காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை கூட்ட நடவடிக்கை: முதல்வருக்கு பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

By செய்திப்பிரிவு

திருவாரூர்: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேற்று வெளியிட்ட அறிக்கை: டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை பயிர்களுக்கு போதிய தண்ணீர் இல்லாததால் கருகத் தொடங்கியுள்ளன.

கர்நாடக அணைகளில் 80 சதவீதத்துக்கு அதிகமாக நீர் உள்ள நிலையில், ஜூன், ஜூலை மாதங்களுக்கு தமிழகத்துக்குத் தர வேண்டிய 43 டிஎம்சி நீரை தர கர்நாடக அரசு மறுத்து வருகிறது. அதேவேளையில், காவிரி மேலாண்மை ஆணையமும் மவுனமாக உள்ளது.

இந்நிலையில், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை, தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தது உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு ஆகியவற்றுக்கு முரணாக உள்ளது.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டு, கர்நாடகத்திடம் இருந்து நீரை பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ஆணையத்துக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்ய வேண்டும். இதற்கு, மத்திய மற்றும் கர்நாடக அரசுகள் மறுக்கும்பட்சத்தில், காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடர்ந்து தீர்வு காண வேண்டும்.

இதைவிடுத்து, மத்திய அமைச்சரை தமிழக நீர்பாசனத் துறை அமைச்சர் சந்திப்பதால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு எந்த பயனும் ஏற்படாது. குறிப்பாக, இந்தசந்திப்பு தமிழகம் பெற்ற உரிமையை மீண்டும் மத்திய அரசிடம் பறிகொடுப்பதுபோல உள்ளது.

எனவே, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தைக் கூட்ட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து, கருகும் பயிர்களைக் காப்பாற்ற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE