு திரும்பினார். தூக்கமின்மை மற்றும் ஓய்வு இல்லாததால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE