கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மின்சார ரயில்கள் தினமும் லேட்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மின்சார ரயில்கள் தினமும் காலதாமதமாக இயக்கப்படுவதாக உங்கள் குரலில் வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இந்து தமிழ் திசை நாளிதழின் உங்கள் குரல் தொலைபேசி சேவையைத் தொடர்பு கொண்டு, பொன்னேரியைச் சேர்ந்த எஸ்.ஹேமச்சந்திரன் என்ற வாசகர் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் ஆகிய இடங்களில் இருந்து வேலை, வியாபாரம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினந்தோறும் சென்னைக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். பொதுமக்களின் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், தினமும் இந்த ரயில் சேவை மிகவும் கால தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. நான் சென்னை பாரிமுனையில் பணிபுரிந்து வருகிறேன். பொன்னேரியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ரயிலில் செல்ல 50 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
ஆனால், தினமும் ஒன்றரை மணி முதல் 2 மணி நேரம் கால தாமதமாக ரயில்கள் செல்கின்றன. இதனால், பணிக்கு குறித்த நேரத்துக்கு செல்ல முடியவில்லை.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்களை நிறுத்த 2 நடைமேடைகள் உள்ளன. எனினும், ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுகின்றன. தற்போது, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 3 ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. இதுவும் ரயில்கள் காலதாமதமாக இயக்குவதற்கு காரணம் என கூறப்படுகிறது. எனவே, இவ்வழித் தடத்தில் 4-வது இருப்புப் பாதை அமைக்க வேண்டும். இவ்வாறு ஹேமச்சந்திரன் கூறினார்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, கும்மிடிப்பூண்டி வழித் தடத்தில் இருப்புப் பாதை எண்ணிக்கை குறைவாக உள்ளது. அந்த பாதையிலேயே புறநகர் மின்சார ரயில்கள், விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், புறநகர் மின்சார ரயில்களை குறித்த நேரத்தில் இயக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், 4-வது ரயில் பாதை அமைக்க ரயில்வே வாரியத்திடம் ஒப்புதல் பெற்ற பிறகு செயல்படுத்தப்படும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE