திருப்பத்தூர் கோட்டத்தின் வயது 228: பகல் கனவாகிப் போன தனி மாவட்டம்

By ந. சரவணன்

திருப்பத்தூர் கோட்டத்துக்கு நாளையுடன் 228 வயதாகிறது. நூற்றாண்டுகளை கடந்தும் திருப்பத்தூரில் அடிப்படை வசதிகளும், நகர வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் வேதனை யடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தின் மேற்கு கடைக் கோடியில் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது திருப்பத்தூர் நகரம். இதைச் சுற்றிலும் மலைப் பகுதிகள், வயல் வெளிகள், தோட்டங்கள் என இயற்கையின் பேரழகை தன்னகத்தே கொண்டு திகழும் இடமாக திருப்பத்தூர் திகழ்கிறது.

வேலூர் - சேலம் பிரதானச் சாலையில் அமைந்துள்ள திருப்பத்தூர் கோட்டம், நாளை தனது 228-வது வயதில் அடியெடுத்து வைக்கிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருப்பத்தூர் கடந்து வந்த பாதையை இப்போது பின்னோக்கிச் சென்று பார்க்கவேண்டிய அவசியம் நமக்கு உள்ளது.

தனி மாவட்டம்

தமிழகத்தின் மிகப் பெரிய மாவட்டங்களில் ஒன்றாக திகழ்வது வேலூர் மாவட்டம். இதனால், நிர்வாக வசதிகளுக்காகவும், மக்களின் அல்லல்களை போக்கவும் வேலூரை, இரண்டாக பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டத்தை அமைக்கவேண்டும் என்று அவ்வப்போது அரசியல் கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. ஆனால், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே, திருப்பத்தூர் தனி மாவட்டமாக இருந்துள்ளது.

அதாவது, கடந்த 1790-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி திருப்பத்தூர், வாணியம்பாடி பகுதியை உள்ளடக்கிய மாவட்டமாக திருப்பத்தூர் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் முதல் ஆட்சியராக கிண்டர்ஸ்லேவை பிரிட்டிஷ் அரசு நியமித்தது. அதன் பிறகு 2 ஆண்டுகள் கழித்து, 1792-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி சேலம் மாவட்டத்துடன் திருப்பத்தூர் இணைக்கப்பட்டது.

அந்த மாவட்டத்தில் ஆட்சியராக கேப்டன் அலெக்ஸாண்டர் ரீட் என்பவர் பொறுப்பேற்றார். அப்போது, சேலம் மாவட்டத்தின் தலைநகரமாக திருப்பத்தூர் இருந்துள்ளது. இங்கு தான் வரி வசூல் முறையிலும், வருவாய் நிர்வாகத்திலும் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து, கடந்த 1803 பிப்ரவரி 19-ம் தேதி திருப்பத்தூர் பகுதி, சித்தூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய வட ஆற்காடு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

1808-ம் ஆண்டு மீண்டும் திருப்பத்தூர், சேலம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. அதையடுத்து, 1911-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி வட ஆற்காடு மாவட்டம் மறுசீரமைக்கப்புக்குள்ளானது. அதன்படி, வேலூர், திருப்பத்தார், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வட ஆற்காடு மாவட்டம் உருவானது.

தமிழகத்தின் நீராதாரம் பெரும்பாலும் வட கிழக்குப் பருவ மழையை நம்பியே இருக்கும். ஆனால், திருப்பத்தூரில் தென் மேற்குப் பருவமழையே எப்போதும் கைகொடுக்கும். இதுதான் இப்பகுதியில் பிரதான நீராதாரமாக உள்ளது. இதற்கு, காரணம் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகும்.

வேலூர் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள திருப்பத்தூரில் ஆண்டுக்கு 8 மாதங்களுக்கு இதமான சூழல் (தட்ப வெட்ப நிலை) நிலவுகிறது. இதற்கு முக்கிய காரணமாக, இருப்பது ஜவ்வாது மலையும், ஏலகிரி மலையும் தான் என இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

வரலாற்று பகுதியிலும் திருப்பத்தூருக்கு தனி முக்கியத்துவம் உள்ளது. இதற்கு, இப்பகுதிகளில் உள்ள கண்டுபிடிக்கப்படும் நடுகல்களே சான்றாக உள்ளன. இப்படி பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட திருப்பத்தூர் கோட்டம் இன்று தனது அடையாளங்களை இழந்து காணப்படுகிறது.

தனது, 228-வது வயதை எட்டியுள்ள திருப்பத்தூர் கோட்டத்தை தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மேலும், மாவட்டம் நிர்வாகம் சார்பில் விழா எடுத்து கொண்டாட வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்