மேகேதாட்டு அணைக்கான திட்ட அறிக்கை அனுமதியை திரும்பப்பெற வேண்டும் - மத்திய அரசுக்கு அன்புமணி கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: மேகேதாட்டு அணை தொடர்பாக வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேகேதாட்டு என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் நிலம் கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்வதுக்காக 29 வன அதிகாரிகளை கர்நாடக அரசு அமர்த்தியிருக்கிறது. மேகேதாட்டு அணைக்கு அனுமதி அளிப்பது குறித்து காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பதற்குக் கூட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதை மீறி மேகேதாட்டு அணை கட்டுவதற்கான பணிகளை கர்நாடகா மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.

காவிரி ஆற்றில் கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கிடைக்கும் தண்ணீரில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்துக்கு கிடைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அம்மாநில ஆட்சியாளர்கள், அதற்காக மேகேதாட்டு என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 67.14 டி.எம்.சி கொள்ளளவுள்ள அணையை ரூ.9,000 கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டிருக்கின்றனர். தமிழகத்தின் ஒப்புதலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அனுமதியும் இல்லாமல் அந்த அணையை கர்நாடக அரசால் கட்ட இயலாது. தமிழகத்தின் ஒப்புதல் இல்லாத நிலையில், காவிரி ஆணையத்தின் அனுமதியைப் பெற்று அணையை கட்டுவதுக்கான முயற்சிகளில் கர்நாடகத்தை ஆட்சி செய்த முந்தைய பாரதிய ஜனதா அரசு முயன்றது. ஆனாலும், அதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேகேதாட்டு அணை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடை விதித்தது.

மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்கவே கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில், அணை தொடர்பான எந்த பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது. அதையும் மீறி ஏதேனும் பணிகளை மேற்கொண்டால் அது உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். இந்த உண்மைகளை அறிந்தும் கூட மேகேதாட்டு அணை கட்டுவதுக்கான வனத்துறை நிலங்களை கணக்கெடுக்கும் பணிகளை செய்வதற்காக 29 அதிகாரிகளை அமர்த்துவது என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், கூட்டாட்சித் தத்துவத்தையும், அண்டை மாநில உறவுகளின் மாண்புகளையும் அவமதிக்கும் செயலாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம், உச்சநீதிமன்றம் ஆகிய எதன் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை; மேகேதாட்டு அணை கட்டுவது மட்டும் தான் எங்களின் ஒற்றை நோக்கம் என்பதை இதன்மூலம் கர்நாடக அரசு சொல்லாமல் சொல்லியிருக்கிறது. இதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கக்கூடாது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 114.57 டிஎம்சி. இவ்வளவு கொள்ளளவுள்ள அணைகள் இருக்கும் போதே கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுப்பதையும், அதனால் குறுவை பயிர்கள் காயும் சூழல் உருவாவதையும் இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இத்துடன் 67.14 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகேதாட்டு அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 181.71 டிஎம்சியாக அதிகரிக்கும். மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகா தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி பாசனப் பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு பாலைவனமாகிவிடும்.

சுற்றுச்சூழல் சார்ந்து பார்த்தாலும் மேகேதாட்டு அணை ஒரு பேரழிவு தான். கர்நாடக அரசு ஏற்கனவே தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கையின்படி, மேகேதாட்டு அணை மொத்தம் 12,979 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. அதில் 12,345.40 ஏக்கர் பகுதியில் நீர் தேக்கி வைக்கப்படும். நீர்த்தேக்கப் பகுதிகளில் சுமார் 11,845 ஏக்கர் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியாகும். இதனால் சுற்றுச்சூழலுக்கு சரி செய்ய முடியாத அளவுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும்.

இத்தகைய கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மேகேதாட்டு அணையை கட்டுவதற்கு தான் கர்நாடக அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. கர்நாடக அரசின் இத்தகைய அத்துமீறல்கள் அனைத்துக்கும் காரணம், மேகேதாட்டு விவகாரத்தின் தொடக்கத்தில் மத்திய அரசு செய்த தவறுகள் தான். 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மேகேதாட்டு அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு அளித்த அனுமதி தான் முதல் தவறு ஆகும். இந்த அனுமதியைப் பயன்படுத்தி தான் மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகா தயாரித்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் தாக்கல் செய்து, அதற்கு ஒப்புதல் கேட்டுக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் சட்டவிரோதமானவை.

வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு அளித்த அனுமதி தவறு; அதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறித்தான் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. வரைவு திட்ட அறிக்கைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு விட்டால், மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை செல்லாததாகி விடும். அதனால், மேகேதாட்டு அணை குறித்த எந்த பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ள முடியாது. எனவே, மேகேதாட்டு அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். அதேபோல், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான இத்தகைய செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும்; கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாக வழக்கு தொடர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்