மகளிர் உரிமைத் தொகை: சென்னையில் இதுவரை 15% விண்ணப்பங்கள் விநியோகம்

By செய்திப்பிரிவு

சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற, சென்னையில் இதுவரை 15 சதவீத விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான விண்ணப்பப் படிவம் பெறுவது குறித்த சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சமுதாயக் கூடத்தில் இன்று தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முன்னோட்டப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்களை பெற நடைபெற உள்ள முகாம் தொடர்பான பணிகளை பார்வையிட்டோம். பணிகள் திருப்திகரமாக உள்ளது. மதியம் அனைத்து முகாம்களிலும் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதன் முடிவின் அடிப்படையில் ஏதாவது மாற்றங்கள் தேவைப்பட்டால் மேற்கொள்ளப்படும். 703 ரேஷன் கடைகள் உள்ளன. கடைகளுக்கு ஏற்றபடி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

1700 தன்னார்வலர்களுக்கு இது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 703 ரேஷன் கடைகள் மூலம் இதுவரை 15 சதவீத டோக்கன் மற்றும் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு குழுவினர் அந்தந்த ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு முகாம்களில் வங்கிக் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2300 பயோ மெட்ரிக் கருவிகள் தயார் நிலையில் உள்ளது. கூடுதலாக தேவையான பயோ மெட்ரிக் கருவிகளும் தயார் நிலையில் உள்ளது" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE