அசோக்குமார் தற்கொலை வழக்கில் தற்கொலைக்கான காரணத்தை அசோக்குமார் தெளிவாக எழுதி கந்துவட்டிதான் காரணம் என்று குறிப்பிட்டும் ஏன் போலீஸார் கந்துவட்டி பிரிவின் கீழ் வழக்கு தொடரவில்லை என்று சட்ட பஞ்சாயத்து இயக்க செயற்பாட்டாளர் செந்தில் ஆறுமுகம் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இயக்குநர், நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் நேற்று (செவ்வாய்க்கிழமை) தற்கொலை செய்துக்கொண்டார். அவரது மரணத்திற்கு முன்னர் தற்கொலைக்கான காரணம் பற்றி எழுதும் போது சினிமா பைனான்சியரின் கந்துவட்டி பிரச்சனையில் மீள முடியாமல் இந்த முடிவை தேடுவதாக எழுதி வைத்திருந்தார்.
இந்தக் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சசிகுமார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் தற்கொலைக்கு தூண்டுதல் என்ற (பிரிவு 306) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் கந்துவட்டி தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவில்லை.
இதுபற்றி நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸும் கேள்வி எழுப்பிய நிலையில், சட்ட பஞ்சாயத்து செயற்பாட்டாளர் செந்தில் ஆறுமுகத்திடம் 'தி இந்து' தமிழ் இணைய தளம் சார்பில் கேள்வி எழுப்பினோம். அப்போது அவர் கூறியதாவது:
முதலில் இந்த விவகாரத்தில் திரையுலகினர் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்கிறேன் என்று அவர்கள் கால்ஷீட் கிடைத்தால் போதும் என அகலக்கால் வைக்கிறார்கள். அந்த நேரத்தில் பணம் கொடுக்கும் பைனான்சியர்கள் படம் முடிந்து கடைசி நேரத்தில் படம் ரிலீஸாகும் நேரத்தில் பணத்தை செட்டில் செய்ய வேண்டும் என ரெட் கார்டு போடுகிறார்கள்.
கடைசி நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் எந்த நிலைக்கும் தயாரிப்பாளர்கள் கிடைத்த இடத்தில் பணம் வாங்குகின்றனர். அவசரத்தில் படத்தை ரிலீஸ் செய்தே தீர வேண்டிய கட்டாயத்தில் கிடைத்த இடத்தில் கையெழுத்து போடுவதும், சொத்துப் பத்திரங்களை கொடுத்தும் பணம் வாங்குகின்றனர்.
படம் வெளியாகி ஓடினால் சரி, ஆனால் படம் ஓடாவிட்டால் அவ்வளவுதான். இதற்குக் காரணமே ஒரு பக்கம் படம் தயாரிப்பவர்களின் ஆசைதான். இதைத்தான் கந்துவட்டி நபர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
பணமதிப்பு நீக்கம், டிஜிட்டல் இந்தியா என்றெல்லாம் பேசுகிறோம் ஆனால் கரன்சியாக கோடிக்கணக்கில் எப்படி புரள்கிறது?
அதற்கு முக்கியக் காரணம் பணம் எங்கிருந்து வருகிறது என்பதைப் பார்க்க வேண்டும். அன்புசெழியன் போன்றோர் 2003-ல் ஜிவி தற்கொலையில் பேசப்பட்டவர். ஆனால் இதுவரை அந்த விவகாரத்தில் அவர் மீது நடவடிக்கை இல்லை.
அதன் பிறகும் பலரும் பாதிக்கப்பட்டபோதும் யாரும் புகார் அளிக்கவும் இல்லை. அளிக்கும் தைரியமும் இல்லை. ஒரே ஒரு தடவை 2011-ல் அவர் மீது புகார் வந்து கைது செய்யப்பட்டார். அன்புசெழியன் சக்தி மிக்கவராக இருப்பதற்குக் காரணமே அவரது அரசியல் பின்புலம்தான். அதன் மூலம் செல்வாக்கை வளர்த்துக்கொண்டதால் யாரும் நெருங்குவதில்லை.
இந்த விவகாரத்தில் கூட தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார் தனது கடிதத்தில் தெளிவாக இவர்தான் காரணம், கந்துவட்டி பிரச்சினைதான் என்று எழுதிய பிறகும் போலீஸார் தற்கொலைக்கு தூண்டுதல் என்ற சாதாரணப் பிரிவை மட்டுமே பதிவு செய்துள்ளனர். கந்துவட்டி தடுப்புச் சட்டப்பிரிவை சேர்க்கவில்லை.
என்ன காரணம் என்று சொல்கிறீர்கள்?
அரசியல் பின்புலம், காவல்துறை ஒத்துழைப்பு இல்லாமல் இதில் இவ்வளவு பணம் புழங்க முடியாது. சக்திமிக்க அரசியல்வாதிகள், காவல்துறையினர் தவறாக சம்பாதிக்கும் பணத்தை இதுபோன்ற ஆட்களை பினாமியாக வைத்து பைனான்ஸ் விடப்படுகிறது. அதில் பிரச்சனையாகி இவர்கள் சிக்கும் போது சம்பந்தப்பட்ட அதிகார பலம் அவர்களை காப்பாற்றுகிறது. அதனால் தான் அன்புசெழியன் இத்தனை ஆண்டுகாலம் இப்படி வலம் வர முடிகிறது.
தவறான வழியில் பொருளீட்டுபவர்கள் அவர்களது பணத்தை இவர்கள் மூலம் முதலீடு செய்வதால் தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகும், “டிஜிட்டல் இந்தியா” “கேஸ்லெஸ் ட்ரான்ஸக்ஷன்” என்று மாறிய பிறகும் “லிக்யூட் கேஷ்” எனப்படும் அந்த கரன்சி புழக்கம் இந்தத் துறையில் இன்றும் உள்ளது. கடன் கேட்டவுடன் 20 கோடி , 30 கோடி கரன்சியாக கிடைக்கிறது. இவைகளை தடுக்க முடியாது. இதை தெரிந்தே தான் செய்கிறார்கள்.
இந்தப் பிரச்சினையில் ஏதாவது மாற்றம் வருமா?
ஒரு மாற்றமும் வராது. இதற்குப் பின்னால் அரசியல், காவல் பின்புலம் இருப்பதால் ஒரு நடவடிக்கையும் வராது. வேலியே பயிரை மேயும் நிலைதான். இப்போதும் அசோக்குமார் விவகாரத்தில் பொதுமக்கள் எதிர்ப்பைப் பார்த்து கொஞ்சம் நடவடிக்கை எடுப்பது போல் நடப்பார்கள். சிறிது நாள் கழித்து அனைவரும் இந்த விவகாரத்தை மறந்துவிட்டு அடுத்த விஷயத்துக்குப் போய் விடுவோம்.
சினிமாத்துறையில் படம் தயாரிப்பவர்கள் மன நிலையில் மாற்றம் வராத வரையில் இந்த பிரச்சினை இருக்கும். தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், பொதுமக்கள் எதிர்ப்பு இவ்வளவு இருந்தும் நடவடிக்கை இல்லை என்றால் அன்புசெழியன் எவ்வளவு சக்தி மிக்கவர் என்பதை பார்த்துக்கொள்ளலாம்.
இது போன்ற பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாதா?
இதைத் தடுக்க தீவிரமாக கண்காணிப்பதுதான் ஒரே வழி. ஒரு படம் எடுக்கும் போது அதன் செலவு, ஜி.எஸ்.டி வரி அதிகபட்சமாக 28 சதவீதம் வரை போடுகிறார்கள், அதைக் குறைத்து 2,4,8,16 படிகளாக வைக்க வேண்டும். வருமான வரியும் அதிகம் உள்ளது. 30 சதவீதம் வரை போடுகிறார்கள். அது 16 சதவீதத்தை தாண்டக்கூடாது. வருமான வரி ஜி.எஸ்.டி இரண்டும் சேர்ந்து 32 சதவீதத்தை தாண்டக்கூடாது. இப்படி வரி வசூல் செய்தாலே சரியாக வசூலாகும் அரசுக்கு வருவாய் உபரியாக இருக்கும்.
ஆனால் அந்த வரி வசூலில் தயவு தாட்சண்யம் காட்டக்கூடாது. நடவடிக்கை கடுமையாக இருக்க வேண்டும். தற்போது வரி அதிகம் வசூலிப்பதால் தான் இது போன்று மறைமுகமாக பைனான்ஸ் வாங்குவது கணக்கில் வராத பணத்தை கையாளுவது போன்றவை நடக்கிறது.
இவ்வாறு செந்தில் ஆறுமுகம் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago