பாம்பு கடித்து தொழிலாளி மரணம் - அல்லேரிமலை கிராமங்களில் தொடரும் உயிரிழப்புகள்

By செய்திப்பிரிவு

வேலூர்: அல்லேரி அடுத்த ஆட்டுக்கொந்தரை மலை கிராமத்தில் பாம்பு கடித்து கூலி தொழிலாளி சிகிச்சைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மலை கிராமத்துக்கு முறையான சாலை வசதி இல்லாததால் சிகிச்சைக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டு தொழிலாளி உயிரிழந்ததாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவ சேவைகளை முறையாக பயன்படுத்தவில்லை என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகேயுள்ள பீஞ்சமந்தை, அல்லேரி, குருமலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களுக்கு செல்ல முறையான சாலை வசதியில்லாமல் உள்ளது. இதில், அல்லேரி மலை கிராமத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாம்பு கடித்த நிலையில் சாலை வசதி இல்லாததால் சிகிச்சைக்காக செல்லும் வழியில் உயிரிழந்தது.

பிரேதப் பரிசோதனைக்கு பிறகு இறந்த குழந்தையின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுமார் 10 கி.மீ தொலைவுக்கு கையில் தூக்கிக் கொண்டு நடந்து சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மலை கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்திட மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்ததுடன், சுமார் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்க மத்திய அரசின் ஒப்புதலுக்காக பரிந்துரை செய்துள்ளனர். மேலும், அல்லேரி மலை கிராமத்துக்காக இலவச ஆம்புலன்ஸ் சேவையும் தொடங்கப்பட்டது.

இதற்கிடையில், அல்லேரி மலை கிராமத்தில் தொழிலாளி ஒருவர் பாம்பு கடித்து சிகிச்சைக்கு செல்வதில் ஏற்பட்ட தாமதத்தால் உயிரிழந்த சம்பவம் மீண்டும் மலை கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்லேரி அடுத்த ஆட்டுக்கொந்தரை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (38). கூலி தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

சங்கர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் வீட்டினுள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு சங்கரின் கையில் கடித்துள்ளது. உறக்கத்தில் வலி தாங்க முடியாத சங்கர் கூச்சலிடவே குடும்பத்தினர் அலறியடித்து எழுந்துள்ளனர். பாம்பு கடித்திருப்பதை உறுதி செய்ததும் உடனடியாக அவரை கிராம மக்கள் மீட்டதுடன் அல்லேரியில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ குழுவினருக்கு கைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.

ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்

அதன்படி, ஆம்புலன்ஸ் வாகனம் அல்லேரியில் தயார் நிலையில் இருந்தன. ஆனால், ஆட்டுக்கொந்தரை மலைக் கிராமத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு முறையான சாலை வசதி இல்லாததால் பாம்பு கடிபட்ட சங்கரை கிராமத்தினர் டோலி கட்டி அல்லேரிக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, சங்கரின் உடலை தங்கள் கிராமத்துக்கு மீண்டும் திருப்பி எடுத்துச் சென்றனர்.

இது குறித்த தகவலின்பேரில், சங்கரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக நேற்று காலை கைப்பற்றப்பட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அணைக்கட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முறையான சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்த சங்கரை குறிப்பிட்ட நேரத்துக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முடியாததால் அவர் உயிரிழந்ததாக மலை கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆட்சியர் விளக்கம்: இது தொடர்பாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘அல்லேரி மலை கிராம மக்கள் இரு சக்கர, இலகுரக வாகனங்களை பயன்படுத்தும் வகையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் சாலை மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன. அல்லேரி மலை கிராமத்துக்கு சாலை அமைத்திட ஏற்கெனவே வனத்துறையுடன் இணைந்து நில அளவை மேற்கொள்ளும் பணிகள் முடிவுற்று அங்கு தார்ச்சாலை அமைத்திட ரூ.5.51 கோடிக்கு திட்ட மதிப்பீடும் தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் தார்ச்சாலை அமைக்கப்படவுள்ளது.

இதற்கிடையில், மலை கிராம பகுதிகளில் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருப்பதுடன், ஒடுகத்தூர், பீஞ்சமந்தை, அணைக்கட்டு ஆகிய 3 இடங்களில் மலைப்பாதைகளில் செல்ல தனி ஆம்புலன்ஸ் வாகனங்களும், அணைக்கட்டில் பொது மருத்துவமனையும், பீஞ்சமந்தை கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையமும் உள்ளது.

இதுதவிர, அல்லேரி கிராம மக்களுக்கு பயன்படும் வகையில் கூடுதலாக ஒரு ஆம்புலன்ஸ் வாகன சேவை கடந்த ஜூன் 6-ம் முதல் பயன்பாட்டில் உள்ளது. அவசர காலத்தில் மருத்துவ வசதிக்காக ஆம்புலன்ஸ் வசதியும், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்றுவர பாதை வசதி இருந்தும் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சேவைகளை உரிய காலத்தில் பயன்படுத்தி கொள்ளாமல் இருந்து விட்டதாலேயே சங்கர் உயிரிழந்துள்ளார்’’ என தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE