தமிழகத்தின் மொத்தக் கவனமும் சென்னையின் மீது விழுந்திருக்கிறது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. வெளியூர்களில் இருந்து பதற்றமாக விசாரிக்கிறார்கள். இத்தனைக்கும் இந்த முறை புயல் எதுவும் இல்லை. சொல்லப்போனால் சென்னையில் இந்த ஆண்டு வந்தது வெள்ளமே இல்லை. பெய்தது கனமழை மட்டுமே. இதுவும் இயல்பாக பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவ மழை மட்டுமே. பின்பு ஏன் மிதக்கிறது சென்னை?
முன்பாக ஒரு விஷயம்... இனி ஒவ்வொரு மழைக்குமே சென்னை இப்படிதான் மிதக்கும். இதுவே யதார்த்தம். இனி சவாலை எதிர்கொண்டு சிரமங்களை வெல்வது எப்படி என்பது பற்றிதான் யோசிக்க வேண்டும். சென்னையின் வெள்ளத்தை சமாளிக்க இனி புதியதாகச் செய்ய எதுவும் இல்லை. புதிய திட்டங்களை செயல்படுத்த சென்னையில் இடமும் இல்லை. எனவே, ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களை சீரமைப்பதும் அதில் இருக்கின்ற குறைகளை நீக்குவதுமே தீர்வாக அமையும்.
நீர்ப் பிடிப்புப் பகுதி ஆக்கிரமிப்புகள்
சென்னைக்கு கிழக்கே கல்பாக்கம் அருகே பாலாற்றுக் கரையிருந்து வடக்கே கொசஸ்தலை அடுத்த தடா வரை பரந்திருக்கிறது அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறுகளின் மொத்த நீர்ப் பிடிப்புப் பகுதிகள். இந்த 3 ஆறுகளின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளும் இப்போது சின்னாபின்னமாகியிருக்கின்றன.
செங்கல்பட்டு - மாமல்லபுரம் - கேளம்பாக்கம் - சோழிங்கநல்லூர் - ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் ஆகியவை அடையாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள். இங்கிருந்த நூற்றுக்கணக்கான ஏரிகள் அடையாற்றின் வெள்ளத்தை கட்டுப்படுத்தின. வாலாஜா தொடங்கி திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகள். திருவள்ளூர், திருத்தணி, தடா, சித்தூர், புழல், செங்குன்றம் ஆகியவை கூவம் மற்றும் கொசஸ்தலை ஆறுகளின் நீர்ப் பிடிப்புப் பகுதிகள்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கடந்த 2008-ம் ஆண்டு உருவாக்கிய ‘மாஸ்டர் பிளான் - 2’-ல் சென்னையில் வரும் 2026-ம் ஆண்டு வரை ஏற்படும் மாற்றங்கள், தேவையான திட்டங்கள் ஆகியவை நில பயன்பாட்டு கட்டுப்பாடு வரையறைகளுடன் அமைக்கப்பட்டது. அதன்படி புழல் நீர்ப் பிடிப்புப் பகுதிகள், பழைய மகாபலிபுரம் சாலையின் பல்வேறு பகுதிகள், கிழக்கு கடற்கரை மற்றும் எண்ணூர் கடலையொட்டிய பகுதிகளில் புதிய கட்டுமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை இதே பகுதிகளில் ‘நில பயன்பாடு மாற்றம்’ என்கிற பெயரில் ஏராளமான கட்டுமானங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி அளித்துள்ளது.
புழல் நீர்ப்பிடிப்புப் பகுதியாக வரையறுக்கப்பட்ட இடத்தில் தனியார் கல்வி நிறுவனத்துக்கு 150 ஏக்கர் அனுமதி, மாடம்பாக்கம் குன்றத்தூர், பள்ளிக்கரணை, பொழிச்சலூர் பகுதிகளில் விவசாயம் மற்றும் நீர் நிலைகளின் நிலங்கள் வணிக நிலமாக பயன்பாடு மாற்றம் செய்யப்பட்டது.
கடந்தக் காலத் திட்டங்கள் என்ன?
