வடகிழக்கு பருவமழையோ அல்லது தென்மேற்கு பருவமழையோ எதுவாக இருந்தாலும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த தேதியில் தொடங்குகிறது என்றால் அது மகிழ்ச்சிக்குரிய விஷயம். புகை கக்கும் தொழிற்சாலைகள், மண் வளம் தின்னும் பிளாஸ்டிக் கழிவுகள், வாகனப் புகை இன்னும் எத்தனையோ மாசுகளை மட்டுமே நாம் இயற்கைக்கு தந்தாலும் பேரன்போடு நமக்கு இன்னும் பருவம் தவறாமல் மழையைக் கொடுத்திருக்கிறது இயற்கை அன்னை.
அத்தகைய வரத்தை வணங்கி இன்புற வேண்டும். ஆனால் சென்னை மக்களோ மழை வந்தாலே பீதியில் ஆழ்ந்துவிடுகின்றனர். காரணம் 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. அந்த வெள்ளப்பெருக்குதான் தலைநகர் சென்னையில் வடிகால்கள் ஏதும் தூர்வாரப்படவில்லை, முகத்துவாரங்களை கழிவுகள் மூடிக்கொண்டிருக்கிறது, ஏரிகளில் கட்டிடங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை உரக்க உணர்த்தியது. ஆனால், அரசு உணர்ந்ததா?
ஞாயிற்றுக்கிழமையில் இருந்துதான் சென்னையில் பரவலாக மழை பெய்கிறது. ஆனால் இரண்டு மூன்று நாட்களிலேயே சென்னையின் பல்வேறு பகுதிகளும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இப்படி தண்ணீர் தேங்குவதற்கு என்னதான் காரணம்?
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமனிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் பேசியபோது, "இரண்டு நாள் மழைக்கே நகரில் பல இடங்களில் தேங்கியிருக்கிறதுதான். ஆனால், இதற்கு ஒட்டுமொத்தமாக அரசாங்கத்தை மட்டுமே கைகாட்டிவிடமுடியாது. 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு தவற்றை செய்திருக்கிறோம். அதை ஓரிரு ஆண்டுகளில் சரிசெய்துவிட முடியாது. இப்போது அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரும் பணிகளை சிறப்பாக செய்ய ஆரம்பித்தால் 3 அல்லது 4 வருடங்களில் வெற்றிகரமாக முடித்துவிடலாம்.
இப்படி சாதாரண மழைக்கே தண்ணீர் பெருக்கெடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றால் மழைநீர் கால்வாய்களை சீர் செய்தால் மட்டும் போதாது. மையக் கால்வாய்களான கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆற்றின் கொள்ளவு குறைந்திருக்கிறது. இதற்குப் பிரதான காரணம் ஆக்கிரமிப்புகள் மட்டுமே. 2105-ல் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்துக்குப் பிறகு தமிழக அரசு தெரிந்தே கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரத்தில் சுமார் 480 ஏக்கரை காமராஜர் துறைமுகத்துக்காக ஆக்கிரமித்திருக்கிறது. இது பேராபத்தை விளைவிக்கக்கூடியது.
ஏனெனில் குடிசை ஆக்கிரமிப்புகளால் அதில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே பாதிப்பு. ஆனால், வல்லூர் அனல்மின் நிலையம் போன்ற நிறுவனங்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் அது ஒட்டுமொத்த ஊருக்கே பாதிப்பு.
இரண்டு விஷயங்களை இந்த அரசு செய்ய வேண்டியுள்ளது. முதலாவதாக, பணக்காரர்கள், குடிசைவாசிகள் என பேதம் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
வல்லூர் அனல்மின் நிலையத்துக்காக அரசே முகத்துவாரத்தை ஆக்கிரமிக்கிறது என்றால் அது மக்கள் மத்தியில் தவறான முன்னுதாரணமாக இருக்கும். இதே குடிசைவாசிகளாக இருந்தால் போலீஸைக் கொண்டு கட்டாயமாக அப்புறப்படுத்தும் அரசு, ஆக்கிரமிப்புகளை அனுமதிக்காததில் நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டாமா? இரட்டை நிலைப்பாட்டைத் தவிர்த்து அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அரசு அகற்ற வேண்டும்.
இரண்டாவதாக, மழைநீர் கால்வாய்களை தூர்வாருவது மட்டுமல்ல தற்போது நல்ல நிலையில் இருக்கும் நீர்நிலைகளை சீரமைத்து பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட வேண்டும். இவையே தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்கவும் சாதாரண மழைக்கு சாலையில் வெள்ளம் தேங்குவதைத் தடுக்கவும் தீர்வு"
இவ்வாறு அவர் கூறினார்.
எண்ணூரில் இருந்து முட்டுக்காடு வரையில், ஏறக்குறைய 49 கிலோமீட்டர் உள்ள கால்வாயை தூர்வாரி இருந்தால், சென்னை மாநகரில் எந்தவொரு இடத்திலும் தண்ணீர் தேங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கும் நிலையில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம்.
ஆனால், அவர் பிரதமர் வருகைக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளும் ஆலோசனைக் கூட்டத்தில் இருப்பதால் கேள்விகளை வாட்ஸ் அப்பில் அனுப்புமாறு மாநகராட்சியின் மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தார். இதனையடுத்து வாட்ஸ் அப் மூலம் கேள்விகள் அனுப்பியுள்ளோம். பதிலுக்காக காத்திருக்கிறோம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago