நாங்களும் 'இந்தியா' அணிதான்: முதலமைச்சர் கோப்பை நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: "விளையாட்டு வீரர்களான நீங்கள் மட்டுமல்ல; இந்தியாவுக்காகத்தான் நாங்களும் பாடுபடுகிறோம். எங்கள் அணியும் ‘இந்தியா’அணிதான். அதன் வெற்றிக்காகத்தான் நாங்களும் ஒருங்கிணைந்து ’டீம் ஸ்பிரிட்டுடன்’ பாடுபடுகிறோம்" என்று முதலமைச்சர் கோப்பை நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் “முதலமைச்சர் கோப்பை – 2023” மாநில அளவிலான போட்டிகள் நிறைவு விழா நடைபெற்றது. அதிக பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாவட்ட அணிகளுக்கு பரிசுக் கோப்பைகளையும், 27-வது தேசிய மகளிர் கால்பந்து போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக அணியை சார்ந்த 22 வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 60 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் முதல்வர் வழங்கினார்.

“முதலமைச்சர் கோப்பை – 2023” மாநில அளவிலான இறுதிப் போட்டிகளில் தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த 27,000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். இதில் சென்னை மாவட்டம், 61 தங்கம், 33 வெள்ளி மற்றும் 19 வெண்கலப் பதக்கங்கள் வென்று பதக்கப் பட்டியலில் முதல் இடத்தையும், செங்கல்பட்டு மாவட்டம், 18 தங்கம், 19 வெள்ளி மற்றும் 18 வெண்கலப் பதக்கங்கள் வென்று இரண்டாம் இடத்தையும், கோயம்புத்தூர் மாவட்டம் 15 தங்கம், 13 வெள்ளி மற்றும் 24 வெண்கலப் பதக்கங்கள் வென்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

“முதலமைச்சர் கோப்பை – 2023”ல் முதல் மூன்று இடங்களை பெற்ற சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்ட அணிகளுக்கு பரிசுக் கோப்பைகளை வழங்கி பாராட்டிய முதல்வர் ஸ்டாலின் பேசியது: "தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறார்களே என்று வளர்ந்த பிள்ளைகளைப் பார்த்து சில பெற்றோர்கள் நினைப்பதுண்டு. விளையாட்டுத் துறை அமைச்சராக நம் பிள்ளை சிறப்பாக செயல்படுகிறார் என்று பெற்றவரை மகிழ வைக்கக்கூடியவராக உதயநிதி இருக்கிறார்.விளையாட்டைப் பார்ப்பவர்களுக்கு களிப்பாக இருக்கும். விளையாட்டுப் போட்டிகளை நடத்துபவர்களும், அதில் கலந்துகொள்பவர்களும் பொறுப்பாக இருக்க வேண்டும். இந்நிகழ்வை மிகுந்த பொறுப்புடன் நடத்தியிருக்கும் விளையாட்டுத் துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் எனது வாழ்த்துகள்.

நேரு உள் விளையாட்டரங்கைப் பார்க்கும்போது, என் நினைவுகள் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்குச் செல்கிறது. இங்குதான், கடந்த ஆண்டு அந்த நிகழ்வின் தொடக்க நிகழ்ச்சியும், நிறைவு நிகழ்ச்சியும் நடைபெற்றது. நீங்கள் அனைவரும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். மற்ற விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள் போல இல்லாமல், தமிழகத்தின், இந்திய நாட்டின் வரலாற்றை நமது மண்ணுக்கு விருந்தினராக வந்த வெளிநாட்டு வீரர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் மூலமாக அறிமுகப்படுத்தினோம். அதனால், கிடைத்த பாராட்டு அரசுக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கே சொந்தமானது.

அத்தகைய பெருமையைத் தேடித் தந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போதுதான், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்று நான் அறிவித்தேன். 15 விளையாட்டுகளில், பள்ளி, கல்லூரி, பொதுப் பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளின் கீழ் இந்தப் போட்டிகள் நடத்தப்படும் என்று நான் அறிவிப்பு செய்தேன். அந்த அறிவிப்பை நிகழ்த்திக் காட்டிய அமைச்சர் உதயநிதிக்கு பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த மே 8ம் தேதி, முதலமைச்சர் போட்டிக்கான தீரன் சின்னத்தையும் அதற்கான பாடலையும் நான் வெளியிட்டேன். ஜூன் 30ம் தேதி தொடங்கப்பட்ட இந்த போட்டிகள் இன்று நிறைவு கண்டுள்ளது. உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றப் பிறகு, விளையாட்டுத் துறையே ஒரு புத்துணர்ச்சி கண்டிருக்கிறது. நான் 2006ம் ஆண்டு கருணாநிதியின் அமைச்சரவையில் அமைச்சராக இடம்பெற்றபோது, பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டது இந்த நேரு உள் விளையாட்டரங்கில்தான்.

இங்குள்ள விளையாட்டு வீரர்களைப் போல நேரு விளையாட்டரங்கம் எனக்கும் சிறப்பான வாய்ப்பை கொடுத்தது. அப்போது நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தேன். அந்த துறையை நான் நிர்வகிப்பதைப் பார்த்தால், பொறமையாக இருப்பதாக அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி கூறினார். அந்தவகையில் இப்போது எனக்கு விளையாட்டுத் துறையின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. விளையாட்டுத் துறையால், அமைச்சர் பெருமை அடைவதையும், அமைச்சர் உதயநிதியால் விளையாட்டுத் துறை பெரும் அடையும் காட்சிகளை நான் பார்க்கிறேன். இவையெல்லாம் விளம்பரத்துக்காக செய்யப்படுபவை அல்ல. விளையாட்டுத்துறையின் செயல்பாடுகள் மூலம் இத்தகைய பாராட்டுகள் கிடைக்கிறது

‘டீம் ஸ்பிரிட்’ என்று விளையாட்டுக் களத்தில் சொல்வார்கள். விளையாட்டுப் போட்டிகளை நடத்தும்போதும் பல்வேறு துறையினருடன் இணைந்து செயல்படக்கூடிய இத்தகைய ’டீம் ஸ்பிரிட்’ தேவை. அந்த வகையில், போட்டிகளை நடத்துவதற்கான சிறப்பான சூழலை உருவாக்குவதில் நமது அரசு நற்பெயரை பெற்றிருக்கிறது. மிக குறுகிய காலத்தில், அதாவது நான்கே மாதத்துக்குள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நாம் நடத்திக் காட்டினோம்.

நமது விருந்தோம்பலைச் சிலாகித்து வெளிநாட்டு வீரர்கள் பலரும் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்தார்கள். உலக விளையாட்டு வீரர்களை மட்டுமல்ல, உள்ளூர் வீரர்களையும் நாம் மரியாதையுடன்தான் நடத்துவோம் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த விழா. இதனை நான் சொல்வதற்கு என்ன காரணம் என்றால், போட்டிகளில் பரிசுகள் வழங்குவதோடு அரசாங்கத்தின் கடமை முடிந்துவிடவில்லை. விளையாட்டு வீரர்களை மதித்து, அன்புடன் வரவேற்று அவர்களுக்கு வெற்றிகரமான சூழலையும் உருவாக்கித் தர வேண்டியதும் அரசின் கடமை. அதனை தமிழக விளையாட்டுத் துறை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறது.

மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்து வீரர்- வீராங்கனைகளையும் நான் மனதார பாராட்டுகிறேன். பலருக்குப் பதக்கங்கள் கிடைக்காமல் போயிருக்கலாம். அது முக்கியமல்ல; பங்கேற்புதான் முக்கியம். விளையாட்டில் வெற்றி என்பதே பங்கேற்பதும்; சளைக்காமல் போராடுவதும்தான். தனிப்பட்ட முறையில் எனக்கு விளையாட்டின்மீது இருக்கும் ஆர்வத்தைப் பலரும் அறிவீர்கள். அதனால்தான், கடுமையான பணிச்சூழலுக்கு இடையிலும் இந்த நிகழ்ச்சிக்கு நான் இங்கே வந்திருக்கிறேன். நான் மட்டுமல்ல; மறைந்த முதல்வர் கருணாநிதியும் மிகப்பெரிய விளையாட்டு ரசிகர். அதனால்தான் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தினார். 2006-ம் ஆண்டு நடைபெற்ற Asian Games-இல் வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை சாந்தியை, ”ஓடியது இந்த கால்கள் தானே!” என ஆதரித்து ஊக்கப்படுத்தினார்.

மறைந்த முதல்வர் கருணாநிதி நல்ல விளையாட்டுப் போட்டிகளை ரசிக்கக் கூடியவர். விளையாட்டில் நேர்மையும் அறமும் வேண்டும் என்று விரும்பியவர். அவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. வெற்றியையும் தோல்வியையும் இயல்பாக எடுத்துக் கொண்டு சளைக்காமல் போராடியவர் அவர். இதைத்தான் விளையாட்டுக் களத்தில் ’ஸ்போர்ட்ஸ்மேன் ஷிப்’ என்கிறார்கள். அரசியலில் அவர் ’ஸ்டேட்ஸ்மேனாக’ இருந்தார். அரசியலை அணுகுவதில் அவரிடம் ‘ஸ்போர்ட்ஸ்மேன் ஷிப்’ இருந்தது.

விளையாட்டில் நீங்கள் அனைவரும் அறத்தைப் பேண வேண்டும் என்று சொல்லி, மாநில அளவிலான போட்டிகளில் பங்கெடுத்து பதக்கங்கள் பெற்ற அனைவரையும் பாராட்டுகிறேன். நீங்கள் மேன்மேலும் வெற்றிகளை குவிக்க வேண்டும். மாநில அளவில் பல போட்டிகளில் பங்கேற்றுள்ள நீங்கள் இனி வருங்காலத்தில் இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டும். விளையாட்டு வீரர்களான நீங்கள் மட்டுமல்ல; இந்தியாவுக்காகத்தான் நாங்களும் பாடுபடுகிறோம். எங்கள் அணியும் ‘இந்தியா’ அணிதான். அதன் வெற்றிக்காகத்தான் நாங்களும் ஒருங்கிணைந்து- ’டீம் ஸ்பிரிட்டுடன்’ பாடுபடுகிறோம்.

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிப்பதைப் போலவே-விளையாட்டு மீதான ஆர்வத்தை அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஏற்படுத்த வேண்டும், வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அப்படிச் செய்தால் தமிழகத்தின் இளைய சக்தியானது ஈடு இணையற்ற சக்தியாக வளரும்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

41 secs ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்