கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் - விண்ணப்பம், டோக்கன் விநியோகம் தொடங்கியது

By செய்திப்பிரிவு

சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பம், டோக்கன் ஆகியவை வீடுவீடாக விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.

சட்டப்பேரவை தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இத்திட்டம் வரும் செப்.15-ம் தேதி அண்ணா பிறந்த தினத்தில் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து, பயனாளிகளின் தகுதிகள், நிபந்தனைகள் வெளியிடப்பட்டன. அதைத்தொடர்ந்து, நியாய விலைக்கடைகள் மூலம் விண்ணப்பம் அளித்து, இரண்டு கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் நியாய விலைக்கடை பணியாளர்கள், தங்கள் கடைக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, விண்ணப்பம் மற்றும் முகாம் நடைபெறும் நாள், நேரம் அடங்கிய டோக்கன் ஆகியவற்றை வழங்கினர். குறிப்பாக வீட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் விண்ணப்பத்தை வழங்கி அதற்கான ஒப்புகை சீட்டையும் பெற்றுக் கொண்டனர்.

சில பகுதிகளில் நேற்று காலை முதலும், சில பகுதிகளில் கடை பணி நேர இடைவெளியிலும் விநியோகப் பணியை தொடங்கினர். சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் முதல்கட்டமாக 98 வார்டுகளில் நேற்று விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியது. மீதமுள்ள வார்டுகளுக்கு அடுத்த கட்டமாக வழங்கப்படுகிறது.

முதல்கட்டமாக விண்ணப்பம் வரும் 23-ம் தேதி வரை வழங்கப்படும். தொடர்ந்து 24-ம் தேதி முதல்ஆகஸ்ட் 4-ம் தேதி வரை நியாயவிலைக்கடை அருகில் விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும். முகாமில் படிவத்துடன், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரம் ஆகியவற்றை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE