காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட்டால்தான் குறுவைப் பயிரைக் காக்க முடியும்: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகம் திறந்துவிடாததால், தமிழகத்தில் தற்போது குறுவை சாகுபடிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், உடனடியாக காவிரியிலிருந்து உரிய நீரினை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று கோரியும், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துக்கு, தமிழக முதல்வர்மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சரை, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று ( ஜூலை 20) டெல்லியில் நேரில் சந்தித்து வழங்கிய அந்தக் கடிதத்தில், “காவிரி டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி முக்கியமாக உள்ள நிலையில், இந்த ஆண்டு குறுவை சாகுபடியை விவசாயிகள் உரிய நேரத்தில் மேற்கொள்ள ஏதுவாக, மேட்டூர் அணை கடந்த ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டது. 2018 பிப்ரவரி 16ம் நாளிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர அட்டவணையின்படி, நீர் சேமிப்பு மற்றும் பிலிகுண்டுலுவில் அடையப்பட வேண்டிய நீரோட்டத்தைக் கருத்தில் கொண்டு இது செய்யப்பட்டது.

இருப்பினும், ஜூன் 1 முதல் ஜூலை 17 வரை பிலிகுண்டுலுவில் பெறப்பட்ட நீர் இருப்பு 3.78 டி.எம்.சி மட்டுமே. இந்தக் காலகட்டத்தில் பெறவேண்டிய தண்ணீர் அளவு 26.32 டி.எம்.சி. என உள்ள நிலையில், 22.54 டி.எம்.சி., நீர் பற்றாக்குறையாக உள்ளது. பிலிகுண்டுலுவில் இந்த 3.78 டி.எம்.சி நீர் வரத்துகூட கே.ஆர்.எஸ் மற்றும் கபினி நீர்த்தேக்கங்களுக்கு கீழே, கட்டுப்பாடற்ற இடைநிலை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து பிலிகுண்டுலு வரை பாய்கிறது.

தென்மேற்கு பருவமழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், ஜூலை மாதத்தில் மழை வேகமெடுத்துள்ள நிலையில், 2 அணைகளில் இருந்தும் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால், மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. தற்போதைய நீர் இருப்பு 20 நாட்கள் மட்டுமே பாசனத்திற்குப் பயன்படும். தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை குறைவாக இருப்பதால், குறுவை சாகுபடி, மேட்டூர் அணையில் இருந்து வரும் நீரை மட்டுமே நம்பியுள்ளதாகவும், குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து ஆரம்பத்தில் வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது அது 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

எனவே, நியாயமான நீர் மேலாண்மை மூலம் நெருக்கடியைச் சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. தண்ணீர் தேவைக்கும், நீர்வரத்திற்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகமாக இருப்பதால், கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரைக் கொண்டுதான் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்திட இயலும்.

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் கடந்த 5-7-2023 அன்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து, இந்த முக்கியமான பிரச்சினையில் தலையிட்டு, தண்ணீர்ப் பற்றாக்குறையை ஈடுசெய்ய கர்நாடகத்திற்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டார். 3-7-2023 தேதியிட்ட கடிதத்தின்படி, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களிலும் இந்தப் பிரச்சினையை தமிழக அரசின் சார்பில் எடுத்துச் சென்றது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம், 4-7-2023 தேதியிட்ட தனது கடிதத்தில், உச்சநீதிமன்றத்தால் திருத்தப்பட்ட, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி பிலிகுண்டுலுவில் நீரோட்டத்தினை உறுதி செய்யுமாறு கர்நாடகாவுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையிலும், கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த மாதாந்திர அட்டவணையைப் பின்பற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

இந்தக் கடினமான சூழ்நிலையில், கர்நாடகா உடனடியாக தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே, தமிழகத்தில் குறுவைப் பயிரைக் காப்பாற்ற முடியும் என்பதால், இந்தப் பிரச்சினையில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள மாதாந்திர அட்டவணையைப் பின்பற்றவும், பற்றாக்குறையை ஈடுசெய்யவும் கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வழங்கிட உத்தரவிட வேண்டும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்