‘சென்னை ஏ’, ‘ரெயின்போ’ வானொலி சேவைகள் இணைப்பை திரும்பப் பெறுக: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘சென்னை ஏ’ மத்திய அலைவரிசை, பண்பலை வரிசையான ‘ரெயின்போ’ ஆகியவற்றின் சேவைகள் இணைப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை வானொலி நிலையத்தின் முதன்மை அலைவரிசையான சென்னை ஏ மத்திய அலைவரிசை, பண்பலை வரிசையான ரெயின்போ ஆகியவற்றின் சேவைகள் இன்று காலை முதல் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, இரு அலைவரிசைகளின் நிகழ்ச்சிகள் முறையே 50% குறைக்கப்பட்டுள்ளன. இப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காக கடந்த சில ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்த நிலையில், அதையும் மீறி சென்னை வானொலி சேவைகளை பிரசார்பாரதி இணைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

சென்னை-ஏ என்றழைக்கப்படும் சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை 720 கிலோ ஹெர்ட்ஸ் மத்திய அலையில் ஒலிபரப்பாகி வருகிறது. விவசாயம், குடும்பநலம், இசை நிகழ்ச்சிகள், நாடகம், கிராமப்புற இசை, செய்திகள், திரை இசை, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான நிகழ்ச்சிகள் என பலவகை நிகழ்ச்சிகள் இந்த அலைவரிசையில் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

அதேபோல், சென்னை ரெயின்போ வானொலி 101.4 மெகா ஹெர்ட்ஸ் பண்பலையில் ஒலிபரப்பட்டு வருகிறது. இதில் சுவையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பட்டு வருகின்றன. இரு வானொலி சேவைகளும் இன்று காலை 5.48 மணி முதல் இணைக்கப்பட்டு ஆகாசவாணி ஒருங்கிணைந்த சேவை என்ற பெயரில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்படுகின்றன. இரவு 11.10 மணி வரை இந்த நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும்.

சென்னை வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி தயாரிப்புச் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இணைப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக சென்னை ஏ அலைவரிசையிலும், ரெயின்போ பண்பலையிலும் ஒரே நேரத்தில் ஒரே நிகழ்ச்சிகளைக் கேட்க முடியும்.

மேலோட்டமாக பார்க்கும் போது இது நல்லது தானே என்று நினைக்கத் தோன்றும். ஆனால், உண்மை அதுவல்ல. இரு வானொலிகளின் சேவை இணைப்பு என்ற பெயரில் இரு சேவைகளின் நிகழ்ச்சிகளும் சராசரியாக 50% ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த நிகழ்ச்சிகளின் தயாரிப்புக்கு ஆகும் செலவை சேமிப்பது தான் திட்டம் ஆகும். அடுத்த சில மாதங்களில் சென்னை ஏ அலைவரிசையை மூடி, ஒலிபரப்பு செலவையும் குறைக்க பிரசார் பாரதி அமைப்பு திட்டமிட்டுள்ளது.

பிரசார்பாரதியின் இந்த முடிவு மூன்று தரப்பினரை கடுமையாக பாதிக்கும். பெரும்பான்மையான நிகழ்ச்சிகள், குறிப்பாக ரெயின்போ அலைவரிசையில் ஒலிபரப்பாகும் நேயர்களின் பங்களிப்புடன் கூடிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் போது நேயர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த நிகழ்ச்சிகளை தயாரிக்கும் பணியில் இருந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், அறிவிப்பாளர்கள் உள்ளிட்டோர் தங்களின் வேலையை இழப்பார்கள். அடுத்தக்கட்டமாக சென்னை ஏ ஒலிபரப்பு நிறுத்தப்படும் போது, அதற்கான டிரான்ஸ்மிட்டர்கள் கைவிடப்பட்டு, அவற்றை பராமரித்து வந்த பொறியாளர்கள் பணிநீக்கப்படுவார்கள்.

சென்னை ஏ வானொலியை மூட கடந்த பல ஆண்டுகளாகவே பிரசார்பாரதி திட்டமிட்டு வந்தது. 2022-ஆம் ஆண்டு ஜனவரி 31ம் நாளுடன் சென்னை ஏ மூடப்பட இருந்தது. பாமகவின் எதிர்ப்பால் அப்போது அந்த முடிவு கைவிடப்பட்டது. கொல்கத்தா வானொலியின் முதன்மை அலைவரிசை ஜூன் 30ம் நாளுடன் மூடப்பட்ட போதும், சென்னை வானொலிக்கு அத்தகைய நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்று பாமக எச்சரித்தது. ஆனால், தமிழக மக்களின் உணர்வுகளை சற்றும் புரிந்து கொள்ளாமல் சென்னை வானொலியின் இரு சேவைகளை பிரசார்பாரதி இணைத்திருப்பது பெரும் தவறு ஆகும்.

சென்னை -ஏ என்றழைக்கப்படும் சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை ஒலிபரப்பு நிறுத்தப்பட்டால், அது சென்னை வானொலி நிலைய நேயர்களுக்கு பேரிழப்பாக அமைந்து விடும். தனித்துவமான அதன் நிகழ்ச்சிகளைக் கேட்பதற்காக லட்சக்கணக்கான நேயர்கள் உள்ளனர். தமிழ்ப் பண்பாடு, கலைகள் ஆகியவற்றின் தூதராகவும் இந்த அலைவரிசை திகழ்கிறது.

இதுவரை 300 கி.மீ சுற்றளவில் கேட்கப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சிகளை ரெயின்போ பண்பலையில் ஒலிபரப்பும் போது, அதிகபட்சமாக 50 கி.மீ சுற்றளவில் உள்ளவர்கள் மட்டும் தான் கேட்க முடியும். இதனால் சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கமே சிதைந்து விடும். சென்னை வானொலியின் நூற்றாண்டு விழா வரும் ஜூலை 31ம் நாள் தொடங்கவுள்ள நிலையில், பிரசார்பாரதியின் இந்த முடிவு தமிழர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

வானொலிகள் தான் தொலைதூரத்திலும், பிற பொழுதுபோக்கு சேவைகள் சென்றடைய முடியாத இடத்திலும் வாழும் மக்களுக்கு ஒரே பொழுதுபோக்கு கருவி ஆகும். அதன் நிகழ்ச்சிகள் மக்களின் வாழ்விலும், உழவர்களின் தொழிலிலும் பின்னிப்பிணைந்தவை. செலவு குறைப்பு என்ற பெயரில் அவற்றை அடித்தட்டு மக்களிடமிருந்து பறித்து விடக்கூடாது. எனவே, சென்னை ஏ மத்திய அலைவரிசை, பண்பலை வரிசையான ரெயின்போ ஆகியவற்றின் சேவைகள் இணைப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்