இதுபோன்று அரசு விதிமுறைகளை தளர்த்தி மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளால் மழைக் காலங்களில் சங்கிலித் தொடர் போல சீரான வேகத்தில் சென்று கடலில் கலக்க வேண்டிய மழை நீர், ஆக்ரோஷமான வெள்ள நீராக மாறி குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து விடுகிறது.
சரி, வெள்ளத்தைக் கட்டுப்படுத்த அரசு என்ன செய்தது என்ற கேள்விக்கு நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்பதுதான் பதில். ஆனால் அத்தனையிலும் அலட்சியம், ஊழல். ஆவணங்களில் இருக்கும் தகவல்களின் அடிப்படையில் சென்னையின் முதல் நீர்வழி சீரமைப்பு மற்றும் மேலாண்மைத் திட்டம் (தூர் வாருதல் உள்ளிட்ட செப்பனிடும் பணிகள்) 1943-ம் ஆண்டு கூவம் வெள்ளத்துக்குப் பிறகு பொறியாளர் ஏ.ஆர். வெங்கடாச்சாரி அறிக்கையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது.
அடுத்து, 1976-ம் ஆண்டு அடையாறு சீரமைப்புத் திட்டம் பொறியாளர் பி.சிவலிங்கம் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. தொடர்ந்து உலக வங்கியின் வடிகால் கட்டமைப்பு நிபுணர் ஜே.ஹெச்.காப் திட்ட அறிக்கையின் அடிப்படையில் சென்னையின் கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 1980-ல் பொதுப்பணித் துறையின் ‘நியூகிளியஸ் செல்’ அறிக்கையின் அடிப்படையில் நீர் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
மேலும் 1992-93-ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த மோத் மேக் டோனால்டு இண்டர்நேஷனல் நிறுவனம் கூவம், பள்ளிக்கரணையில் ஆய்வு மேற்கொண்டு, ‘மெட்ராஸ் மெட்ரோ வெள்ள தணிப்பு மற்றும் புயல் வெள்ளத் தடுப்பு மாஸ்டர் பிளான்’ அறிக்கை வெளியிட்டது. இதே நிறுவனம் 1994-ம் ஆண்டு ‘சென்னை நகரத்துக்கான புயல் வெள்ள முன் சாத்தியக்கூறு அறிக்கை’ வெளியிட்டது.
பின்னர் 1995-ம் ஆண்டு கே.பி.என். பொறியியல் நிறுவனம் மற்றும் முகேஷ் அசோசியேட்ஸ் நிறுவனங்கள் இணைந்து சென்னை வடிகால் கட்டமைப்பு மீதான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டன.
1998-ம் ஆண்டு ‘நீரி’ நிறுவனம் பள்ளிக்கரணை சதுப்பு மேம்பாட்டுத் திட்ட அறிக்கையை வெளியிட்டது. இவை தவிர 1998-2005 ஆண்டு வெள்ளத் தடுப்புக்கான உத்தேச வரைவு திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. தொடர்ந்து சென்னை மாநகர சிறு மற்றும் பெரு கால்வாய்கள் ஒருங்கிணைந்த திட்ட அறிக்கை, நீர் நிலைகளில் கலக்கும் கழிவு நீர் தொடர்பான ஆய்வறிக்கை, நீர் நிலைகளில் சுற்றுச்சூழல் மேம்பாட்டு அறிக்கை, சென்னை நீர் நிலைகள் பாதுகாப்பு திட்ட அறிக்கை, சென்னை நகர நதிகள் பாதுகாப்புத் திட்ட அறிக்கை, சென்னை பெருநகர மேம்பாட்டுத் திட்ட அறிக்கை ஆகியவை வெளியிடப்பட்டன.
இவற்றில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. கொசஸ்தலை, கூவம், அடையாறு மற்றும் பக்கிம்ஹாம் உள்ளிட்ட கால்வாய்களிலும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. இவ்வளவு திட்டங்களுக்குப் பின்பும் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது.
கிடப்பில் பல்கலை. பரிந்துரைகள்
சென்னைப் பல்கலைக் கழகமும் அண்ணா பல்கலைக் கழகமும் மத்திய அரசின் நிலத்தடி நீர் வாரியம், மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை ஆகியவற்றுடன் இணைந்து 2005-ம் ஆண்டு வெள்ளத்தின்போது விரிவான ஆய்வுகள் மேற்கொண்டன. சென்னைப் பல்கலைக் கழகம் சென்னையிலிருக்கும் மொத்த மழைநீர் வடிகால் கட்டமைப்புகளையும் ஆய்வு செய்தது. இதில் கணிசமான வடிகால் கட்டமைப்புகள் நீரோட்டத்துக்கு எதிரான திசையில் இருப்பதை சுட்டிக்காட்டியது. இதையேதான் 2016-ன் ஆண்டு உள்ளாட்சித் துறைக்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறையின் அறிக்கையும் சுட்டிக்காட்டியுள்ளது.
2005-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் ‘ரிமோட் சென்சார்’ ஆராய்ச்சித் துறை விமானம் மூலம் ‘லைடார்’ ஒளிக்கதிர் வீச்சு தொழில்நுட்பத்தில் சென்னையைப் படம் எடுத்தது. இதில் சென்னையின் தாழ்வான பகுதிகள் எவை, நீர் நிலைகள் எவை, ஆக்கிரமிக்கப்பட்ட நீர் நிலைகளின் துல்லியமான அளவு ஆகியவை அடையாளம் காணப்பட்டு தமிழக அரசிடம் விரிவான அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது.
இதுதவிர, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் சென்னையின் 20 முக்கிய இடங்களில் தானியங்கி வானிலை ஆய்வுக் கருவிகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் பெய்யும் மழையின் அளவு, மண்ணின் தன்மை, தண்ணீர் தேங்கும் அளவு, தண்ணீர் பூமிக்குள் செல்லும் அளவு, தாழ்வான மற்றும் மேடான பகுதிகள் கண்டறியப்பட்டன. இவை சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டன. மேற்கண்ட அத்தனை ஆய்வுகளையும் பரிந்துரைகளையும் கிடப்பில் போட்டது அரசு.
கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்துக்கு பிறகு சென்னையின் நீர் ஆதாரங்களைப் பாதுகாத்து சீரமைக்க, ‘நீடித்த குடிநீர் ஆதார பாதுகாப்பு இயக்கம்’ சென்னையில் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-ம் விதிகளின் கீழ் அறிவிக்கப்பட்டது. அதன்படி பெரிய குடியிருப்பு வளாகங்கள், அரசுக் கட்டிடங்கள், பள்ளிகளில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்படும். இதன் முன்னோடித் திட்டமாக 15 பெரிய வளாகங்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
சென்னை நகரில் 15 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு பாதுகாத்து சீரமைத்து முன்மாதிரி ஏரிகளாக்கப்படும். சுத்திகரித்த கழிவுநீரை பயன்படுத்தி, நீர் நிலைகளின் நீர் ஆதாரங்கள் மேம்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட திட்டங்கள் போடப்பட்டன. தற்போது வரை இந்தத் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.
சாலைகளில் தண்ணீர் ஏன்?
சென்னையின் உள் மற்றும் பிரதான சாலைகளின் மொத்த நீளம் சுமார் 3,000 கிமீ. கடந்த 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்துக்குப் பின்பு மேற்கண்ட சாலைகளை ஆய்வு செய்ததில் 900 கிமீ தொலைவுக்கு மட்டுமே மழைநீர் வடிகால்கள் இருப்பது தெரிந்தது. சென்னை பெருநகர மற்றும் நீர் வழித்தடங்கள் சீரமைப்புத் திட்டம் மூலம் இந்த வடிகால்கள் மொத்தம் 1,900 கிமீ நீளத்துக்கு நீட்டிக்கப்பட்டன. ஆனால் மேற்கண்ட வடிகால்களை அவசர கோலத்தில் அலட்சியமாக வடிவமைத்ததே தற்போது சாலைகளில் தண்ணீர் தேங்குவதற்குக் காரணம்.
குறிப்பாக, ‘சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மேற்கண்ட வடிகால்கள் இறுதியாக கொசஸ்தலை, கூவம், அடையாறு, கோவளம் ஆகிய வடிநிலங்களுடன் இணைக்கப்படவில்லை. மேலும் 51 மழை நீர் வடிகால்கள் சரியாக கட்டப்படாததால் மறு கட்டுமானம் செய்யப்பட்டன. இதனால் ரூ.54.33 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளத’ என்று சுட்டிக்காட்டியுள்ளது தணிக்கை அறிக்கை.
மேலும் கூவத்தில் 89 இடங்களிலும், அடையாற்றில் 36 இடங்களிலும், பக்கிம்ஹாம் கால்வாயில் 132 இடங்களிலும் இணைக்கப்பட்ட மழை நீர் வடிகால்கள் குப்பைகள் மற்றும் சகதிகளால் அடைக்கப்பட்டிருக்கின்றன. இவை தூர் வாரப்படவில்லை.
தொழில்நுட்பக் குளறுபடிகள்
மழைநீர் வடிகால்களை அமைக்கும்போது குறைந்தது 7 மீட்டர் அகலம் கொண்ட சாலைக்கு 2 அடி ஆழத்தில், 2.5 அடி உயரத்துக்கு கான்கீரிட் கலவையால் கால்வாய்கள் அமைக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான வடிகால்கள் சரியான அகலம், ஆழம் அளவுகள் பின்பற்றி அமைக்கப்படவில்லை. ஒவ்வொரு பகுதியில் குறிப்பிட்ட ஆழத்தில்தான் கால்வாயை அமைக்க வேண்டும். குறிப்பாக அந்தப் பகுதி, அதற்கு அடுத்துள்ளப் பகுதியை விட தாழ்வாக இருக்கிறதா, மேடாக இருக்கிறதா என்பதை கணக்கிட்டு கால்வாய்களை அமைக்க வேண்டும். வடிகால்களின் மேற்பகுதியில் ஒவ்வொரு 5 மீட்டர் இடைவெளியிலும் ‘மேன் ஹோல்’ (Man hole) எனப்படும் ஆட்கள் இறங்கி அடைப்புகளை நீக்குவதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
தவிர, ஒவ்வொரு 30 மீட்டர் இடைவெளியிலும் மழை நீர் மண்ணில் இறங்குவதற்கான Inlet chamber water treatment கட்டமைப்புகளை அமைக்க வேண்டும். தென் சென்னையைப் பொறுத்தவரை நிலத்தடி மண் சாதாரணமானது என்பதால் மேற்கண்ட கட்டமைப்பை 5 அடி ஆழத்தில் அமைத்தாலே தண்ணீர் மண்ணுக்குள் சென்றுவிடும். ஆனால், வட சென்னை நிலத்தடியின் மேலடுக்கு பெரும்பாலும் களிமண் என்பதால் களிமண் அடுக்குக்கு கீழாகத்தான் மேற்கண்ட கட்டமைப்பை அமைக்க வேண்டும். மேலும் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை முறைகேடாக மழைநீர் வடிகால்வாயில் இணைக்கப்படாமல் கண்காணிக்க வேண்டும். ஆனால், மேற்கண்ட விதிமுறைகள் எதுவும் பின்பற்றாமல் வடிகால்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இவை தவிர சென்னை மாநகராட்சி சார்பில் சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த அதிகாரிகள் அங்குள்ளதை போன்று சென்னை நகரில் 50,000 இடங்களில் ‘ஜாலி’ என்கிற சல்லடை அமைப்பிலான வடிகால் கட்டமைப்புகளை ஏற்படுத்தினர். சாலையின் மேற்பகுதியில் சல்லடை போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதனை 6 அங்குல விட்டம் கொண்ட இரு குழாய்கள் மூலம் மழை நீர் வடிகால்களுடன் பொருத்தினர். தற்போது பெரும்பாலான ‘ஜாலி’ கட்டமைப்புகளில் அடைப்பு ஏற்பட்டும் உடைந்தும் கிடக்கின்றன. இவை எல்லாம்தான் சாலைகளில் தண்ணீர் தேங்குவதற்குக் காரணம்.
தீர்வுகள் என்ன?
பொதுப்பணித்துறையில் தலைமைப் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற வீரப்பன் இதுகுறித்து கூறும்போது, “சென்னை நகரத்துக்கு இது வளர்ச்சியே அல்ல. கடுமையான வீக்கம். 1980-ல் 80% காலியிடங்கள், 20% கட்டிடங்கள் என்கிற நிலை 2015-ல் 20% காலியிடங்கள், 80% கட்டிடங்கள் என்று மாறியிருக்கிறது. இது ஆரோக்கியமானது அல்ல. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை திட்டமிடாமல் உருவாக்கப்பட்ட நகரமாக இருக்கிறது. ஏற்கெனவே ஜார்ஜ் டவுன் பகுதியில் 99%, ரங்கநாதன் தெருவில் 50% கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டிருக்கின்றன. ஜாஜ்டவுன், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகள் மீண்டும் புனரமைக்க முடியாதபடி நெரிசலில் சிக்கியிருக்கின்றன.
சென்னை மாஸ்டர் பிளான் 1, 2 மற்றும் நகர் ஊரமைப்புத் துறையால் வகுக்கப்பட்ட விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன. மேற்கண்ட துறைகளில் கடுமையான ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இனி புதியதாக பெரிய கட்டுமானங்கள் எதுவும் கட்ட அனுமதிக்கக் கூடாது. மாறாக சென்னைக்கு வெளியே சுமார் 50 கிமீ தொலைவில் செயற்கை நகரங்களை திட்டமிட்டு உருவாக்க வேண்டும். நீண்டகால திட்டங்களான சுரங்க நீர் தேக்கத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.” என்றார்.
தாங்கிப் பிடித்த ‘தாங்கல்கள்’
எவ்வளவுதான் செயற்கை வடிகால்களை அமைத்தாலும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பவை இயற்கையாக அமைந்த ‘தாங்கல்’களே. பெரும் வெள்ளங்களைத் தாங்கிப் பிடிப்பதால் இவை தாங்கல்கள் என்றழைக்கப்படுகின்றன. தென் சென்னை இயற்கையான மூன்றடுக்கு தாங்கல் பாதுகாப்பு கொண்டதாக இருந்தது.
மடிப்பாக்கம் ஏரி, பள்ளிக்கரணை ஏரி, நாராயணபுரம் ஏரி, வடக்குப்பட்டு ஏரி, நன்மங்கலம் ஏரி ஆகியவை தென் சென்னையின் முதலாம் அடுக்கு பாதுகாப்பு வளையத்திலிருக்கும் தாங்கல்கள். பக்கிம்ஹாம் கால்வாய்க்கு முன்பாக அமைந்திருக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இரண்டாம் அடுக்கு பாதுகாப்பு வளையத்திலிருக்கும் தாங்கல். கேளம்பாக்கம் தொடங்கி மாமல்லபுரம் வரை சுமார் 4 கிமீ பரப்பளவில் பரந்திருக்கும் உப்பங்கழிகள் மூன்றாம் அடுக்கு பாதுகாப்பு வளையத்திலிருக்கும் தாங்கல்கள்.
முதல் அடுக்கிலிருந்து வெளியேறும் வெள்ள நீர் இரண்டாம் அடுக்கான பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைக் கடந்து, இறுதியாக மூன்றாம் அடுக்கு தாங்கலான உப்பங்கழிகளில் தேங்கி நின்று, கடல் நீர் உள்வாங்கும்போது கடலுக்குள் கலக்கும்.
மத்திய சென்னையில் தாங்கல்கள் கிடையாது. இங்கு அடையாற்றையும் கூவத்தையும் இணைப்பதன் மூலம் வெள்ளத்தை கட்டுப்படுத்தியது பக்கிம்ஹாம் உள்ளிட்ட கால்வாய்கள். வட சென்னையில் கொசஸ்தலை எண்ணூரில் கலக்கும் முன்பாக இருக்கும் புழல் ஏரி, செங்குன்றம் ஏரி, சூரப்பட்டு ஏரி ஆகியவையே தாங்கல்கள். இன்று இந்த தாங்கல்கள் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.
முதலாம் அடுக்கு தாங்கல்களான மடிப்பாக்கம், பள்ளிக்கரணை ஏரி உள்ளிட்ட தாங்கல்களின் பெரும் பகுதி ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டன. இரண்டாம் அடுக்கு தாங்கலான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பெரும் பகுதியும் கட்டிடங்களாகிவிட்டன. கேளம்பாக்கம் தொடங்கி மாமல்லபுரம் வரையுள்ள தாங்கல்கள் கட்டிடங்களாலும் இறால் பண்ணைகளாலும் மணல் மேடுகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago