சென்னை: தமிழகத்தில் சிப்காட் அமைக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் வளாகத்தின் விரிவாக்கத்துக்கு மேல்மா, குறும்பூர் உள்ளிட்ட 11-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 2700 ஏக்கருக்கும் கூடுதலான விளைநிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. எதிர்ப்பு தெரிவிக்கும் உழவர்களின் உணர்வுகளை மதிக்காமல் அடக்குமுறையை ஏவி நிலங்களைப் பறிக்க அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய சிப்காட் தொழிற்பூங்கா திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பெரிய சிப்காட் வளாகம் 3,074 ஏக்கர் பரப்பளவில் ஓரகடத்தில் அமைந்திருக்கும் நிலையில், அதற்கு அடுத்த நிலையில் உள்ள செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காவின் இரு அலகுகள் மொத்தம் 2,937 ஏக்கரில் செயல்பட்டு வருகின்றன. செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காவின் மூன்றாவது அலகை அமைக்க தீர்மானித்துள்ள தமிழக அரசு, அதற்காக மொத்தம் 3,174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்திருக்கிறது. அவ்வாறு கையகப்படுத்தவிருக்கும் நிலங்களில் 361 ஏக்கர் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்கள். மீதமுள்ள 2700-க்கும் கூடுதலான ஏக்கர் நிலங்கள் தனியாருக்கு சொந்தமான வளமான வேளாண் விளைநிலங்கள் ஆகும்.
செய்யாற்றை ஒட்டிய வட ஆளப்பிறந்தான், மேல்மா, தேத்துறை, இளநீர்குன்றம், குறும்பூர், நர்மாபள்ளம், அத்தி, வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த நிலங்கள் முப்போகம் விளையக்கூடியவை ஆகும். இந்த நிலங்களின் உரிமையாளர்களுக்கு வேளாண்மையைத் தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது. இந்த நிலங்கள் தான் அவர்களின் வாழ்வாதாரமாக விளங்குகின்றன.
» மகளிர் திட்டங்களை தருமபுரி மண்ணில் தொடங்குவது திமுக ஆட்சியின் வழக்கம்: வேளாண் அமைச்சர் பெருமிதம்
» தருமபுரி | உயிரிழந்த யானைகளின் 2 ஜோடி கோரைப்பற்களை தீயிட்டு எரித்து அழித்த வனத்துறை
சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்துக்காக இந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், வாழ்வாதாரத்தை இழந்து சொந்த ஊரில் அகதிகளாகி விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக நிலங்களை எடுப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களின் உணர்வுகளை மதித்து நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடுவது தான் மக்கள் நல அரசுக்கு அழகு ஆகும். ஆனால், அரசோ, அதனிடமுள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி நிலத்தைப் பறிக்க துடிக்கிறது. இதை அனுமதிக்க முடியாது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பை பெருக்குவதற்கும், வறுமை ஒழிப்பதற்கும் உதவும் தொழில் வளர்ச்சித் திட்டங்களில் சிப்காட் தொழிற்பூங்கா திட்டம் மிகவும் சிறந்தது என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அந்த வகையில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் வரவேற்கப்பட வேண்டியவை. தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிப்காட் தொழிற்பூங்காக்களை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி நானே போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். ஆனால், ஒரு பிரிவினருக்கு வாழ்வாதாரங்களை உருவாக்க அமைக்கப்படும் தொழிற்பூங்கா, விளைநிலங்களைப் பறித்து இன்னொரு பிரிவினரின் வாழ்வாதாரங்களை முடக்குவதாக அமைந்து விடக் கூடாது. தொழிலுக்காக உழவு ஒருபோதும் அழிக்கப்படக் கூடாது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பாலியப்பட்டு பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காக 1000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்களை கையகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு எதிராக அப்பகுதியில் உள்ள உழவர்கள் போராட்டங்களை நடத்தினார்கள். பாட்டாளி மக்கள் கட்சியும் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியது. அதன்பயனாக அங்கு நிலம் எடுக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால், அப்பகுதியில் உள்ள உழவர்கள் நிம்மதியடைந்துள்ள நிலையில், அடுத்து செய்யாறு பகுதியில் 2700 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்களை கையகப்படுத்தத் துடிப்பது சரியல்ல.
சிப்காட் விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அப்பகுதியில் உள்ள உழவர்கள் போராடி வருகின்றனர். அவர்களுடன் அமைதிப் பேச்சு, கருத்துக்கேட்பு கூட்டம் ஆகியவற்றை அரசு நடத்தியது. மக்களின் விருப்பத்தை மதிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருந்தால், அந்தக் கூட்டங்களில் மக்கள் வெளிப்படுத்திய உணர்வுகளை புரிந்து கொண்டு நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, கையகப்படுத்தப் படவிருக்கும் நிலங்களுடன் சம்பந்தமில்லாத சிலரை ஆளுங்கட்சியினரே கூட்டத்துக்கு அழைத்து வந்து, நிலங்களை கையகப்படுத்துவதற்கு ஆதரவாக பேச வைத்துள்ளனர். அதைக் கண்டித்து உழவர்கள் வெளிநடப்பு செய்ததால் பேச்சுகள் தோல்வியடைந்து விட்டன. இத்தகைய வழிமுறைகள் தவறானவை.
விளைநிலங்களை பாதுகாக்கும் விஷயத்தில் அரசு இரட்டை நிலைகளை கடைப்பிடிக்கக்கூடாது. அன்னூர் பகுதியில் சிப்காட் அமைக்க நிலங்களை கையகப்படுத்த உழவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்தது. அந்த நிலைப்பாட்டை தமிழகத்தின் பிற பகுதிகளில் கடைபிடிக்க தமிழக அரசு மறுப்பது தவறு. தமிழத்தின் எந்த பகுதியிலும் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கை அறிவிப்பாக தமிழக அரசு வெளியிட வேண்டும். செய்யார் தொழிற்பூங்கா விரிவாக்கத்துக்கு நிலம் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்து உழவர்களின் வாழ்க்கையில் அரசு விளக்கேற்ற வேண்டும்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago