சென்னை: கச்சத்தீவை மீட்பது, இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாப்பது குறித்தும், இலங்கை தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களது உரிமைகள், சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது குறித்தும், இந்தியா வரும்இலங்கை அதிபரிடம் வலியுறுத்துமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க 2 நாள் பயணமாக டெல்லி வர உள்ளார். அவர் உடனான பேச்சுவார்த்தையின்போது, கச்சத்தீவை மீட்பது, இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாப்பது குறித்தும், இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி. அவர்களது உரிமைகள், சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது குறித்தும் பேசி தீர்வு காண வேண்டும்.
வரலாற்று ரீதியாக இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ளது கச்சத்தீவு. இதை சுற்றியுள்ள கடல்பரப்பில் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வருகின்றனர். மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், மத்திய அரசு ஒப்பந்தம் மூலம், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தமிழக மீனவர்களின் உரிமைகளை பறித்து, அவர்களது வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. அப்போது தமிழக முதல்வராக இருந்த மறைந்த கருணாநிதி, அதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 1974 ஜூன் 29-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திலும், ஆக.21-ம் தேதி சட்டப்பேரவையிலும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்.
முதல்வராக நான் பொறுப்பேற்ற பிறகு 2022-ல் பிரதமர் மோடி முதலில் தமிழகம் வந்தபோது, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன்.
தமிழக மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளுக்கு எளிதில் செல்ல முடியாத சூழல் உள்ளது. அத்துமீறி நுழைவதாக இலங்கை கடற்படையினர் குற்றம்சாட்டி கைது செய்து, துன்புறுத்தும் சூழல் உள்ளது. பாக் வளைகுடாவின் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையை மீட்டெடுப்பது தமிழக அரசின் முதன்மை கோரிக்கைகளில் ஒன்று.
கச்சத்தீவை மீட்கும் வகையில் மத்திய அரசு இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கவேண்டும். பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீண்டும் நிலைநாட்டவும், மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கும் வகையிலும் கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதுவரை அப்பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நமது மீனவர்கள் இலங்கை சிறைகளில் நீண்ட காலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இலங்கை அதிபரிடம் எடுத்துக் கூறி, சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகளை நாட்டுடமை ஆக்கும் சட்டத்தை திரும்ப பெற தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆக்கபூர்வமான, உறுதியான தீர்வை எட்டுவதற்கு இலங்கைஅதிபரை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago