கூட்டாட்சியை பாதுகாக்க மதுரையில் ஜூலை 23-ல் மார்க்சிஸ்ட் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு

By செய்திப்பிரிவு

சென்னை: கூட்டாட்சியை பாதுகாக்கவும், மாநில உரிமை முழக்கத்தை உரத்து ஒலிக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், ஜூலை 23-ல் மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு மதுரையில் நடக்கவுள்ளது என்றும், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள் என்றும் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "இந்தியாவின் கூட்டாட்சியை பாதுகாக்கவும், மாநில உரிமை முழக்கத்தை வலுப்படுத்தவும் சிபிஐ (எம்) சார்பில் ‘மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு’ வரும் ஜூலை 23 அன்று மாலை மதுரை முனிச்சாலையில் அமைந்துள்ள ஒபுளா படித்துறையில் நடக்கிறது.

மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா என்பதை இந்திய அரசியலமைப்பு சட்டம் தெளிவாக வரையறுத்துள்ளது. ஆனால், நடைமுறையில் எல்லா அதிகாரங்களும் ஒன்றியத்திலேயே குவிக்கப்படுகின்றன. அதனால் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டுமானால், கூட்டாட்சி வலுப்பெற வேண்டும், அதிகாரம் பரவலாக வேண்டும்.

ஒற்றை ஆட்சியை முன்னெடுக்கும் பாஜக,ஆர்எஸ்எஸ், இந்தியாவின் கூட்டாட்சி ஏற்பாட்டை மொத்தமாக சிதைக்கிறது. திட்ட ஆணையத்தை கலைத்து ‘நிதி ஆயோக்’ உருவாக்கப்பட்டது. பதினைந்தாவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளும் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரத்தை வெட்டி ஒன்றியத்தில் குவித்தன. ஜிஎஸ்டி வரிவிதிப்பு காரணமாக மாநில வரி இனங்கள் சுருங்கியுள்ளன. மாநிலங்களுக்கான முறையான நிதிப்பகிர்வில் பெரும் அநீதி இழைக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி ஈவுத்தொகைக்காகவும், ஈட்டுத் தொகைக்காகவும் பல மாதங்கள் காத்திருக்கும் நிலை உருவாகியது. பெட்ரோல், டீசல் மீதான வரி இனங்களில் மாநில அரசுகளுக்கு பங்கு இருந்தது, ஆனால் தற்போது மத்திய அரசுக்கு மட்டுமே சேரும் விதத்தில் செஸ் விதிக்கப்படுகிறது. மாநில பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறைக்கு வரம்பு வைப்பதன் மூலம் மாநில செலவினங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் அதிகார வரம்பிற்குள் நேரடியாக தலையிடுவதற்கு ஆளுநர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். சட்டமன்றங்கள் நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் போடுகிறார்கள். குறிப்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தை அவமதிப்பது, அமைச்சரவையின் அதிகாரத்திலும், முதல்வரின் அதிகாரத்திலும் வரம்பு மீறி தலையிடுவது என ஒவ்வொரு நாளும் செயல்பட்டு கண்டனங்களை எதிர்கொள்கிறார்.

மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வியை ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்திருப்பதுடன், ஒரே நாடு ஒரே கல்வி என்ற அடிப்படையில் இனி மாநிலங்களால் கல்வி பற்றிய எந்த அம்சத்திலும் முடிவெடுக்க முடியாது என ஆக்கப்பட்டுள்ளது. கல்வியில் பெருமளவில் வணிகமயத்தை புகுத்துவதும், பாடத்திட்டங்களை மதவெறிமயமாக்குவதும் ஒருசேர நடக்கின்றன. தேசிய கல்விக் கொள்கையின் பெயரால் இந்த அராஜகம் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது. இப்போது ஒட்டுமொத்த மருத்துவ இடங்களையும் தானே நிரப்பிட முயற்சிக்கிறது. இதன் மூலம் தமிழகத்தின் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கும் ஆபத்து எழுந்திருக்கிறது.

அமலாக்கத்துறையும் பிற ஒன்றிய அரசின் முகமைகளும் பாஜகவின் ஏவலாட்களாக மாற்றப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் எம்எல்ஏக்களை விலைபேசவும், ஆட்சிக் கவிழ்ப்பிற்குமான கருவிகளாக இந்த அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், கூட்டுறவு, விவசாயம், மின்சாரம் என மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்ட அனைத்திலும் ஒன்றிய அரசு தலையிடுகிறது ஏற்கெனவே உள்ள கட்டமைப்புகளை சிதைக்கிறது.

ஒன்றிய ஆட்சியின் பார்வை எப்படிப்பட்டது என்பதற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு நடைமுறை உதாரணம் ஆகும். மாநில அரசு முன்னெடுத்த திட்டங்கள் குறித்த காலத்தில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. ஆனால், 2019-ம் ஆண்டு, பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை யாருமே சொல்ல முடியாத அளவுக்கு இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.இப்படியான சூழலில்தான், கூட்டாட்சியை பாதுகாக்கவும், மாநில உரிமை முழக்கத்தை உரத்து ஒலிக்கவும் சிபிஐ(எம்) சார்பில் மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு மதுரையில் நடக்கவுள்ளது.

மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமை தாங்குகிறார். சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக. சார்பில் திருச்சி சிவா, எம்பி. அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மதிமுக அரசியல் ஆலோசனைக்குழு செயலாளர் அ.ரவிச்சந்திரன், மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.

மாநில உரிமை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த மாநாட்டுக்கு தமிழக மக்கள் பேராதரவு வழங்கி வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE