மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்ற 36 ஆயிரம் முகாம்கள் - முதல்வர் நாளை தொடங்கிவைக்கிறார்

By செய்திப்பிரிவு

தருமபுரி/சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தருமபுரி மாவட்டம் தொப்பூரில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் நாளை (ஜூலை 24) தொடங்கி வைக்கிறார். முதல்வர் வருகையையொட்டி மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் மேற் பார்வையில் 1,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுக வெற்றிபெற்று, மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அமைச்சரவை பொறுப்பேற்றது.

தமிழக அரசின் நிதிநிலை நெருக்கடியால், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற முடியாத சூழல் நிலவியது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தன. இதுகுறித்து கேள்வி எழும்போதெல்லாம் ‘விரைவில் திட்டம் நிறைவேற்றப்படும்’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மகளிர் நலன்காக்க நிறைவேற்றிய திட்டங்களைப் போற்றும் வகையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு `கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்' என்று பெயரிடப்பட்டது.

மேலும், நடப்பாண்டு தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தில், மகளிர் உரிமைத்தொகை திட்டம், அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியானவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.

1 கோடி மகளிரின் வங்கிக் கணக்கில்...: இந்த திட்டம் மூலம் முதல்கட்டமாக சுமார் ஒரு கோடி மகளிரின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்
தொகை நேரடியாக செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அதில், "தமிழக வரலாற்றில் மாபெரும் திட்டமாக அமையப்போகும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டுவிடக் கூடாது’ என்று மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று, மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை விநியோகம் செய்து வருகின்றனர். விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெறும் இடம், நாள், நேரம் உள்ளிட்ட தகவல்கள், அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த திட்டத்துக்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நாளை முதல் விண்ணப்பங்களைப் பதிவேற்றும் பணி நடைபெறுகிறது. தொடர்ந்து, தகுதியான மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இந்த முகாமை முதல்வர் மு.க.ஸ்டா லின் தருமபுரி மாவட்டத்தில் நாளை தொடங்கிவைக்கிறார். இதற்காக, தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யும் பணியைத் தொடங்கி
வைக்கிறார். இதற்காக, நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் மாவட்டம் காமலாபுரம் விமான நிலையம் வரும் முதல்வர், அங்கிருந்து சாலை மார்க்கமாக தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்கு வருகிறார்.

அங்கு, காலை 9.30 மணியளவில் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யும் பணியைத் தொடங்கிவைத்து, மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் சிலருடன் கலந்துரையாடுகிறார்.

தொடர்ந்து, அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்குச் சென்று, மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து உரையாற்றுகிறார். பின்னர் சாலை மார்க்கமாக சேலம் விமான நிலையம் சென்று, அங்கிருந்து சென்னை செல்கிறார்.

1,000 போலீஸார் பாதுகாப்பு: முதல்வரின் தருமபுரி வருகையை முன்னிட்டு, மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் மேற்பார்வையில், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் 5 மாவட்ட எஸ்.பி.க்கள், 6 ஏடிஎஸ்பி-க்கள், 9 டிஎஸ்பி-க்கள் மற்றும் 1,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

தலைமுறைகளைத் தாண்டி...: இதற்கிடையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: மகளிர் முன்னேற்றத்தில் பெரும் பாய்ச்சலாக அமையவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைச் சுற்றியே என் எண்ணங்கள் உள்ளன.

தகுதி வாய்ந்த மகளிர் அனைவரையும், இந்த திட்டம் போய்ச் சேர வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. தமிழக மகளிரின் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் திட்டம் 1989-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட அதே
தருமபுரியில்தான், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான முகாமை ஜூலை 24-ம் தேதி (நாளை) தொடங்கிவைக்கிறேன்.

தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த முகாம்களை அமைச்சர்கள் அனைவரும் பார்வையிட வேண்டுமென அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளேன். கலைஞரின் நூற்றாண்டில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், ஒரு தலைமுறையையே மாற்றக் கூடிய திட்டம் மட்டுமல்ல, பல தலைமுறைகளைத் தாண்டியும் பயனளிக்கக் கூடியத் திட்டமாக விளங்கும் என எண்ணித் துணிகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்