மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் குற்ற வழக்குகள் நிலுவை குறைவு: உயர் நீதிமன்றம் பாராட்டு

By கி.மகாராஜன் 


மதுரை: மதுரை உட்பட தென் மாவட்டங்களில் குற்ற வழக்குகள் நிலுவை 65.77 சதவீதம் குறைந்துள்ளது பெரிய முன்னேற்றம் என உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

விருதுநகரைச் சேர்ந்த பிரினிஷ் பிரபு தாஸ் என்ற பிரின்ஸ் பிரபு தாஸ் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு: என் மீதான வழக்கு முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்தேன். விசாரணையின் போது என் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து குற்றப்பத்திரிகை நகல் கேட்டு விண்ணப்பித்தேன். அதற்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் நீதிமன்றத்துக்கு தவறான தகவல் அளித்த முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் மோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்போது அதற்கு ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும். ஒப்புகை சீட்டு வழங்காவிட்டால் விசாரணை அதிகாரிகள் 24 மணி நேரத்தில் எஸ்பியிடம் தெரிவிக்க வேண்டும். எஸ்பி மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதியிடம் தெரிவித்து தீர்வு காண வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்ததால் இது குறித்து விளக்கம் அளிக்க தென் மண்டல ஐஜி அஸ்ராகர்க்குக்கு உத்தரவிடப்பட்டது. அவர் நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு ஒப்புகை சீட்டு வழங்க உத்தரவிட வேண்டும் என்றார். இதையடுத்து அவ்வாறு உத்தரவிடப்பட்டது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் திரும்ப அனுப்பக்கூடாது. குறைகளை விசாரணை அதிகாரியிடம் சுட்டிக்காட்ட வேண்டும். அவர் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உயர் நீதிமன்ற கிளைக்கு உட்பட்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகளுக்கு பதிவாளர் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். நிலுவை வழக்குகளை குறைப்பது தொடர்பாக மாவட்ட எஸ்பிக்களுடன் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் ஆகியோர் ஆலோசனை நடத்த வேண்டும்.

இந்நிலையில் தென் மண்டல காவல்துறையில் விசாரணை கண்காணிப்பு முறை, விசாரணையை உயர் அதிகாரிகள் மேற்பார்வையிடுதல், சாட்சிகளின் வாக்குமூலத்தை ஆடியோ-வீடியோ பதிவு செய்தல் ஆகிய மாற்றங்களை தென் மண்டல ஐஜி அஸ்ராகர்க் அமல்படுத்தியுள்ளார். இந்த நடைமுறைகள் காவல்துறையினர் பின்பற்றினால் குற்றவியல் நீதி அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இவை உயர் அதிகாரிகளின் பணிப்பளுவை அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதனால் சமுதாயம் பலன் பெறும். இந்த நடைமுறைகளை அமல்படுத்திய ஐஜி அஸ்ராகர்க் பாராட்டுக்கு தகுதியானவர். இந்த நடைமுறையால் விசாரணை மேம்படும் மற்றும் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்காமல் இருப்பது உறுதியாகும்.

தென் மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டம் வாரியாக வழக்குகளின் பட்டியலை ஐஜி தாக்கல் செய்துள்ளார். அதில் கன்னியாகுமரி, தேனி, நெல்லை, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கடந்த ஒரு ஆண்டில் 1,44,451 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் 19,783 குற்றப்பத்திரிகைள் கோப்புக்கு எடுக்கப்படவில்லை. இந்த பட்டியலை பார்க்கும் போது கடந்த ஒரு ஆண்டில் நிலுவை வழக்குகள் 65.77 சதவீதம் குறைந்துள்ளது. இது மிகப்பெரிய முன்னேற்றம். இந்த முறையை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இதை ஒருவர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

கீழமை நீதிமன்றங்களை உயர் நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி கீழமை நீதிமன்றங்களில் விசாரணை முறையாக நடைபெறுவதை உயர் நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென் மண்டல ஐஜி அறிக்கை அடிப்படையில் மாவட்டம் வாரியான அறிக்கையை முதன்மை மாவட்ட நீதிபதிகள் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை செப். 9-க்கு ஒத்திவைக்கபடுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE