தினக்கூலி ஊழியர்களுக்கு நிர்ணயித்த ஊதிய தொகையில் முரண்பாடு: செங்கை ஆட்சியர் விளக்கம்

By பெ.ஜேம்ஸ்குமார்


தாம்பரம்: செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு அரசு துறையில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு, ஆட்சியர் நிர்ணயம் செய்த ஊதிய தொகையில் முரண்பாடு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும், அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றி வரும் தினக்கூலி மற்றும் பகுதிநேர ஊழியர்களுக்கு, ஆண்டுதோறும் விலைவாசி உயர்வு மற்றும் திறன் அடிப்படையில் அந்தந்த மாவட்ட ஆட்சியரால் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதன்படி, 2023- 24-ம் ஆண்டுக்கான செங்கல்பட்டு மாவட்ட குறைந்தபட்ச ஊதியத்தை, செயல்முறை ஆணைகள் மூலம் மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்து அறிவித்துள்ளார். இந்த ஊதிய தொகை முரண்பாடு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதன்படி நாளொன்றுக்கு ஓட்டுநர்களுக்கு ரூ.654, டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் மற்றும் கணினி ஆப்ரேட்டர்களுக்கு ரூ.508, வாட்ச்மேன் ரூ.399, தோட்ட வேலையாட்களுக்கு ரூ.347 மற்றும் மஸ்தூர்களுக்கு ரூ.443 வீதம் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மொத்தம் 91 பணிகளுக்கு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை விட மற்ற மாவட்டங்களில் இந்த ஊதியம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முரண்பாடு ஏன் என தொழிலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எ.கோபால்

இதுகுறித்து இடது தொழிற்சங்க மையத்தின் மாநில துணை தலைவர் எ.கோபால் கூறியதாவது: மாவட்ட ஆட்சியரால் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம், மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் மிகவும் குறைவாக உள்ளது. விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு, தினக்கூலியை ஆட்சியர் உயர்த்த வேண்டும். உயர் நீதிமன்றம், பொதுப்பணித் துறை, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு, அதே பணியைச் செய்யும் நிரந்தர ஊழியர்களைப் போல ஊதியம் நிர்ணயம் செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை அதிகாரிகள் பின்பற்றவில்லை. இவ்வாறு கூறினார்.

ஆ.ர.ராகுல் நாத்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத்திடம் கேட்டபோது அவர் அளித்த விளக்கம் வருமாறு: காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டது. ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் என்ன நடைமுறை இருந்ததோ, அதே நடைமுறையை தற்போது நாங்கள் கடைபிடித்து வருகிறோம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு என்ன ஊதியம் நிர்ணயிக்கப்பட்டதோ, அதையே செங்கல்பட்டு மாவட்டத்துக்கும் வழங்கி வருகிறோம்.

தற்போது மற்ற மாவட்டங்களில் ஊதிய தொகை அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும். ஊதியம் நிர்ணயிக்கவும், ஆண்டுக்கு ஒரு முறை ஊதியத்தை உயர்த்துவதற்கும் கமிட்டி அமைத்து பணிகளை மேற்கொள்கிறோம். தன்னிச்சையாக எதையும் செய்யவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE