கோவை மாநகரில் கவனிப்பாரற்ற மூத்த குடிமக்கள் பூங்கா!

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கோவை மாநகரில் வ.உ.சி உயிரியல் பூங்கா, தாவரவியல் பூங்கா, சிறுவர் பூங்கா, அறிவியல் பூங்கா, நடைபயிற்சி பூங்கா என பல்வேறு வகை பூங்காக்கள் உள்ளன. இருப்பினும் இதில் மாறுபட்ட பூங்காவாக, நேரு ஸ்டேடியம் அருகேயுள்ள மூத்த குடிமக்கள் நினைவுப் பூங்கா உள்ளது.

மொத்தம் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் காணப்படும் இந்த பூங்கா வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பல வகை மரங்கள் உள்ளன. பூங்கா திறக்கப்பட்டுபல ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2010-11-ம் ஆண்டுஅப்போதைய திமுக ஆட்சியின் போது, புனரமைக்கப்பட்டது. அதன் பின்னர், போதிய பராமரிப்பின்றி உள்ளது. பூங்கா வளாகத்தில் ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது.

பிறந்த நாள், திருமண நாள் போன்ற தினங்களில் இந்த பூங்காவில் பொதுமக்கள் மரக்கன்றுகளை நடுவர். மேலும், உயிரிழந்த மூத்தவர்கள் நினைவாக, அவர்களது வாரிசுகள், உறவினர்கள், தெரிந்த நபர்கள் மரக்கன்றுகளை நடுவர். இவ்வாறு நடப்படும் மரக்கன்றுகள் தொடர்ந்து பராமரிக்கப்படும். அந்த வகையில் இந்த பூங்கா வளாகத்தில் ஏராளமான எண்ணிக்கையில் மரங்கள் உள்ளன.

ஒவ்வொரு மரத்தின் அருகேயும், அதை நட்டவர்களின் பெயர், அதற்கான காரணம் குறித்த அறிவிப்பு பலகையும் உள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவாக நடப்பட்ட மரக்கன்று, கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக நடப்பட்ட மரக்கன்றுகள், தற்போது பெரிய மரங் களாக வளர்ந்து காட்சியளிக்கின்றன.

பூங்கா வளாகத்தில் செயற்கை நீரோடை, அதை கடந்து செல்ல நடைபாலம், பொதுமக்கள் அமர இருக்கைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. தினமும் அதிகாலை 5 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் பொது மக்கள் அனுமதிக்கப் படுகின்றனர். மூத்த குடிமக்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் இங்கு நடை பயிற்சிக்காக வந்து செல்கின்றனர். தற்போது, இந்த பூங்கா பராமரிப்பின்றி, கட்டமைப்புகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன.

இது குறித்து சமூக செயல்பாட்டாளர் ராஜ் குமார் கூறும்போது,‘‘அதிகளவில் பொதுமக்கள் வந்து செல்லும் மூத்த குடிமக்கள் பூங்கா முறையாக பராமரிக்கப்படாமல், இருக்கைகள் துருப்பிடித்து சேதமடைந்து காணப்படுகின்றன. இதன் அருகே மழை, வெயிலுக்காக மக்கள் ஒதுங்க போடப்பட்டுள்ள மேற்கூரைகள் கிழிந்துள்ளன.

நடைபாதைகளில் கற்கள் பெயர்ந்தும், தடுப்புச் சுவர்கள் இடிந்தும், மின்விளக்குகள் சேதமடைந்தும் காணப்படுகின்றன. செயற்கை மலை கட்டமைப்பு உடைந்து கிடக்கிறது. நீரோடை முறையான பராமரிப்பு இல்லாததால் வறண்டு, செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. அதை கடந்து செல்ல அமைக்கப்பட்ட நடைபாலத்தில் கம்பி மட்டுமே தற்போது உள்ளது.

பூங்கா வளாகம் முழுவதும் செடிகள், புற்கள் சில அடி உயரத்துக்கு வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. அவற்றில் விஷப் பூச்சிகள் இருந்தால் கூட நடந்து செல்லும் மக்களுக்கு தெரியாது. பூங்காவின் நடைபாதையை ஒட்டிய இடத்தில் தனிநபர் மாடுகளை கட்டி ஆக்கிரமித்துள்ளார். இதனால் அந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ள மக்கள் அச்சமடைகின்றனர்.

பூங்காவை முற்றிலும் சீரமைத்து, மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது,‘‘மூத்த குடிமக்கள் நினைவுப் பூங்காவுக்கு மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்து பூங்காவை மேம்படுத்த அறிவுறுத்தியுள்ளார். பூங்கா மேம்பாடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE