‘ஆபத்தான’ ஆர்எஸ் மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை இடித்து புதிய கட்டிடம் கட்ட ஐகோர்ட் உத்தரவு 

By கி.மகாராஜன் 


மதுரை: இடிந்து விழுக்கூடிய ஆபத்தான நிலையில் இருக்கும் ஆர்எஸ் மங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை இடித்து, புதிய கட்டிடம் கட்ட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த கலந்தர் ஆசிக் அகமது, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'ஆர்எஸ் மங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் 30 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது அந்தக் கட்டிடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. அவ்வப்போது மேற்கூரை இடிந்து விழுகிறது. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் பணிக்கு வர அஞ்சுகின்றனர். நோயாளிகள் சிகிச்சைக்கு வர தயங்குகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டக் கோரி கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை. எனவே, ஆர்எஸ் மங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டவும், அதுவரை வேறு இடத்தில் மருத்துவமனை செயல்படவும் உத்தரவிட வேண்டும்' என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மாவட்ட நீதிபதி ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி மாவட்ட நீதிபதி ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் சேதமடைந்துள்ளது. ஆய்வுக்கு வருவது தெரிந்து பல இடங்களில் சிமென்ட் பூசப்பட்டு வர்ணம் அடிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை சுகாதாரத் துறை செயலருக்கு அனுப்பவும், சுகாதாரத் துறை செயலாளர் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், டி.பரதசக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. சுகாதாரத் துறை செயலாளர் தரப்பில், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.1.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ''மாவட்ட நீதிபதி அறிக்கை, புகைப்படங்களை பார்க்கையில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பது தெரிகிறது. இதுபோன்ற ஆபத்தான நிலையில் அந்த கட்டிடத்தில் மக்கள் சிகி்ச்சை பெறுவது என்பது நினைத்து பார்க்க முடியாது ஒன்று. எனவே சுகாதாரத் துறை செயலாளர் ஆர்.எஸ். மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். கட்டிடத்தை பழுதுபார்ப்பது என்பது பயனற்றாக தெரிகிறது. எனவே, சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

மருத்துவமனைக்கு வரும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தற்போது ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வரும் கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, அந்தக் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக வேறு கட்டிடத்துக்கு மாற்ற தொடர்ந்து சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரத் துறை செயலாளர் ஆய்வு மற்றும் கட்டிடத்தை இடித்தல், புதிய கட்டிடம் கட்டுதல் குறித்த விரிவான அறிக்கையை ஆகஸ்ட் 7-ல் தாக்கல் செய்ய வேண்டும்'' என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்