தமிழகம், புதுச்சேரி நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் வைக்க அனுமதிக்க வேண்டும் - அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களில் அம்பேத்கர் படங்களை வைக்க அனுமதிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவுத்துறை, தமிழ்நாடு, புதுச்சேரி நீதிமன்றங்களில் காந்தி, திருவள்ளுவர் ஆகியோரின் உருவப்படங்களை மட்டுமே வைக்க ஆணை பிறப்பித்துள்ளது.

இதனால் ஆலந்தூர் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் சிலை அகற்றப்பட்டுள்ளது. இந்த புதிய போக்கு, பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே, ஆணையை சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் திரும்பப் பெற்று, அம்பேத்கரின் உருவப்படத்தை நீதிமன்றங்களில் இடம்பெற அனுமதிக்க வேண்டும்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் அம்பேத்கரின் சிலைகளையும், உருவப் படங்களையும் நீக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதுதான் நீதிமன்றங்களின் முக்கியக் கடமை. அப்படிப்பட்ட நீதிமன்றங்களில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் சிலைகளோ அல்லது புகைப்படங்களோ இடம்பெறுவது அவருக்கு நாம் செய்யும் மரியாதை. அந்தவகையில், நீதிமன்ற வளாகங்களில் அவை நிச்சயமாக இடம்பெற வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் சிலை, உருவப்படத்தை நீதிமன்றங்களில் வைப்பதால் சட்டம் -ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதுஏற்புடையதாக இல்லை. மேலும் அம்பேத்கர் படத்துடன் இதர தலைவர்களது படங்களை ஒப்பீடு செய்வதும் பொருத்தமற்றது. எனவே, அம்பேத்கரின் சிலைகள், உருவப்படங்களை நீதிமன்ற வளாகங்களில் இடம்பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: உயர்நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு வேதனையளிக்கிறது. சட்ட புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்திலும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது புகைப்படத்தையே நீதிமன்றங்களில் வைப்பதை தவிர்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே அவரது புகைப்படத்தை வைக்கக்கூடாது என்கிற உயர் நீதிமன்ற பதிவுத்துறையின் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: இந்திய அரசியல் சாசனத்தை எழுதும்குழுவை அம்பேத்கர் தலைமையில் அமைக்கலாம் என முன்மொழிந்தவர் காந்தி. அம்பேத்கர் தலைமையேற்று வழங்கிய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் இயங்கும் நீதிமன்றங்களில் அவரை புறக்கணிப்பது அநீதியானது. எனவே சுற்றறிக்கையைத் திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE