தேர்தல் நடத்தினால் ஸ்டாலினை நாங்கள் மீண்டும் முதல்வராக்குவோம் - வார்த்தை தவறி பேசிய திண்டுக்கல் சீனிவாசன் 

By பி.டி.ரவிச்சந்திரன்


திண்டுக்கல்: தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தினால், 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து, ஸ்டாலினை நாங்கள் மீண்டும் முதல்வராக்குவோம். உங்கள் ஆட்சியை யாரும் கலைக்கமாட்டார்கள், என அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

திண்டுக்கல் மாவட்ட அதிமுக சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மாநில அரசை கண்டித்து திண்டுக்கல் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன், முன்னாள் மேயர் வி.மருதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதிமுக மாநிலபொருளாளர், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை வகித்து பேசுகையில், "வழக்குகளை போட்டு அதிமுகவை முடக்கிவிடலாம், இந்த கட்சியை அழித்துவிடலாம் என நினைத்தார்கள். அத்தனையையும் எதிர்கொண்டு வெற்றிபெற்று தேர்தல் ஆணையத்தில் அதிமுக, இரட்டைஇலை எடப்பாடியாருக்கு தான் சொந்தம் என்றும் பெற்றுள்ளார். இன்று ஓ.பன்னீர்செல்வம் கோடநாடு பிரச்சனையை கிளப்புகிறார். அதற்காக போராட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளார். அதை எடப்பாடியும், நாமும் செய்ததைபோல் சொல்கிறார்.

மகளிர் உரிமைத்தொகை அனைத்து மகளிருக்கும் தருவோம் என்று சொல்லிவிட்டு தற்போது நிபந்தனைகளை விதிக்கிறார்கள். தற்போதே தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தினால், 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து ஸ்டாலினை நாங்கள் மீண்டும் முதல்வராக்குவோம்.(வார்த்தை தப்பாகிவிட்டது, வார்த்தை வேகத்தில் சிலதவறுகள் இருந்திருக்கலாம்.) உங்கள் ஆட்சியை யாரும் கலைக்கமாட்டார்கள். இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறது. மக்களை நன்றாக கொடுமைப்படுத்துங்கள்.

கூட்டணியில் யார் பிரதமர் என்று கேட்டால் இதுவரை சொல்லவில்லை. பிரதமர் மோடியை அமெரிக்கா, ரஷ்யா என அனைத்து நாடுகளும் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர். அனைத்துக்கும் பஞ்சாயத்து செய்துவருகிறார். வரும் மக்களவை தேர்தலில் 330 இடங்களில் வெற்றிபெற்று மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராவார்.

விலைவாசி குறித்து நீங்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று பேசவேண்டும். ஆர்ப்பாட்டத்திற்கு காரில் வந்து இறங்கியபோது ஒரு குடிமகன் என்னிடம், விலைவாசி உயர்வு குறித்து எல்லாம் பேசுகிறீர்கள். டாஸ்மாக் மது விலை உயர்வு குறித்து பேசமாட்டேன்கிறீர்களே என்றார். நீ மது குடித்தாலும் சரி, விஷம் குடித்தாலும் சரி அதைபற்றியெல்லாம் பேசமுடியாது என்றேன்.

இன்று எடப்பாடியார், எம்.ஜி.ஆர். ஆக, ஜெயலலிதாவாக நம்மை தன்னந்தனியாக காத்துக்கொண்டிருக்கிறார். அவர் மீண்டும் முதலமைச்சர் ஆவார். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் வரை பாடுபடவேண்டும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE