தனிப்பயிற்சி ஆதிக்கம் | “மருத்துவக் கல்வியை வணிகமாக்கியதில் ‘நீட் தேர்வு’க்கு முழு வெற்றி” - அன்புமணி

By செய்திப்பிரிவு

சென்னை: மருத்துவக் கல்வியை வணிகமாக்கியதில், நீட் தேர்வு முழு வெற்றி பெற்றுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சமூக நீதியைக் காப்பதிலும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதிலும் மத்திய அரசுக்கு அக்கறை இருந்தால், நீட் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவப் படிப்பை ஏழைகளுக்கு எட்டாக்கனியாக்குவது, மருத்துவக் கல்வியை வணிகமயமாக்குவது ஆகியவற்றில் நீட் தேர்வு முழு வெற்றி பெற்றிருக்கிறது என்பது தமிழக அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீட் தேர்வுக்கான நோக்கம் தோற்கடிக்கப்பட்டு விட்ட நிலையில், அத்தேர்வை தொடருவது பெரும் சமூக அநீதியாகவே அமையும்.

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான கலந்தாய்வு அடுத்த வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. மருத்துவக் கல்வி என்பது ஏழைகளுக்கானது அல்ல என்பதை தரவரிசை சார்ந்த புள்ளிவிவரங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்பதற்காக தகுதி பெற்றுள்ள 28,849 பேரில் வெறும் 31 விழுக்காட்டினர், அதாவது 9056 பேர் மட்டும்தான் முதல் முயற்சியில் வெற்றி பெற்றவர்கள் ஆவர். மீதமுள்ள 19,793 (69%) இரண்டு அல்லது அதற்கும் கூடுதலான முயற்சியில் வெற்றி பெற்றவர்கள். அதேபோல், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் தகுதி பெற்ற 2993 பேரில் 630 பேர் (21%) மட்டுமே முதல் முயற்சியில் வென்றவர்கள்; மீதமுள்ள 2,363 பேர் (79%) இரண்டு அல்லது கூடுதலான முயற்சிகளில் வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து, அதை எதிர்ப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்து வரும் காரணங்களில் முதன்மையானவை: 1. நீட் தனிப்பயிற்சி கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது, 2. நீட் சமவாய்ப்பை வழங்குவதில்லை, 3. நீட் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தவில்லை, 4. நீட் மருத்துவக் கல்வியை வணிகமயமாக்குகிறது என்பன தான். பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த நான்கு குற்றச்சாட்டுகளுமே உண்மை என்பதை தமிழகத்தில் நீட் குறித்த புள்ளிவிவரங்கள் உறுதி செய்துள்ளன.

எந்த ஒரு போட்டித் தேர்வும் / தகுதித் தேர்வும் சமவாய்ப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். நீட் தேர்வு அத்தகைய சமவாய்ப்பை வழங்குவதில்லை. நீட் தேர்வை தனியார் மையங்களில் தனிப்பயிற்சி பெறாமல் எதிர்கொள்ள முடியாது என்பது சமவாய்ப்பை பறிக்கும் முதல் காரணி ஆகும். ஆனால், ஒரு முறையல்ல... இரண்டு அல்லது அதற்கும் கூடுதலான முறை பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதினால் தான் மருத்துவப் படிப்புக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டிருப்பதை என்னவென்று சொல்வது? ஒரு முறை நீட் பயிற்சி பெறுவதற்கே வாய்ப்பும், வசதியும் இல்லாத ஏழை மக்களால் இரண்டு அல்லது அதற்கும் கூடுதலான முறை எவ்வாறு பயிற்சி பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேர முடியும்? இத்தகைய அப்பட்டமான சமூக அநீதி தொடர வேண்டுமா?

இந்த சமூக அநீதியிலிருந்து அரசு பள்ளி மாணவர்களைக் காக்க வேண்டும் என்பதற்காகத் தான் மருத்துவப் படிப்புகளில் அவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், அதற்கான தகுதி பெறுவோரிலும் 79 விழுக்காட்டினர் நீட் தேர்வை இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட முறை எழுதியவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் என்பதால், அவர்களால் நீட் பயிற்சி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுடன் போட்டியிடமுடியாது என்பதால் தான் 7.5% இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. ஆனால், அவர்களிலேயே ஒரு பிரிவினர் மீண்டும், மீண்டும் நீட் பயிற்சி பெற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருப்பது சமூகநீதிக்கு பின்னடைவு. ஏழை கிராமப்புற மாணவர்களிடையேயும் சமவாய்ப்பற்ற நிலையை ஏற்படுத்தியதில் நீட் வென்றிருக்கிறது. இது சமூகநீதியில் அக்கறை கொண்டோருக்கு மகிழ்ச்சி தரும் செய்தியல்ல... வேதனையளிக்கும் செய்தி.

12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்ற போதும், மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை உயர்த்திக் கொள்வதுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தேர்வு எழுதும் வழக்கம் இருந்தது. ஆனால், அது சமவாய்ப்புக்கு எதிரானது என்பதால், மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ளும் தேர்வுகள் கடந்த 2006ம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டன. அதன்படி மாநில பாடத்திட்ட மாணவர்கள் முதல் முயற்சியில் எடுத்த மதிப்பெண்கள் மட்டும் தான் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளப்பட்டன. அது தான் சமூகநீதி ஆகும். ஆனால், மீண்டும், மீண்டும் தேர்வு எழுதுவதை ஊக்குவிக்கும் நீட், அதன் மூலம் சமவாய்ப்பை பறிக்கிறது; சமூக நீதியை அழிக்கிறது.

இதேநிலை தொடர்ந்தால், அடுத்த சில ஆண்டுகளில் நீட் தேர்வில் முதல் முயற்சியில் தகுதி பெற்று மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 10%க்கும் கீழே குறைந்து விடும். மருத்துவப் படிப்பை ஐந்து ஆண்டுகள் படிக்க வேண்டும் என்றால், அதற்கு தகுதி பெறுவதற்காக 5 ஆண்டுகளுக்கு திரும்பப் திரும்ப நீட் எழுத வேண்டிய நிலை உருவாகக் கூடும். அப்படி ஒரு நிலை உருவானால், அது தான் மருத்துவக் கல்வியின் அதிவிரைவான சீரழிவின் தொடக்கமாக அமையும். அது தடுக்கப்பட வேண்டும்.

மாணவர்கள் மீண்டும், மீண்டும் தனிப்பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதும் சூழலை உருவாக்கியிருப்பதன் மூலம் மருத்துவக் கல்வியையை வணிகமாக்கும் முயற்சியில் நீட் வெற்றி பெற்றுள்ளது. மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை தடுப்பதுக்காகவும், தரத்தை உயர்த்துவதுக்காகவும் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் ஒரு தேர்வு, அந்த நோக்கங்களுக்கு எதிராக இருப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும் போது, அதை ரத்து செய்வது தானே சமூகநீதியாக இருக்க முடியும்?

எனவே, சமூகநீதியைக் காப்பதிலும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதிலும் மத்திய அரசுக்கு அக்கறை இருந்தால், நீட் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்துகிறது" என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்