மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை பணிகளால் குண்டும் குழியுமான மடிப்பாக்கம்: பருவமழைக்கு முன்பு சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

By சி.பிரதாப்

சென்னை: சென்னை மாநகராட்சியின் தெற்கு பகுதியில்உள்ள மடிப்பாக்கம், குடியிருப்புகள் நிறைந்த பகுதி. தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரசுத்துறைகளில் பணியாற்றுவோர் உட்பட பல்வேறு தரப்பினரும் இங்கு வசிக்கின்றனர்.

மாநகராட்சியின் 14-வது மண்டலத்துக்கு (பெருங்குடி) உட்பட்ட பகுதியில் வரும் மடிப்பாக்கத்தில் தற்போது மழைநீர் வடிகால்,பாதாள சாக்கடை மேம்பாடு ஆகிய திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதன்காரணமாக, மடிப்பாக்கத்தின் பல்வேறுபகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளதால், பொதுமக்கள், வாகன ஒட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, போக்குவரத்து அதிகம் உள்ள பொன்னியம்மன் கோயில் தெரு, ஏரிக்கரை தெரு, மடிப்பாக்கம் பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஒட்டிகள் சிரமப்படுகின்றனர்.

இதுபற்றி அப்பகுதியினர் கூறுவதாவது: ஐ.டி. ஊழியர் தமிழரசன்: பொன்னியம்மன் கோயிலை ஒட்டிய தெரு பல மாதங்களாக சேதமடைந்த நிலையில்தான் உள்ளது. மடிப்பாக்கம் - மேடவாக்கம் பிரதான சாலையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடப்பதால் பெரும்பாலான வாகனங்கள் பொன்னியம்மன் கோயில் தெரு வழியாகவே வேளச்சேரி, மேடவாக்கம், தாம்பரம் பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. சாலைகள்தரமற்றதாக இருப்பதால் தினமும் அச்சத்துடனே வாகனங்களை ஓட்டுகிறோம்.

ஆட்டோ ஓட்டுநர் செல்வம்: மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் அதை சுற்றியுள்ள தெருக்களில் பாதாள சாக்கடை பணிக்காக சாலைகளை தாறுமாறாக தோண்டி போட்டுள்ளனர். மழை பெய்தால், சாலைகளில் எங்கு பள்ளம் உள்ளது என்பதுகூட தெரியாத அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும். அதிக அளவில் மக்கள் வசிக்கும் பகுதி என்பதால், முறையான திட்டமிடலுடன் பணிகளை செய்து முடிக்க வேண்டும்.

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பூங்காவனம்: மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக மடிப்பாக்கம் ஏரியை சுற்றி நடைபாதையும், சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், ஏரிக்கரை தெருவுக்கு காலை, மாலை வேளைகளில் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். இந்த தெருவில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக சாலைகளை தோண்டி போட்டனர். பல மாதங்கள்ஆகியும் திட்டப் பணிகள் முடிந்தபாடில்லை. மழைகாலம் தொடங்கிவிட்டால், நிலைமைஇன்னும் மோசமாகிவிடும். எனவே, பருவமழை தொடங்குவதற்கு முன்பு பணிகளை மாநகராட்சி விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மடிப்பாக்கம் பகுதியில் நீண்டகால அடிப்படையிலான திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. பொன்னியம்மன் கோயில் தெரு, மடிப்பாக்கம் பிரதானசாலை, ஏரிக்கரை தெரு ஆகிய இடங்களில் பெருநகர சென்னை குடிநீர் வழங்கல் மற்றும்கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் பாதாளசாக்கடை அமைப்பதற்காக சாலை தோண்டப்பட்டு, குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இப்பணிகள் முடிந்து, மாநகராட்சியிடம் ஒப்படைத்த பிறகு, புதிதாக சாலை அமைக்கப்படும். எனினும், திட்டப்பணிகளை விரைந்து முடித்து, மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். தேவைக்கேற்ப, பழுதடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைத்து தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’’என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்