கும்பகோணம் சிறையில் கைதி மரணம்: சிறைக் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: கும்பகோணம் கிளை சிறையில் கைதி உயிரிழந்தது தொடர்பாக சிறைக் காவலர்கள் 3 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் சரவணன். இவருக்கு 7.6.2019 இரவில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை சிறைக் காவலர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு சரவணன் உயிரிழந்தார். இது தொடர்பாக தஞ்சாவூர் 3-வது நீதித்துறை நடுவர் விசாரித்து சிறைக் காவலர்கள் தாக்கியதில் சரவணன் உயிரிழந்ததாக அறிக்கை சமர்ப்பித்தார். இதையடுத்து கும்பகோணம் கிளைச் சிறை வார்டன் இளையராஜா, காவலர் வைரமூர்த்தி, உதவி ஜெயிலர் சுரேஷ்குமார் ஆகியார் மீது கொலை குற்றம் அல்லாத மரணம் விளைவித்தல் (304 (2)) பிரிவில் தஞ்சாவூர் கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் 3 பேரும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி வாதிடுகையில், தஞ்சாவூர் நீதித்துறை நடுவரின் பரிந்துரையின் பேரில் சிறைவாசி கணேசன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். இதனால் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ''சிறைவாசி கணேசனின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், உடல் உறுப்புகளிலும் காயங்கள் இருந்தாகவும், இந்த காயங்களால் இறப்பு ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்ய தகுதியான வழக்கு. இருப்பினும் இதுவரை கொலை வழக்காக மாற்றம் செய்யப்படாதது துரதிர்ஷ்டவசமானது. போலீஸார் மனுதாரர்கள் தலைமறைவாக இருப்பதாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஆனால் மனுதாரர்கள் தற்போதும் பணியில் உள்ளனர். மனுதாரர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் மனுதாரர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீஸார் மனுதாரர்களை பாதுகாக்கும் நோக்கத்தில் செயல்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்பதால் முன்ஜாமீன் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்றி 4 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். நீதித்துறை நடுவரின் அறிக்கை மற்றும் அரசின் உத்தரவு அடிப்படையில் மனுதாரர்கள் மீது திருச்சி டிஐஜி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த வழக்கில் நீதித்துறை நடுவர் அறிக்கை மற்றும் அரசின் உத்தரவு அடிப்படையில் மனுதாரர்கள் மற்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் குறித்து விசாரித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கை கொலை வழக்காக மாற்றிய பிறகு மனுதாரர்கள் மீது போலீஸார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE