தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு
திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூலை 23) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை 24, 25-ம் தேதிகளில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் சில இடங்களிலும், தென் தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 26, 27, 28-ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான
மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 83 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

ஜூலை 22-ம் தேதி (நேற்று) காலை பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 செ.மீ., நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் சந்தை, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ., சிறுவாணி அடிவாரம், நீலகிரி மாவட்டம் வொர்த் எஸ்டேட் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE