“மணிப்பூர் விவகாரத்தில் இபிஎஸ் வாய் திறக்காதது ஏன்?” - அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: “மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காதது ஏன்?” என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பின்னர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது மணிப்பூர் விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், "மணிப்பூர் கலவரம் எப்போதும் இல்லாத வகையில் உலகளாவிய அளவில் கவனத்தை பெற்றுள்ளது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக திமுக தெளிவான கருத்தை தெரிவித்துள்ளது. முதல்வர் கடும் கண்டத்தை பதிவு செய்துள்ளார். மிகக் கடுமையான எதிர்வினையை திமுக தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் இது தொடர்பாக விவாதிக்க நோட்டீஸ் அளித்துள்ளார்கள்.

திமுக மகளிர் அணியின் சார்பில் சென்னையில் இன்று மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாளை மாவட்ட தலைநகரங்களில் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில், நான் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன். மிகப் பெரிய சம்பவம் நடந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இதை கண்டித்து இருக்கிறார். நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்கள், பெண்களின் பாதுகாப்பில் அக்கறை உள்ள அனைவரும் கண்டித்துள்ளனர்.

ஆனால், தமிழகத்தின் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக இதுவரை மணிப்பூர் விவகாரம் குறித்து வாய் திறக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாங்கள் யாருக்கும் அடிமையாக இல்லை என்று கூறுகிறார். ஆனால், இதுவரை மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பழனிசாமியிடம் இருந்து ஒரு வார்த்தை வராதாதை பார்க்கும்போது, அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

மேலும் முதியோர், கணவரை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் அவர் தெரிவித்தார். அதன் விவரம்: முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை உயர்வு: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE