கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பெற விண்ணப்ப பதிவு - தருமபுரியில் முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

தருமபுரி: கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1,000 பெறுவதற்கான விண்ணப்ப பதிவை தருமபுரி மாவட்டம் தொப்பூரில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தகுதி வாய்ந்த பயனாளிகள் யாரும் விடுபடாத வகையில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும். இத்திட்டத்தால் பெண்கள் சுயமரியாதையும், பொருளாதார விடுதலையும் அடைவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றும் முகாம் தொடக்க விழா தருமபுரி மாவட்டம் தொப்பூரில் நேற்று நடந்தது. தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, விண்ணப்பங்களை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். விண்ணப்ப பதிவுக்காக வந்திருந்த பெண்களுடன் கலந்துரையாடினார்.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: முதல்வராக நான் பதவியேற்ற உடன், அரசு நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்துக்கு முதல் கையெழுத்திட்டேன். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் இதுவரை 283 கோடி முறை பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர். திட்டத்தை நிறைவேற்றும்போது அரசுக்கு கடும் நிதி நெருக்கடி இருந்தது. ஆனாலும், மகளிர் பயன்பெற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தை மட்டுமே பிரதானமாக கொண்டு செயல்படுத்தினோம்.

சுயமரியாதையுடன் வாழலாம்: மகளிர் உரிமை தொகை திட்டத்தையும் அப்போதே செயல்படுத்தி இருக்க வேண்டும். நிதி சூழலால் தற்போதுதான் இது பயன்பாட்டுக்கு வருகிறது. பெண்கள் சுயமரியாதையுடன் வாழவும், பொருளாதாரத்தில் மேம்படவும் உதவும் இந்த திட்டத்தை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். கொச்சைப்படுத்தி பிரச்சாரமும் செய்கின்றனர். அதுபற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் உயர்கல்விக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் தொடக்கநிலை வகுப்புகளில் படிக்கும் குழந்தைகள் காலை உணவை சரிவர உண்ணாமல் பள்ளிக்கு வருவதால் கல்வியில் கவனம் செலுத்த முடியாத நிலை இருந்தது. இதை தவிர்க்க, காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது 2 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். விரைவில் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டு, ஒரு நாளுக்கு 18 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும்.

மகளிருக்கு மாபெரும் கொடை: அதேபோல, மகளிர் உரிமை தொகை திட்டம் வரும் செப்.15-ம் தேதி முதல்பயன்பாட்டுக்கு வரும். இது பெண்களுக்கு திராவிட இயக்கம் வழங்கியுள்ள மற்றொரு மாபெரும் கொடை.

இது பெண்களின் சமூக பொருளாதார நிலையை உயரச் செய்யும் திட்டம் ஆகும். இத்திட்டத்தால் பெண்கள் சுயமரியாதையும், பொருளாதார விடுதலையும் அடைவார்கள். குடும்பத்தின் உயர்வுக்காக கடுமையாக உழைக்கும் பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

இந்த திட்டத்துக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றும் முகாம்கள் ஆக.28-ம் தேதி வரை சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் செயல்படும். இதற்காக தமிழகம் முழுவதும் 35,929 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை பதிவேற்றும் பணியில் 68,190 தன்னார்வலர்களும், மகளிருக்கு வழிகாட்டுதல் வழங்க 35,925தன்னார்வலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உதவிப் பணம் அல்ல; உரிமைப் பணம்: இதன்மூலம் மகளிருக்கு தரப்பட இருப்பது உதவிப் பணம் அல்ல. இது மகளிருக்கான உரிமைப் பணம். தகுதி வாய்ந்த பயனாளிகள் யாரும் விடுபடாத வகையில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு திட்டம் பயன்பாட்டுக்கு வரும். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் ஆட்சியின் சாதனை சரித்திரம் தொடரும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கே.என்.நேரு, தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, வெங்கடேஷ்வரன், ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முதல்வரின் செயலர் முருகானந்தம், மாவட்ட ஆட்சியர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE