நாட்டிலேயே முதல் மாநிலமாக ராஜஸ்தானில் குறைந்தபட்ச வருமான உறுதி திட்டம் நிறைவேற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: ராஜஸ்தானில் மகாத்மா காந்தி குறைந்தபட்ச வருமான உறுதி திட்ட மசோதா 2023 அம்மாநில சட்டப் பேரவையில் கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டிலேயே இதுபோன்ற சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமாக ராஜஸ்தான் திகழ்கிறது.

இச்சட்டத்தின் மூலம் கிராமம் மற்றும் நகரங்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் 125 நாட்களுக்கு உத்தரவாதமாக வேலை வாய்ப்பு கிடைக்கும். சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின்கீழ் முதியோர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், தனியாக வசிக்கும் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வழங்கப்படும். இத்தொகை ஆண்டுதோறும் 15 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் 2023-24-ம் ஆண்டு பட்ஜெட்டில் மாநில அரசு வழங்கும் அனைத்து ஓய்வூதியத் திட்டங்களுடன் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வேலை உறுதித் திட்டங்களை உள்ளடக்கிய சட்டத்தை உருவாக்கி, ஏழை மக்கள் மற்றும் குடும்பங்களுக்கு சமூகப் பாதுகாப்பு உரிமையை வழங்கும் நோக்கில் வரும் ஆண்டில் மகாத்மா காந்தி குறைந்தபட்ச உத்தரவாத வருமானத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக அறிவித்தார்.

கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டப்படி 100 வேலை நாட்களை நிறைவு செய்யும் குடும்பத்துக்கு முதல்வர் கிராம வேலை உறுதி திட்டத்தின் கீழ் 25 நாள் கூடுதல் வேலை வழங்கப்படும். நகரங்களில் ஒரு குடும்பத்துக்கு இந்திரா காந்தி நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தின்கீழ் 125 நாட்களுக்கு வேலை வழங்கப்படும். இவ்வாறு ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE