முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை உயர்வு: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

By செய்திப்பிரிவு

சென்னை: முதியோர், கணவரை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. புதிய தொழில் திட்டங்கள், கலைஞர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், புதிய தொழில் முதலீடுகள், விரிவாக்கம், அமைச்சர்கள் மீதான அமலாக்கத் துறை நடவடிக்கை, அரசியல் சூழல் குறித்து தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், "முதியோர் உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200-ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,500-ஆகவும், கணவரை இழந்த பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200-ஆகவும் உயர்த்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்பதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுமார் 30 லட்சம் பேர் சமூக நலப் பாதுகாப்பு திட்டங்கள் மூலமாக பயனடைகின்றனர். உதவித் தொகை விண்ணப்பித்து காத்திருக்கக் கூடியவர்களுக்கும் விரைவில் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்முலம் சமூக நலத் திட்டங்களுக்கு ரூ.845 கோடி கூடுதலாக செலவாகும். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து உதவித் தொகை உயர்த்தியது நடைமுறைக்கு வரும்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு முதல் கட்டமாக 21,000 முகாம்கள், 2-வது கட்டமாக 14,000 முகாம்கள் அமைக்கப்படவுள்ளது. தற்போது வரை 50 லட்சம் பேருக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களுக்கான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE